02-07-2015 படித்ததில் பிடித்தது---அறி-யவேண்டிய-முகங்கள்--01

“இரண்டு பொருள்களை ஒப்பிட்டு ஆராய்வதால் அறிவு வளர்கிறது; அவற்றை ஒப்பிட்டு உணர்வதால் கலை வளைர்கிறது;ஒன்றைப்போல் உணர்ந்து எழுதுவது ஓவியக் கலை; ஒன்றைப்போல் உணர்ந்து செதுக்குவது-செய்வது- சிற்பக் கலை; ஒன்றைப்போல் உணர்ந்து நடிப்பது நாடகக் கலை; ஒன்றைப்போல் உணர்ந்து ஒலிநயமிக்க சொல்லுருவமாக்குதல் பாட்டுக் கலை; இவ்வாறு கலையுணர்ச்சிக்கே அடிப்படையாக உள்ளது ஒப்புமை காணும் ஆற்றல்தான்.இரு வேறு பொருள்களின் வடிவிலோ நிறத்திலோ அமைப்பிலோ அசைவிலோ பிறவற்றிலோ உள்ள ஒப்புமையைக் காண்பதும், அந்த ஆற்றலின் ஒரு பகுதியே ஆகும்.”....இவ்வாறு கூறுவார் முனைவர். மு, வரதராசன் அவர்கள்.

உவமை வழியாகவோ, உருவகமாகவோ அல்லது படிமமாகவோ கூறினும் கவிஞன் இருவேறு பொருளை எடுத்துக் கூறி ஒப்புமையைக் குறிப்பிட்டும், அல்லது அவ்வாறு நேரே குறியாமல் திரித்து வெவ்வேறு வகையாகக் கூறுதல் வழியாகவுமே தந்து கருத்தைச் செலச் சொல்லுகின்றான் எனலாம்.

“இவர்களுக்கும்
கோட்டையுண்டு
கொடியுமுண்டு
குதிரை மட்டும் இல்லை
அதனால்தான்
ஜனங்களின் மீதே
சவாரி செய்கிறார்கள்!

அரசவையுண்டு
அரியாசனம் உண்டு
கிரீடம் மட்டுமில்லை!
அதனால்தான்
மக்களின் செலவில்
மலர்க் க்கிரீடங்களைச்
சூட்டிக்கொள்கிறார்கள்!

பெருநிலமுண்டு
குறுநிலமுண்டு
கொட்டிக்கொடுக்க
குறு நில மன்னர்கள் மட்டும் இல்லை!
அதனால்தான்
சாராய மன்னர்களுடன்
சரசமாடுகிறார்கள்!

பட்டங்கள் உண்டு
பட்டத்து ராணியும் உண்டு
அந்தப்புறம் மட்டும் இல்லை!
அதனால்தான்
செல்லுமிடம் எங்குமொரு
சின்ன வீடு
வைத்துக் கொள்கிறார்கள்! “

இதுவரை இது யாரைப் பற்றி எழுதியது என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள்; ஆம், அரசியல்வாதிகளாகிய ‘ஜன நாயக மன்னர்களைப்” பற்றித்தான்.
எழுதியவர்,ஈரோட்டுப்பட்டறையில்வடிக்கப்பட்ட இந்தச் சூரிய வாள் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் சுட்டப்படும் திரு.பொன்.செல்வகணபதி என்பவர்தான்.
====வளரும் ====

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (2-Jul-15, 6:40 pm)
பார்வை : 146

மேலே