என் வாழ்க்கைப் பயணம் - 3
![](https://eluthu.com/images/loading.gif)
சற்று அதிக இடைவெளிதான் .....இரண்டிற்கும் மூன்றிற்கும் .. நான் கட்டுரைத் தொடரின் இடைப்பட்ட காலத்தை சொல்கிறேன் .
சென்ற பகுதியில் எனது பிறப்பின் ஆரம்பத்தோடு முடித்திருந்தேன் .....
இனி தொடர்கிறேன் என் பயணத்தை உங்களுடன் நண்பர்களே !
அறியாப் பருவத்தின் தெரியா நிகழ்வுகளையும், புரியா உண்மைகளையும், அறிவுக்கு எட்டியதும் , நம்மிடம் யாரவது ஒருவர் பகிரும்போது நம்முள் ஏற்படும் உள்ளக்கிளர்வுகளை , உளவியல் மாற்றங்களையும் நாமே உணர்வோம் . அதுவரை நாம் ஒரு நடமாடும் பேசிடும் பொம்மையே .
சிறிது காலத்திற்கு முன்பு , என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் . கல்லூரி நண்பர் அவர். ஏதேதோ திசைகளில் சென்று பலபல துறைகளைப் பற்றி ஓர் அலசல் செய்திட்டு , மீண்டும் அவரவர் பால்யப் பருவத்தைப் பற்றி அளவாலாவினோம் .
அந்நேரத்தில் என் நெருங்கிய உறவினர் ஒருவர் அவ்வழியே வந்தவர் எங்களுடன் சேர்ந்துக் கொண்டார். நண்பனை அவருக்கு அறிமுகம் செய்திட்டேன் .
பால்ய பருவத்தின் நிலைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்று அவரிடம் விள்ளக்கினேன் . அப்போது அவர் வேகமாக , என் நண்பரிடம் , ஒன்று உங்களுக்குத் தெரியுமா ...பழனி ஒரு வயதிலேயே மிக அழகாக இருப்பான் . ஒருமுறை பெண் வேடம் அணிவித்து படமும் எடுத்தோம் என்றார் பெருமையாக . ( அந்த படத்தைதான் இதன் முகப்பில் இணைத்துள்ளேன் )
நான் உடனே குறிக்கிட்டு , மாமா , ( அவரை அப்படித்தான் அழைப்பேன் ) , கழுதை குட்டிக் கூட பிறந்தவுடன் அழகாக தான் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ..ஆதலால் என்னை கிண்டல் செய்யாதீர்கள் என்றேன். என்றும் நிலைத்து இருப்பதுதான் அழகு எவருக்குமே என்று வாதிட்டேன் .
நான் என் நண்பரை பார்த்து வேகமாக இதில் உன் கருத்து என்ன என்று வினவினேன் ஆதங்கத்தோடு . அவன் சிரித்துக் கொண்டே கூறினான் , பழனி , நீயே ஒப்புக்கொண்டாய் , கழுதைகூட குட்டியில் அழகுதான் என்று . பின்பு நாம் ஏன் வீணாக உன் குழந்திப் பருவத்தைப் பற்றி பேசிட வேண்டும் என்று நக்கலாக கிண்டல் செய்தான் . நான் இது எனக்கு தேவைதானா என்று ஒரு நொடி யோசித்தேன் ...பின்பு அவர்களிடம் சொன்னேன் ...என்னின் ஒரு வயது புகைப்படம் ஒன்று அதுவும் பெண் வேடமிட்டு எடுத்தது உள்ளது. அதை இக்கட்டுரையின் முகப்பில் பதிவிடுகிறேன் . வாசகர்களே முடிவுக்கு வரட்டும் என்றேன் . எங்கள் சாலயோர பெஞ்சும் கலைந்தது .
பெயரும் சூட்டி விட்டார்கள் .....கூட்டுக்குடும்பம் எங்களது ...அப்போது . முதலில் ஒரு கிறித்துவ பள்ளியில்( அப்போது nursery ) LKG சேர்த்தனர். ஒரு மூன்று மாதம் சென்று வந்தேன் ...அங்குள்ள சூழ்நிலையும் எனக்கு பிடிக்கவில்லை . நல்ல டீச்சர்கள்தான் . முக்கால்வாசி பேர் ஆங்கிலோ இந்தியர்கள் . அதன்பின்பு சுமார் 5 வயதில் எங்கள் குடும்பம் மட்டும் , அப்பா சொந்தமாக வீடு கட்டியதால் , அம்பத்தூருக்கு குடிப்பெயர்ந்தோம். அப்போது அந்த அளவிற்கு முன்னேறாத நிலையே அங்கு. ஆங்காங்கே சில வீடுகள் . வீதிகளில் விளக்கு கிடையாது. ஒன்றோ இரண்டோ உண்டு .அதுவும் பாதிநாட்கள் , குறிப்பாக இரவில் எரியாது. எங்கள் வீட்டுக்கும் மின் இணைப்பு தரப்படவில்லை . சுமார் 6 மாதங்கள் அரிக்கேன் விளக்கு , மெழுகுவர்த்தி மூலமே காலத்தை ஓட்டினோம் . இதற்கிடையில் அங்கு ஸ்ரீ மகா கணேசா உயர்நிலைப் பள்ளி என்று இருந்தது . அதில் நானும் என் சகோதரரும் ....ஒன்றாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு என்ற நிலையில் சேர்ந்தோம். வீட்டில் இருந்து சிறிது தூரம்தான் , நடந்தே செல்வோம். நான் அங்கு மூன்றாம் வகுப்பு வரையும் , அவர்நான்காம் வகுப்பு வரையும் படித்தோம் ...
அங்கு பெற்ற அனுபவங்கள் , கண்ட காட்சிகள் , ஓலைக் கொட்டகையில் பார்த்த சினிமாக்கள் , அனைத்தையும் அடுத்தப் பகுதியில் தொடர்கிறேன் .....
நன்றி
பழனி குமார்
01.07.2015