பாம்பு ஏணி ஆட்டம்

இன்றைய மாணவர்களின் பருவம்
பாம்பு ஏணி ஆட்டம்.
ஏணிகளும்,பாம்புகளும்
ஆசிரியர்கள்.
கையில் கொடுக்கப்பட்டிருக்கும்
தாயக்கட்டை நமது கல்விமுறை
பந்தயம் நமது கல்விக்கட்டணம்.
ஒவ்வொரு முறை
விளையாடும் போதும்
சில ஏணிகள் ஏற்றிவிடும்,
பல பாம்புகள் இறக்கிவிடும்.
ஏணிகள் ஏற்றவும் செய்கின்றன,
இறக்கவும் செய்கின்றன.
ஆனால் பாம்புகளுக்கு
கொத்துவது மட்டுமே
வாடிக்கை.
தாயக்கட்டையை மாற்றமுடியுமா
என்றால் பகடையாக மாற்றமுடியும்
ஆனால் விளையாட்டு முறையை?
விளையாட்டில்
பொறுமை அவசியம்.
பொறுமை இழந்தவன்
விளையாடும் தாளைக் கிழித்தான்
பாம்பு கிழியவில்லை
அவன் ஆட்டம் கிழிந்தது.
ஆட்டத்தில் ஏணி கிடைப்பதும்
பாம்பு கிடைப்பதும்
விளையாடுபவன்
கையில் இல்லை
விளையாட்டை உருவாக்கியவர்கள்
கையில் இருக்கிறது.
அன்று நிறைய ஏணி இருந்தது,
பழைய ஆட்டத்தில் .
இன்று நிறைய பாம்பு இருக்கிறது,
புதிய ஆட்டத்தில்.
விளையாடுபவர்கள் மாறவில்லை
அன்றும் ,இன்றும்.
விளையாடும் முறையும் மாறவில்லை.
விளையாட்டில் இருப்பவர்களும்,
விளையாட்டை உருவாக்குபவர்களும்
மாறியிருக்கிறார்கள் !