25-06-2015 கவிஞனும் கற்பனைத் திறனும்01

25-06-2015
கவிஞனும் கற்பனைத் திறனும்

கற்பனை, இலக்கியங்களில் பின்னணியாக நிற்கக் கூடியது.அது தனித்த வருணனையாக, இணந்த உவமையாக, பொருந்திய உருவகமாக, ஆழ்ந்த உள்ளுறையாக, குறியீட்டுப் படிமமமாக வரலாம். கற்பனை இயல்பானதாயினும், அதனை ஒரு கவிஞன்/கலைஞன் படைக்கும்பொழுது, இருப்பதை அவ்வாறே படைத்துத் தருவதில்லை. நாம் பார்க்கும் இயற்கையும் அந்தப் படைப்பாளி தரும்/ காட்டும் இயற்கையும் வேறுபடுவனவாக அமையும்.
உள்ளதை உள்ளவாறே தராமல் அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தும், வேறுபட்டனவற்றை இணைத்தும், இயல்பானவற்றை, அடைகளாலும், தொடர்களாலும் அழகுபடுத்தியும், அழகுக்கு அழகு செய்தும், இயல்பான இயற்கையை கவினுறும்படி அமைத்துத் தரும்பொழுதுதான் ஒரு கலைஞனின் படைப்புத் திறன் செழுமையாக வெளிப்படுகின்றது எனலாம். அதனையே அவனுடைய கற்பனைத்திறமாக நாம் காணுகின்றோம், அனுபவிக்கின்றோம்.
இயற்கையின் இயல்பான தன்மைகளை எடுத்து இயம்பும்போது கூடத் தன் இதயக் கருத்துக்களைச் சொல்ல விழையும் கம்பனின் கோசல நாட்டு வருணனைப் பாடல் ஒன்றின் மூலம் அடிப்படை அமைப்பிலேயே ஒருவகைக் கற்பனை ஆற்றல் இணைகின்றதை உற்று நோக்குவோம்:
நீர்வளம் மிகுந்த நாடு கோசலம். தாமரைப் பொய்கைகளும், மருத நிலவளத்தைக் காட்டும் எருமைகளுக்கும், தேரைகளின் ஒலிக்கும் குறைவில்லாத நாடு கோசலம். இங்கு கவிஞன் இணைந்து வாழும் உயிரினங்களைக் காணுகிறான். பகையற்று அவை வாழ்வதை எண்ணுகின்றான்; உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்று நினைத்துப் பார்க்கிறான். அதைப் படிப்பவரும் உணரவேண்டுமென்று நினைக்கின்றான். அதற்கு என்ன செய்கிறான்.
பொய்கையில் இறங்கி எருமை நீரைக் கலக்கி மகிழ்வது நாம் தும் காணமுடிந்த காட்சிதான். பொய்கையில் தவளைகள் கத்துவதும் இயல்பானதே! வாத்துக்களின் மூதாதையர்களாகிய அன்னம் நாம் இலக்கியத்தில் மட்டுமே படிக்கின்ற ஒரு பறவை. இவற்றை வைத்து ஓவியக் காடிசியாக அல்லாமல், இயங்கு காட்சியாக அமைத்துக் காட்டுவதில் கம்பனின் கற்பனைத் திறம் சிறக்கின்றது.
சேல் உண்ட ஒண் கணாரின்
திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி,
வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி
கன்றுஉள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சைத்
தேரை தாலாட்டும் - பண்ணை......(44)
என்பது கம்பன் காட்டும் ஒரு பண்ணைக் காட்சி. அதாவது

வயல்களில் மீன் போன்ற கண்களை உடைய பெண்களைப் போலத் திரிகின்ற சிவந்த கால்களை உடைய அன்னங்கள், பெருமையுடைய தாமரை மலர்களாகிய படுக்கையில் கிடத்திய இளங்குஞ்சுகள், காலில் ஒட்டிய சேறுடைய எருமைகள், (ஊரகத்து உள்ள) தம் கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால்,தானே சொரியும் பாலை அருந்தி, உறங்கப் பச்சை நிறத் தேரைகள் தம் ஒலியால் தாலாட்டுப் பாடும்...என்பதே அது.

இக்காட்சியில் வருவன அனைத்தும் இயற்கைப் பொருட்களே! வானில் பறக்கும் பறவை ஓரினம்;நிலத்தில் வாழும் விலங்கினமான எருமை ஓரினம்; நீரிலும் நிலத்திலும் வழும் தேரை ஓரினம்; இவற்றைத் தேர்ந்து இணைப்பதில்தான் கம்பனின் கற்பனைத் திறன் காணக் கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல்,விலங்கினம் பறவையினத்திற்குப் பாலூட்ட,இடைப்பட்ட தேரை தாலாட்ட மூவினங்களின் ஒருங்கிணைப்பு மூலம் எல்லா உயிரினங்களும் இணைதல் வேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்துவதாக அமைந்து கம்பனின் கற்பனையின் சிறப்பு தென்படுகின்றதல்லவா?
இது 'கவிஞனும் கற்பனைத் திறனும்' என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று கூறலாம்தானே!(தொடரலாம்....)

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (25-Jun-15, 11:57 am)
பார்வை : 307

சிறந்த கட்டுரைகள்

மேலே