பிரதி எடுக்க முடியா பிம்பங்கள்

முதன் முதலில் என்னை நான்
புகைப் படம் எடுத்துக் கொண்ட போதுதான்
புறப்பட்டு வெளியே வந்தான்
எனக்குள் இருந்து அவன்...

என் புகைப் படத்தை பார்த்து விட்டு
உண்மையானது இதுதான் என்றான்...

ஏ கோமாளியே !
நான்தான் உண்மை...
இது வெறும் பொய்,
இது வெறும் நகல்,
இது வெறும் பிம்பம்,
இது வெறும் காகிதம்
மொத்தத்தில்
இது வெறும் என்னுடைய பிரதி
அவ்வளவுதான் என்றேன்...

அவன் மெதுவாக சிரித்து விட்டு
மீண்டும் என் புகைப் படத்தைப் பார்த்து
மேலே சொன்னான்...

இந்த பார்வையில்
எந்த கள்ளத்தனமும் இல்லை
உன் பார்வையை போல...

இனி எப்போதும்
இந்த முகத்தில் எந்த சலனமும்
வர போவதில்லை...

எந்த சோகமும் இதை
தாக்க போவதுமில்லை

யாருக்காகவும் எதற்காகவும்
அழப் போவதுமில்லை

உள்ளொன்று வைத்து
வெளியொன்று பேசும் இரண்டு முகம்
இதற்கு இல்லை

வருத்தத்தில் கலங்கி கவிழ்ந்து
மகிழ்ச்சியில் சிரித்து நிமிர்ந்து
இரட்டை வேடம் போடும் குணம்
இதனிடம் இருக்க போவது இல்லை..

இந்த படத்தில் தலை இருந்தாலும்
தலைக்கனம் இருப்பதில்லை
தலைக்குனிவும் வரப்போவதில்லை...

முக்கியமாக இது
உன்னை போல நடிப்பதுமில்லை...

இதற்கு வாழ்நாள் என்பது
கூடுவதுமில்லை குறைவதுமில்லை...

கூடுதல் தகவல் உனக்கு...
இதற்கு மரணம் என்பதே இல்லை
என்றான்...

இதை இப்போதே கிழித்து
இது வெறும் பொய்
இது வெறும் நகல் என்று என்னால்
நிரூபிக்க முடியுமென்றேன் கோவமாக...

உனது அனுமதி சீட்டில் ஒட்டியிருக்கும்
இந்த புகைப்படம் மாதிரி
நீ இல்லை என்றால்
உன்னையே விரட்டி விடுவார்கள்...
இப்போது சொல்
எது பொய் ? எது உண்மை?
என்றான் அவன் நிதானமாக...

********************* ஜின்னா *********************

அவன் இன்னும் சொல்வான்... (தொடரும்...)

எழுதியவர் : ஜின்னா (25-Jun-15, 1:33 am)
பார்வை : 250

மேலே