தேடல்
உப்புக்காற்று முகத்தில் வீச, அலை மோதும் கற்றை கூந்தலுடன், கையிலிரண்டும் இடுப்பில் ஒன்றுமென காலி குடங்களுடன் போரடியபடி அடுப்பங்கரையிலிருந்து வந்த தங்கம் என்கிற தங்கப்பூ தன் மகனை எட்டிப்பார்த்தாள். வழக்கம் போல இலவசம் அவனை முடமாக்கிவிட்டிருந்தது.
எப்படியும் அந்த ஆளு இங்கே இருக்கப்போறதில்லை என்ற எண்ணத்துடன் அடுத்த அறையை நோட்டம் விடாமல், தன்னுடைய மூன்று பச்சை வண்ண ரப்பர் குடங்களும் தன்னை விட்டு சிறிதேனும் விலகிவிடாமல் அரவணைத்தப்படி வீட்டை விட்டு குழாயடிக்குச் சென்றாள்.
குளமென குழாயைச் சுற்றிக் கட்டியிருந்த நீரில் படர்ந்திருந்த பாசியையும் மீறி அவளுடைய முகம் நிழலாடியது. பச்சை வண்ணத்தை முன்பெல்லம் அவளுக்கு அதிகமாகவே பிடித்திருந்தது. செடிகளையும், கொடிகளையும், உயர்ந்து வளர்ந்த மரங்களையும் போல. எதிலும் பசுமையும் வளமையும் தான்! ஆனால் இப்போதுதான்... ஏதோ ஒரு நெருடல். பச்சை பாசியின் கலர் அதனாலதான் என் வாழ்க்கையும் பாசிபிடிச்சு போயிடுச்சு. தங்கத்தையே பாசிபிடிக்குமா என்ன? என ஒரு மனசு சமதானப்படுத்தினாலும் நம்ம மேல தான் எல்லா தப்பும் என்றது இன்னோர் மனசு.
ம்ம்ம்ம்...முதலிலே திருத்தியிருக்கணும். இப்ப சங்கரா! சங்கரா! என்றால் என்ன நடக்கப்போது என்று நினைத்தபடி தனது குடத்தை எடுத்து இடுப்பில் வைத்தாள். கால்களிலும், புடவையிலும் கட்டியிருந்த குளத்தின் தண்ணீர்படாமல் தாண்டி நகர்ந்தாள். குளம் இப்போது கொஞ்சம் கலங்கியிருந்தது.
ஒவ்வொன்றாய் இரண்டு குடங்களையும் கடத்திய பிறகு, மூன்றாவது குடம் பாதி நிரம்பிக்கொண்டிருக்கும்போது, எதிர்பட்ட பக்கத்துவீட்டு அன்னத்தைப் பார்த்து சினேகப்புன்னகை ஒன்றைத் தவழ விட்டாள். உள்ளுக்குள் பொறமையாகத்தான் இருந்தது. முதல்முறையாக அவ வீட்டுக்காரர் குடிச்சது தெரிஞ்சப்போ ஒயின் ஷாப்புக்கே போய் அடிச்சு இழுத்து வந்தவ. இன்னிக்கு வரைக்கும் அதுக்கப்புறம் அப்படி நடக்கவே இல்ல.
இன்னொரு கதை வேறமாதிரி இருக்கும். பக்கத்தூர் கஸ்தூரி அக்கா இதே மாதிரி குடிச்சிட்டு வந்த தன் வீட்டுக்காரர்ட்ட ஒரு நாள் பேசவேயில்லையாம். அந்த ஆளு ரொம்ப பாசமான மனுசன். இனிமேல் குடிக்கவே மாட்டேன்னு சத்தியம் பண்ணினதா ஊரே பேசிக்கிட்டு.
எனக்குத் தான் ஒரு துப்பும் இல்ல! அன்பால திருத்தவும்; அடிச்சுத் திருத்தவும். இது குடிச்சுட்டு வந்தா கூட பரவாயில்லையே ஏன அங்கலாய்தாள் மனதுக்குள். நிறைந்திருந்த குடத்தை எடுக்கும் போது விட்ட பெருமூச்சு குளதில் அலைகளை உண்டாக்கியது. கட்டியிருந்த தண்ணீர் இப்போது அதிகமாகியிருந்ததுடன் பாசியின் வண்ணம் தெரியாமல் கருப்பாக மாறியிருந்தது. ஆரம்பித்துவிட்ட அலை இன்னும் அதிகமாகி இருந்தது.
மெல்ல வீட்டிற்குள் நுழையும் போது பையன் இன்னும் மீளவில்லை அந்த டி.வி பெட்டியிலிருந்து. ஓயாமல் அதனோடே ஒட்டிகிட்டு இருக்கிறதால கண்ணும் சுருங்கி போச்சு அவனும் ஈக்குக்குச்சியாட்டம் இருக்கிறான். சொன்னா என்ன கேக்கவா போறான். ஏப்படியும் கொடுக்கிறத மறுக்காம தின்னுருவான். நல்ல பையன். இன்னிக்கி காலைக்கு பழையத கொடுக்க வேண்டியது தான் என்று நினைத்தவளுக்கு இன்று பசியில்லை. கலங்கிய மனதில் தெளிவான உணர்ச்சிகளுக்கு இடமேது?
தம்பி போய் குளிச்சிட்டுவாய்யா என்றாள். அவனும் மறுபேச்சுப்பேசாமல் டி.வியை ஆப் செய்துவிட்டு குளிக்க எழுந்தான். பிடிக்காத நாடகம் ஏதும் ஓடிச்சு போல. வெள்ளை நிற சட்டையும்,கருப்பு நிற டிராயரையும் எடுத்துக்கொண்டான். ரொம்ப பழையது காலை சோற்றை போல. மதியத்துக்கு மீன் பாக்கவா? என்றாள். கருவாடு வை என்றான் மகன். மதியச்சோத்துக்குக் கேக்குற மாதிரி துணியைப்பத்தியோ, தங்கச் சங்கிலியைப் பத்தியோ அவளால் அவனிடம் கேட்கமுடிந்ததில்லை.
வீட்டுல ஆம்பிள ஒழுங்கா இருந்தா இப்பிடி நிலம ஆயிருக்குமா? எப்படித்தான் இத பழகினாரோ? கடலுக்குத் தான போறார் கடலுக்குத் தான போறார்ன்னு சும்மா விட்டது தப்பாப் போச்சு. தாமதமாகத் தவறை உணர்ந்தாள்.
ஒரு கல்யாணம் காட்சிக்குப் போக முடியல. சுருக்கமா, வெளியில தல காட்ட முடியல. யாரவது கேட்டா கடல்ல வேல பாக்குறார்னு சொல்லிச் சமாளிக்க வேண்டியிருக்கு. அழுத்தமா இன்னும் கேட்டா என்ன சொல்ல? சில ஜென்மங்கள் அதயும் தெளிவாக் கேக்கும். போறதெல்லாம் என் மானம் தான். ஒரு பெரிய பெருமூச்சுக்கப்புறம் கன்னம் ஈரமாவதை உண்ர்ந்தாள். மதியத்துக்கு அடுப்பு மூட்ட தயாரானாள். ஒருவித பாரத்துடன் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, குழாயின் வாயில் ஒரு ரெட்டைவால் குருவி தனது அலகினால் தண்ணீரைத் தேடியது கீழே கட்டியிருக்கும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல்.
குளித்துமுடித்திருந்த பையன் கருப்பு-வெள்ளையில் வராமல், மஞ்சள் பச்சையாக வந்திருந்தான். சுமாரான துணிதான். விலை கம்மியாகத்தான் இருக்கும். அவன் அப்பா வாங்கி வந்திருப்பார். அவனும் அதை உடனே உடுத்தியிருக்கிறான். அவர் பியூனாக வேலை பார்த்தபோது இதை விட சுமாரான துணி வாங்கி வந்தாலும் அவளுக்குப் பிடித்தே இருந்தது. ஆனால் இப்போது பாசியின் பச்சையும் தங்கத்தின் மஞ்சளும் குமட்டுவது போல வந்தது அவளுக்கு.
அவன், தங்கத்தின் வீட்டுக்காரர் ஒருவேளை இப்போதும் அந்த பியுனாகவே இருந்து இந்தத் துணியை வாங்கி வந்திருந்தால், கண்டிப்பாக அவளுக்குப் பிடித்திருக்கும். பியுனாக இல்லையென்றாலும் கடலில் மீன்பிடித்தாலும், முத்தெடுத்தாலும், மீனை விற்றாலும், வற்றல் போட்டிருந்தாலும் களவாடுவதையும், பொய் சொல்லுவதையும் தவிர வேறு என்ன வேலை செய்திருந்தாலும் அவளுக்குப் பிடித்திருக்கும். இந்தப் பாழாய்போன பியூன் வேலை போனவுடன் இவனும் இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது வேறு ஏதாவது தொழிலையோ தொடங்கி இருக்கலாம். ஆனால் வேலைபோனபின் ஒரு நாள் கடலில் மணலை அரித்தபோது, யாரோ தொலைத்த செயினின் அத்துப்போன கொண்டி கிடைத்திருக்கிறது. இரண்டொரு வாரங்கள் இது விளையாட்டாகத் தொடர்ந்தது. பின் இதுவே தொழிலென ஆகி விட்டது.
தங்கத்திற்கு இது தெரியவரவே ஏழு எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது மாதம் பன்னிரெண்டு ஆகிவிட்டது. புருஷனுக்கு மனப்புழுக்கம் வரக்கூடதேன்னு காத்து வாங்க கடலுக்கு அனுப்புனா இது என்னத்தப் பண்ணிட்டுவருது என மனசுக்குள் முதல்முதலில் புலம்பியது நினைவுக்கு வந்தது. . அவளை பொறுத்தவரையில் முத்து எடுப்பது லாட்டரி சீட்டைப்போல அதிஷ்டத்தைப் பொறுத்ததுதான் என்றாலும் அதில் ஓர் உழைப்பு இருக்கிறது. ஆனால் என்னதான் காலையிலிருந்து மணலைச் சலிச்சுக் கொட்டினாலும் அடுத்தவங்க தொலைச்சதுக்குத்தான ஆசைபடுறோம் என்ற வருத்தம் இதில் இருந்தது. இதிலும் ஒன்றும் வருமானம் இல்லாமல் இல்லை. ஆனால் எல்லா வருமானமும் மனதைக் குளிர வைப்பதும் இல்லை.
தம்பி பழையதுதரவா என்றாள் அவனது அப்பனை கவனிக்காதவள் போல. எனக்கு வேண்டாம்மா அப்பாவுக்கு கொடு என்றான் டி.வியைப் போட்டபடி. பழையதை ஒரு தட்டில் போட்டு உப்பு தனியே எடுத்துக் கொடுத்தாள் கணவனிடம். அவன் அதை தண்ணீர் விட்டுப் பிசைந்துக் கொண்டிருந்தான். இவள் உள்ளே ஊறுகாய் எடுக்கச் சென்றாள்.
அப்போது வாசலில் ஒரு பிச்சைக்காரனின் குரல் "அம்மா தாயீ பசிக்குது சாப்பாடு போடும்மா" என்றது. பழுத்த கிழம் ஒன்று அங்கங்கு கிழிந்து ஒட்டுப்போட்ட அழுக்கானச் சட்டை, கைலி, கையில் ஒரு கம்புடனுமாக நின்றிருந்தது. அடுப்பாங்கரையிலிருந்து வந்த தங்கம் பெரியவரை நோக்கி ஒரு கையில் பழையதும் , மறு கையில் ஊறுகாயுமாகச் சென்றாள். இரண்டையும் அவருக்குக் கொடுத்துவிட்டு அதே வேகத்தில் திரும்பி அதே தோரணையில் அவனுக்கும் ஊறுகாயைப் போட்டாள்.
ஏண்டி நா என்ன பிச்சைக்காரனா? பிச்சைக்காரனுக்கு மாதிரி எனக்குப் போடுற? என்றான் கணவன்.
இந்தாங்க ... தேவையில்லாம வயசானவங்க கூட ஒங்கள சேத்துப் பாக்காதீங்க என்றாள். இதில் வயசானவங்க என்பதை அழுதுவதற்கு அவள் மறக்கவில்லை.
வந்த எரிச்சலில் தட்டை உதறிவிட்டு வெளியே போனான். எப்படியும் ஒரு மாற்றம் நிகழும். இப்போது அடுப்பங்கரை ஜன்னல் வழியே பார்த்தபோது, எப்போதோ, யாராலோ பாசி படிந்த அந்த தண்ணீர் கட்டிய குளம் போன்ற இடம் உடைக்கப்பட்டு காலை வெயிலில் காய முயற்சித்துக் கொண்டிருக்க, குழாயில் தண்ணீருக்காக இரண்டு, மூன்று இரட்டைவால் குருவிகள் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தன.