வாடிடும் மயில் தேடிடும் வயல்வெளி

பசுமையை தொலைத்திட்ட மனிதா
பறந்துவந்த மயிலை காண்க நீயும் !
பரவசம் பிறக்குது பார்த்தால் நமக்குள்
பச்சைப் பசேலை ரசிக்கும் பறவையை !

மனிதமும் மறைந்தது மண்ணில் இன்று
பசுமையும் மாறியது மாளிகைகள் ஆனது !
வசதியை நினைக்கும் மனிதனோ இன்று
வளத்தை மறந்தான் மதியை இழந்தான் !

வண்ண மயிலின் வருத்தமும் அதுவே
எண்ணத்தில் ஓடுது எனக்கும் இதுவே !
வயலும் வாய்க்காலும் மறந்தே போகும்
வருங்கால மனிதர் அறியாமல் போவர் !

வாடிடும் மயிலும் தேடிடும் வயல்வெளி
வரைந்த படமாகி வந்திடும் விற்பனைக்கு !
அரசும் ஆண்டியாகி அலையும் வீதியில்
அரிசியும் காணும் பொருளாகும் கணினியில் !

இனியேனும் நிலைமாற பசுமை நிலைத்திட
இதயங்கள் தீர்க்கமாக முடிவும் எடுத்திடுக !
விளைநிலம் விற்காது விவசாயம் தொடர்ந்திட
விரைந்து செயல்படுக திட்டங்கள் தீட்டிடுக !

பழனி குமார்

( படம் எடுத்தவர் - SP சொக்கலிங்கம் , பொள்ளாச்சி )

எழுதியவர் : பழனி குமார் (5-Jul-15, 7:30 am)
பார்வை : 655

மேலே