இதுவும் ஓர் இதமான காதல்
அரவம் நிறைந்த வனமொன்றில்
தனிமை சூழ்ந்த பொழுதொன்று
பதை பதைத்து மிரளுகையில்
பரிதாபமாய் பார்த்தது கருடன் ஒன்று .
பாசத்தோடு அருகில் வந்து
பேசிநின்றது ஏக்கத்தோடு.
துணையாய் உனக்கு நான் வந்து
துன்பம் தீர்க்கும் நாள் இன்று
விலையாய் வேண்டும் நீ என்று
வேண்டிக்கொண்டது காதல்தனை .
உயிரா உள்ளமா என்றபோது
உயிரே என்றது உள்மனது
காதல் கிடைத்த கருடனது
காவலனாய் மாறிய தருணமது .
கருட அரவ மோதலிலே வெற்றி என்றும் கருடருக்கே .
காதலி கைபிடித்து காதலனாய்
கருடனவன் நாடுவந்தான் .
கன்னிக்கு கணவன்
கருடனா....?
காறி உமிழ்ந்தனர் கண்ணில்பட்டோர்
குரங்கு கையில் பூமாலையாம்
குசுகுசுத்தார் இன்னும் சிலர் .
கருடன் தன் நிலை உணர்ந்து
இன்னுயிர் துறக்க முடிவெடுத்தான்
அரவம் நிறைந்த வனம் சென்று
அதற்கே உயிரை தானம் செய்தான் .
கண்ணாளா எங்கே சென்றாய்
கதறிவிட்டாள்
கண்ணீர் வழிந்திட துடித்துவிட்டாள்
கண்டது கனவென அறிந்தவுடன்
கன்னி தனக்குள் சிரித்துக்கொண்டாள் .!!