கடவுள்

துயரம் வழியும்
அந்தத் தெருவின் வழியாக
நடந்து கொண்டிருக்கிறேன்..

மெல்ல விசும்பிக்கொண்டே
மோர் விற்றுக்கொண்டு போகும்
யுவதியின் பின்னால்
எலும்பும் தோலுமெனச் செல்லும்
நாயின் கண்களிலிருந்து வழியும்
சோகம்
அத்தெருவில் நடப்போரின்
கால்களையெல்லாம் கவ்விப்பிடித்திழுக்கிறது..

திறக்கப்படாத வீட்டிற்குள்
பசி மிகுதியில்
பாத்திரங்களை உருட்டுவிட்டு
ஏதும் கிடைக்காத விரக்தியில்
வெளியேறுகின்றன எலிகள்..

வாடிக்கையாளர்கள் கிடைக்காது
அழும் வேசிகளின் வேதனைதாளாது
தன் குறியறுத்தெறிகிறான்
காமன்..

உணவொன்று கிடைத்த சந்தோஷத்தில்
ஓடிவந்த வெள்ளைப்பூனை
அதைத் தூக்கிச்செல்லும் முயற்சியில்
அதன் கனம் தாங்காது உயிர்விடுகிறது..

பால்வராத மார்பில்
பசிக்கு விடைதேடிய பிஞ்சுவாய்கள்
பெருங்குரலெடுத்து
காலத்தைச் சபிக்கின்றன..

உடைந்த சுவர்களுக்குள்ளிருந்து
அகதிகளென வெளியேறும் எறும்புகள்
அடுத்த வாழிடமாய்
மயானத்தைத் தேரந்தெடுத்து நகர்கின்றன..

தெருமுனைக்கு வருகையில்
முகம் காட்டாத
மெல்லிய சிரிப்பொலி கேட்கிறது
அதன்மீது எல்லாத்துயரையும்
இறக்கிவைத்துவிட்டு
வேகமாய் ஓடத்துவங்குகிறேன்..

எனக்கு முன்னால்
ஓடிக்கொண்டிருக்கிறார் கடவுள்..

-சௌவி

எழுதியவர் : (24-Jun-15, 10:34 am)
சேர்த்தது : சௌவி
Tanglish : kadavul
பார்வை : 61

மேலே