கடவுள் எடுத்த பிச்சை -சந்தோஷ்

அந்த மும்பை
இரயிலில்
எல்லாரும் யாசகமிட்டு
வணங்கினார்கள்
அந்த மானிடப்பிறவியை..!


நானொன்றும்
பிச்சைப்போடவில்லை.
வணங்கவும் இல்லை.
மனமும் இல்லை.

ஏளனப்பார்வை வீசிய
பயணிகளின் விழியில்
நான் அற்பமாகிவிட்டேன்.

ம்ம்ம்....



பக்தனைத் தேடிவந்து
வாங்கப்படும்
காணிக்கைக்கு
ஆசிர்வாதம் செய்யும்
கடவுளர்களாம்
திருநங்கையர்கள்.

அய்யயோ கடவுள்
பிச்சை எடுக்கிறதே....??
என கேட்கத்துணிந்தேன்

ஓ பக்தர்களே
உங்கள் கடவுளர்களுக்கு
இராத்திரி இருட்டில்
காம இச்சையர்களால்
நிகழ்த்தப்படுவது
நிர்வாணப்பூசையோ..?
எனவும் பகடிச்செய்ய
விழைந்தேன்.

ஓ மானிடர்களே
உங்களுக்கு கடவுள்
மூன்றாம் பாலினமோ..?
எனவும் நியாயம்
மொழிய முனைந்தேன்..

அந்த படத்தில்
உங்கள் கடவுளரை
இழிவுப்படுத்தினார்களே..
சம்மதமா... ?

உங்கள் இல்லத்தில்
ஓர் இடம் கேட்டால்
கடவுளென்று ஏற்பீர்களா
தெய்வீகமா?

எல்லாம் கேட்கத்துணிந்தேன்
என்னை நாத்திகன் என்றும்
சொல்லக்கூடும்
என்னை பகுத்தறிவாளன் எனவும்
உயர்த்தக்கூடும்.


என்ன செய்ய......?
எனக்கு இந்தி தெரியாதே...!!



-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார் (23-Jun-15, 6:49 pm)
பார்வை : 137

மேலே