காலைச் சாரல் 10 - இரு பறவைகள்

4-7-2015
அதிகாலை எண்ணங்கள் .... " இரு பறவைகள்"


எதிரே கம்பத்தில் அமர்ந்திருந்த காக்கா தலையைச் சாய்த்து ஒரு மாதிரிப் பாரத்தது.
"என்ன லுக்கு...? இன்று உன்னைப் பற்றியும் தான் எழுதப் போகிறேன்" என்றேன். எச்சமிட்டுப் பறந்து சென்றது.
****

அதே காக்கா வாசலில் இருந்த மரத்தில் கூடு கட்டியிருந்தது... அண்டை அயலில் இருந்தவர்கள் தினம் வைக்கும் உணவே அவைகளுக்கு நித்திய சாப்பாடு... சில நாட்கள் நேரமாகி விட்டது என்றால் அதற்கான தட்டில் வந்து அமர்ந்து கூப்பிடும். குடிக்க தண்ணீரும் உணவும் கீழே விழாதபடி ஒரு அமைப்பை கொடி கட்டும் குறுக்கு இரும்புக் (angle) கம்பியில் ஏற்படுத்தி இருந்தேன்.... (முதல் மாடி, wash area வுக்கு வேளியே). சில புறாக்கள், காக்கைகள், அணில்கள் நித்திய விருந்தாளிகள்.. அவைகள் அதிகம் விரும்புவது தண்ணீர்.

திடீரென்று நேற்று காக்காவின் கூடு மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது....(கூட்டின் உபயோகம் தீர்ந்து விட்டதோ என்னவோ?.)

சுத்தம் செய்யச் சென்ற துப்புரவாளருக்கு அதிர்ச்சி.... காக்கா கூடு கனமாக இருந்ததே காரணம். குச்சிகள், நாறுகள் இல்லாமல் முற்றிலும் இரும்புக் கம்பிகளால் நேர்த்தியாகப் பின்னப் பட்டிருந்தது, கட்டிடம் கட்டும் பொழுது TMT கம்பிகளை இணைக்க மெல்லிய கம்பிகள் பயன் படுத்துவார்களே...,! அதைக் கொண்டு அந்தக் கூடு பின்னப் பட்டிருந்தது. காயலாங் கடையில் போட்டவருக்கு அரைக் கிலோ தேர ரூ.8/- வருமானம்.
****

நம்மைச் சுற்றியே வாழும் மற்றொரு பறவை 'புறா' .
புறாக்கள் மிக மென்மையான பறவை. ஜோடி, இணை, காதல் என்றால் புறாக்கள்தான் உதாரணம். (ஓ பக் பக் .... சந்திர பாபுவை நினைவு கொள்ளுங்கள்...) நான் வைக்கும் உணவுக்கும் தண்ணீருக்கும் தினம் வரும். சாதம் வெய்யிலில் காய்ந்து போனால் அதைக் குடிக்க வைத்த தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிடும். என்ன கொஞ்சம் அசுத்தம் செய்யும். வாரம் ஒரு நாள் சுத்தம் செய்ய வேண்டி வரும். நான் பொருட்படுத்துவது இல்லை.

ஆனால் சிலருக்கு புறாக்களைப் பிடிப்பதில்லை. மூடிய ஜன்னல் பின்னும், exhaust இடுக்குகளிலும் கூடு கட்டி குடும்பம் நடத்திக் கும்மாளமிடும். சுற்றுப் புறம் அசுத்தமாகும். சில சமயம் தவறி கீழே விழும் முட்டைகள் புறாக் குடும்பத்தில் இழப்பை நமக்குத் தெரிவிக்கும். சத்தம் போடாமல் அவை அங்கும் இங்கும் செல்வது மாடத்திலிருந்து பார்க்க, அழகே! சில சமயம் ஜோடியாக எதிரில் உள்ள transformer கம்பத்தில் அமர்ந்து என்னைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருக்கும்.

சொல்ல வந்த விடயம் அதுவல்ல. எங்களுக்குள் ஒரு தீவிர புறா எதிர்ப்பாளர் குடியிருக்கிறார். எப்படியாவது புறாக்களை அண்ட விடாமல் செய்வது என்ற நித்திய சிந்தனை. பல நாட்கள் மூளையைக் கசக்கி ஒரு முடிவுக்கு வந்தார். ஜன்னலில் புறாவை உட்கார விடாமல் செயதால் என்ன? ஒரு பலகையில் நிறைய ஆணிகள் அடித்து (கூர்மையான பாகம் மேலாக...) ஜன்னலில் வைத்தால் புறாக்கள் அங்கு அமர முடியாது அல்லவா...? என்ற முடிவுக்கு வந்தார். திட்டத்தை செயலாற்றியும் விட்டார்.(மேலே படம் பார்க்க). அவர் வீடு, கீழ் வீடு, மேல் வீடு மூன்றிலும் புறாக்களுக்கு ஆணிப் படுக்கை... சில நாட்கள் தடுமாறிய புறாக்கள் இப்பொழுது ஆணிப் படுக்கைக்குப் பழகி விட்டது... இப்பொழுது ஆணிகள் மேலேயே சுள்ளிகளைப் போட்டு கூடு கட்டவும் துவங்கி விட்டது...

"இப்ப என்ன செய்வீங்க....? இப்ப என்ன செய்வீங்க.....?"

நான் கேட்கலீங்க.... கேட்டது புறா....!

------முரளி

எழுதியவர் : முரளி (4-Jul-15, 6:51 am)
பார்வை : 206

சிறந்த கட்டுரைகள்

மேலே