சிலைகளே உயிர்த்தெழுங்கள்

இறந்தும்
பிறந்தநாள்
கொண்டாடும் தலைவர்களே.!

உங்கள் ஜனன மரண
நாட்களை மட்டுமே
நினைவில்கொண்டது
இந்த சமூகம்

இங்கே உங்கள்
நிழற்படங்கள் கைதட்டுபெறும்
நிஜக்கொள்கைகள் கைவிடப்படும்

இடங்களின் அடையாளமே
சாலையில் உங்கள் சிலைகள்

சாலை விதிமீறலும்
விபத்தும் கையூட்டும் களவுமே
உங்கள் சிலைகளுக்கான
தினசரி காட்சிகள்

தினம் பறவைஇனம் ஒன்றே
உங்களை பார்த்துச்செல்லும்

இங்கே உங்களைபோல்
உங்கள் கொள்கைகளும்
சிலையே

காந்தி
தெருவிலே மதுக்கடை
பாரதி
தெருவில் சாதிசங்க கட்டிடம்
பெரியார்
தெருவில் ஜோதிடநிலையம்

எத்தனை ஒற்றுமைகள்.!

இன்றும் இனியும்
எங்கள் மழலைகள்
உங்களை அறியார்
உம்மை நீயே
சுயஅறிமுகம்
செய்துகொள்ளும் வரை.!

உங்கள் நாமம் சொல்லி
பிறர் நெற்றியில்
நாமம் போட்டோர் பலர்

உங்கள் நாமம்
சொல்லி வேலையற்றோர்
என நாமம் வாங்கியோர் பலர்

இன்று சிலைகலென்று
சிரிப்போர் சிந்திப்போராவர்
சிலைகள் உயிர்த்தெழுந்தால்.!

சிலைகளே உயிர்த்தெழுங்கள்...

எழுதியவர் : பார்த்திப மணி (21-Jun-15, 11:41 pm)
பார்வை : 88

மேலே