பட்டாம்பூச்சி ஆசை
உங்கள் மகளுக்காக
ஒரு பட்டாம்பூச்சி
பிடித்த அனுபவம் உண்டா.??
கொலைகாரனும்
குழந்தை ஆவான்.!
ஓட்டப்பந்தய வீரனின்
பாதங்களும் கம்பளி
புழுவாய் நகரும்.!
குத்துச்சண்டை வீரனின்
கைகளும் நத்தையின்
நகர்வை போல் அசையும்.!
உன் கை அசைவை
நீயே அறியா.?
உன் இதயதுடிப்பு உன்
கட்டுபாட்டிற்குள் வரும்.!
மூச்சு விடும் வேகம்
பாதியாய் குறையும்.!
உன் கண்ணின் கூர்மையை
அன்றே அறிந்திருப்பாய்.!
மானை வேட்டையாடும்
புலியாய் பதுங்குவாய்.!
இத்தனை முயற்சிகளும்
தோற்றுபோகும் பட்டாம்பூச்சி
காற்றில் தவழ்ந்து வேறொரு
மலரில் அமரும்.!
பின்பு உன் குழந்தை
உன்னை வழிநடத்துவாள்.!
அவள் உதட்டில் விரலை
வைத்துக்கொண்டு ஷ்ஷ்ஷ்சு.!!!
சத்தம் போடாதிங்கபா.! மெதுவா
மெதுவாபா.! என்று பாதத்தின்
நுனி விரலில் நடனமாடுவாள்.!
உன் வீட்டு நாய்குட்டியும்
நான்கு கையில் பிடிக்க
முயன்று ச்ச்சீ இப்பழம்
புளிக்கும் என ஓடிவிடும்
தியான குருவாய்
நீ இருந்தாலும்
பொறுமை இழப்பாய்.!
இறுதியில் வெற்றிக்கிட்டும்
உன் மகளின் முகத்தில்
நட்சத்திரங்கள் மிளிரும்.!
உன் கண்ணில்
உலகையே வளைத்ததாய்
கர்வம் துளிர்விடும்.!
பிறந்த சிசுவின் பிஞ்சுவிரலை
பிடிப்பதுபோல் அதன் இறகை
பிடிப்பாய்.!
சிசுவை மற்றொரு கையிற்கு
மாற்றுவது போல் உன் மகளின்
கையிற்கு அதை மாற்றுவாய்.!
இத்தனை தவமிருந்து
பிடித்ததை அப்பா ரொம்ப
அழகாருக்குல பாருங்களேன்.!
பாவம்பா விட்ரலாமா.!
என்று ஒரு நிமிடத்தில்
உன் மகளிடமிருந்து
வேண்டுகோள் வரும்.!
புன்சிரிப்புடன் பறக்கவிடுவாய்
பறந்து செல்வதை கண்ணில்
ஏக்கத்தோடு காண்பீர்கள்.!
மீண்டும் ஒரு பட்டாம்பூச்சியை
பிடிக்கும் முயற்சியை நோக்கி.....
-பார்த்திபன்