நிலம் பேசினால்
நில் மனிதா நில் , நான் நிலம் பேசுகிறேன்
நில் மனிதா நில், உன்னோடு ஒரு சில நிமிடங்கள்
அயர்ந்து நீ படுக்க, கிடக்க, நடந்து பயில தளம் தருபவள்
பயிர்பச்சை மேனியெங்கும் தரித்து உன்பசி ஆற்றி வளம் சேர்ப்பவள்
உயிர்முச்சுக்கு உன்னத தருக்கள் தந்து உன் நலம் நாடுபவள்
உயிர்களின் தாகம் தணிவிக்க நீர் சுரந்து உளம் பூரிப்பவள்
நீ இடும் கழிவுகள் தின்று, நஞ்சு நீக்கி, உரமாய் ஆக்கி
பயிராய் பரிணமித்து உனக்கே உணவாய் உருமாறுபவள்
உமிழ்ந்தாய், போற்றினாய் தூற்றினாய்
குடைந்தாய் தோண்டினாய் , பின் நீயே அதில் விழவுஞ்செய்தாய்.
அத்தனையும் ஜீரணம், சக்தியாக பரிணாமம், இன்னொன்றாக அவதாரம்
அமுதம் ஊட்டியவள்மேல் அமிலம் ஊற்றினாய்
ரசாயனமும், விஷவாயுவும் உயிர்ச்செல்லை அரிக்கிறது,
பிளாஸ்டிக் பிசாசை வேறு என்மேல் ஏவி எறிகிறாய்.
ஜீரணமண்டலம் ரணமாகிவிட்டது
அஜீரணத்தால் நிலம் நலிவடைகிறது.
மூச்சு முட்டுகிறது குழந்தாய்!
கேட்கிறது! உன் குற்றச்சாட்டும் சற்றே காதில் விழுகிறது !
பாரபட்சமானவள் நான் என்கிறாய்
வறண்ட தரிசைச் சிலருக்கும், வளங்கள்
திரண்ட பசுமைப்பரிசை சிலருக்கும்
ஓரவஞ்சனையுடன் வாரி வழங்கினேன் என்று.....
வீரபாரதி பாடிய பண்டமாற்றுமுறை
மறந்தனையோ! குணம் குன்றி தரம் தாழ்ந்தனையோ!
சுரண்டிக்கொழுக்க என்செழுமை உன் சுய நலத்துக்கல்ல....
ஈரமற்றவனே உன் சகோதரன் கண் ஈரமும் வற்றிக் காய்கிறதே, தெரிகிறதா...
ஆறறிவில் பகிர்ந்துண்ணும் பண்பு சேர்த்தி இலையோ !
புழு பூச்சி தொட்டு புலி சிங்கம் வரை
புவியிலே அத்தனை ஜீவராசிகளுக்கும்
படியளக்கும் என் நிலமடி.... எல்லாம் என்னுள்ளே அடங்கும் ( அடக்கம்).....
பொறுமைக்கும் நானே உதாரணம், தருணங்களில்
தரைபிளந்து வம்சத்தையே துவம்சம் செய்யும் மத வாரணமும் நானே ...
எச்சரிக்கை! நிலம் மிரண்டால் !
மனிதா! உன்னோடு மட்டுமென்ன விசேஷமாய் இத்தனை நேரம்!
சுயநலத்தால் முழுதாய் எனைச்சுரண்டியதில்
நீயே முதன்மையானவன், பஞ்சபூதங்களையும் மாசுபடுத்தி மகிழ்ந்தவன்
தீயிட்டு நிலத்தைச் சுட்டவன், பிளாஸ்டிக்
பை உள்ளிட்ட கழிவுகள் கொட்டி, மண்ணை மலடாக்கியவன்
புகையிட்டு காற்றை சூறையாடியவன்...
வளங்களாய் வாரி ஈன்ற என்னை மலடாக்கினால்,
நிலம் காலமாகுமே! எதிர்காலம் கேள்விக்குறியாகுமே?
நிலத்தின் ஆயுள்நீளமே, உன் வாழ்நாளை வரையறை செய்யும்.
விழித்துக்கொள் மனிதா! இனியாவது விழித்துக்கொள்!
உறங்கியது போதும், உறங்குவது போல நடித்ததும் போதும்
இழப்பு இருவருக்குமே, புத்தியில் ஏற்றிக்கொள் .
வாழையடி வாழையாய் என் வம்சம்( நீ உட்பட) தழைக்கவேண்டும்....
வேளை வந்துவிட்டது, என்னுடன் இணைந்து வேலை செய்
களை களைய காலம் கனிந்தது, களமிறங்கு
நிலம் பேசுகிறேன் , உன் நலம் காக்கவே, நிலம் பேசுகிறேன்!
இரா . கணேஷ் ....