எது ஹைக்கூ
'ஹைக்கூ' ஒரு அனுபவம். நேரடியான அனுபவம்.
அதில் உருவகங்கள் கிடையாது என்று திரும்பத் திரும்ப சொல்ல விரும்புகிறேன். 'No Metaphors please'.
இயற்கை விஷயங்களுக்கு மனித குணங்களான தனிமை, புலம்பல், விளையாட்டு, பயணக் களைப்பு, முத்தமிடுதல் போன்றவைகளை ஏற்றிச் செல்லுதல் என் அபிப்ராயத்தில் ஹைக்கூ இல்லை.
சில உதாரணங்கள்:
"மின் விளக்குகளை அணையுங்கள்
மௌனமாய் இரசிக்கலாம்
நிலா நிழல்"
என்பதை
"மின் விளக்குகளை அணைத்தபின்
நிலா நிழல்"
என்றால் என் எளிய புத்திக்கு ஹைக்கூ ஆகிறது. காரணம் 'மௌனமாய் இரசிக்லாம்' என்பது கவிதையின் நேரடி அனுபவத்துடன் குறுக்கிடுகிறது.
அதே காரணத்தில்
"குளம்
முகம் பார்க்கும் நிலா
குளிக்காமல் திரும்பினேன்"
என்கிற அருமையான கவிதை
"குளத்தில் நிலா
குளிக்காமல் திரும்பினேன்"
என்றால் நிலவுக்கு முகம் பார்க்கும் மனித குணம் அளிப்பைத் திருத்தி ஹைக்கூ ஆகிறது.
"தலைமுறை கோபம்
அடிவிழ அடிவிழ
அதிரும் பறை"
என்பது வலுவான சமூகச் சாடல். ஆனால் ஹைக்கூ அல்ல.
இந்தத் தொகுதியில் உள்ள ஹைக்கூக்களில் ஒன்று
"கடிக்கும் கொசு
தாயை எழுப்பும்
சின்னக் கொலுசு"
இந்தக் கவிதையில் அனுபவம் நேரடியானது. அந்தக் கொலுசு சப்தம் நமக்கு கேட்கிறது. ஃபேன் இல்லாது தூங்கும் பெண் குழந்தை. எப்போதும் லேசான தூக்கத்தில் இருக்கும் தாய். அனைவரும் தெரிகிறார்கள். மித்ராவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
* * *
Source: கணையாழியின் கடைசி பக்கங்கள்,செப்டம்பர், 1993 - சுஜாதா.
கவிதை மேற்கோள் 'குடையில் கேட்ட பேச்சு' மித்ராவின் கவிதைத் தொகுப்பிலிருந்து.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
