நாணயம்
புது பெயிண்டின் வாசனை வண்டிக்குள் சுழன்றபடியே இருந்தது. காளிதாஸ் வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டே அந்த வாசனையை ரசித்து மனதால் ருசித்துக் கொண்டிருந்தான். எப்போதேனும் ஓரீரு வாகனங்கள் மட்டும் கடந்து செல்லும் அந்த தனித்த தார்சாலையில் அவன் செல்வது இதுவே முதல் முறை. இன்றே எப்.சி. வேலையை முடித்தாக வேண்டும். நாளை காலை பழநி டிரிப், நாளை மறுநாள் கொடைக்கானல் டிரிப். பதினோரு மணிக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அடைந்து விடவேண்டும் என்ற சிந்தனையோடு டேப்ரிக்கார்டரை ஆன் செய்தான். அதில் கேசட் இல்லாததால் ஸ்பீக்கரில் ஹம் சவுண்டு மட்டும் கேட்டது. தொலைவில் ஒரு முதியவர் தார்சாலையின் விளிம்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். தனது சீட்டிற்கு அடியில் உள்ள பெட்டிக்குள் இடதுகையை விட்டுத் தேடினான். கேசட் அகப்பட்டது. அதை வெளியில் எடுத்தபோது அது அவனது விரல்களிலிருந்து நழுவி இடதுகாலுக்கடியில் செருப்புகளின் மீது விழுந்தது. தலையைக் குனிந்து பார்த்தான். ரஜினி ஹிட்ஸ் கேசட். இடதுகால் விரல்களின் உதவியால் அதைக் கவ்வி மேலே எடுத்துவிடலாம் தான். ஆனால் ரஜினியைக் காலால் எடுக்க அவனுக்கு மனமில்லாம கேசட் டப்பாவை ஒரு கையினாலேயே திறந்து கேசட்டை வெளியே எடுத்தான். டேப்ரிக்கார்டருக்கள் அதைப் பாதிநுழைக்கும்போது எதிர்பாராவிதமாக வேன் ஸ்டியரிங் இடதுபுறம் கால்வட்டமாகச் சுழன்றுவிட்டது. அதை வலதுபுறம் சுழற்றிச் சரிசெய்யும் போதே முதியவரின் வலது பக்க முதுகில் வேனின் இடதுமுன்பகுதி முட்டி விலகியது. அவர் தடுமாறி விழுந்தார். இவன் பிரேக்கை மிதித்து வண்டியின் வேகத்தைக் குறைத்தபடியே இடது பக்க வியூஃபைன்டர் கண்ணாடியின் வழியாகப் பார்த்தான். முதியவரின் வலது கை அவரது உடலோடு ஒட்டியபடியே இரத்தத்தில் நனைந்தவாறு தார்சாலையில் துடித்துக் கொண்டிருந்தது.
வண்டி தன் வேகத்தை முழுவதுமாக இழந்தது. தலையை வண்டிக்கு வெளியே நீட்டி ஆள்நடமாட்டம் இருக்கிறதா என்று கவனித்தான். இச்சம்பவத்தை இவனையும் அவரையும் தவிர வேறுயாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். சாலையில் போக்குவரத்து இல்லை. விரைவாக கியரை மாற்றி வண்டியை இயக்கினான். வண்டி முன் நகர்வதற்கு முன்பு ஒருமுறை வியூஃபைன்டர் வழியாக முதியவரை பார்த்தான். முதியவரின் வலது கை அசையவில்லை. ஆனால் இடதுகையும், அவரது தலையும் சற்று உயர்ந்தபடி தன்னைப் பார்த்தவாறு இருப்பதை உணர்ந்தான். அவனை அறியாமலேயே வண்டியின் எஞ்சினை நிறுத்திவிட்டான். வண்டியைவிட்டு இறங்தி முதியவரை நோக்கி வந்தான் அவன் முதியவரை நெருங்கும் முன்பே முதியவர் தன்பலம் அனைத்தையும் ஒன்றுகூட்டி தம்பி உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறே, தயவு செஞ்சி என்ன ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போ என்றார்.
வண்டியை மிக வேகமாக ஓட்டினான். வண்டியின் வேகத்தைவிட அவனது வேகம் வேகமாகச் சிந்திக்கத் தொடங்கியது. வலிதாளாமல் பொங்கிவரும் தன் கண்ணீரை அடக்கவோ, துடைக்கவோ வழியின்றிப் பின்சீட்டில் படுத்தபடியே அடிபட்ட கையை அழுத்திப் பிடித்தவாறு பயணித்தார் முதியவர். அவன் பின்சீட்டை நோக்கி தன் தலையை பக்கவாட்டில் திருப்பிக் கொண்டு ஐயா உங்களை ஆஸ்பத்திரியல் சேர்த்துடுறேன். அவங்க கேட்டா, வண்டி இடுச்சிடுச்சின்னு சொல்லணும். எந்த வண்டி இடிச்சதுண்ணு தெரியலைண்ணு சொல்லிடணும். சரியா? இல்லாட்டி என்னப்புடுச்சி உள்ளவச்சிடுவாங்க. புரியுதா? முதியவர் மெல்லிய குரலில் சம்மதம் தெரிவித்தார். தன் தலையைத் திருப்பிக்கொண்டு சாலையைப் பார்த்தபடியே நா ஒண்ணும் போலீசுக்குப் பயந்த ஆளில்லை. வண்டிக்கு எப்சி ஓ.கே. ஆகணும். அதுக்குத்தா யோசிக்கிறே. ஒங்கள ஆஸ்பத்திரியில எறக்கிவிட்டுவிட்டு ரத்தக்கற எல்லாத்தையும் தொடச்சிட்டு ஒடனே கிளம்பிடுவே. சரியா? என்றான். முதியவங்டமிருந்து பதில் இல்லை. வெறும் முனங்கல் மட்டுமே வந்தது. ரஜினிகேசட் டேப்ரிக்கார்டருக்கள் பாதி நுழைந்த நிலையில் வண்டியின் வேகத்திற்கும் குலுங்கலுக்கும் ஏற்ப அதிர்ந்தபடியே இருந்தது.
அரசுப் பொது மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்து விபத்து சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் முன் வண்டியை நிறுத்தினான். மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் முதியவரை தூக்கிச் சென்று வராந்தாவிற்கு எதிர்புறமிருந்த ஓர் அறையில் படுக்கவைத்தான். அங்கு சிலருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்களில் ஒருவர் முதியவருக்குச் சிகிச்சை அளிக்க வந்தார். மெல்ல நகர்ந்து அறையைவிட்டு வெளியே வந்த காளிதாஸ் வராந்தாவில் நின்று கொண்டு ஒருகணம் யோசித்தான். வண்டியைத் துடைத்துவிட்டு உடனே புறப்பட்டுவிட வேண்டும் என நினைத்தபடியே வாசலை நோக்கி நடக்க தொடங்கினான். முதுகுப்புறமிருந்து சார் அந்தப் பெரியவர் கொண்டு வந்தது நீங்கதானே? இந்த மஞ்ச சீட்ட ஃபில்லப் பண்ணிக் குடுங்க. என்று ஒரு பெண் குரல் தடித்து ஒலித்தது. வேறுவழியின்றி அதனை வாங்கிக் கொண்டு அருகில் இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தான். மருந்துப் பொருட்களை மற்றும் ஃபினாயில் வாசனை தூக்கலாக இருந்தது. அந்தச் சீட்டில் நோயாளியின் பெயர், வயது முகவரி போன்றவற்றை நிரப்புவதற்குப் பயனம் மெல்ல படரத்தொடங்கியது. வராந்தாவில் ஆள்நடமாட்டம் அதிகமாக இருந்ததால், அதனைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே வந்தான் கையிலிருந்த மஞ்சள் சீட்டை கசக்கி எறிந்தான். வண்டியில் ஏறி பின்சீட்டிலிருந்த ரத்தக்கறையைத் துடைத்தான். இறங்கிவந்து வண்டியின் முன்பகுதியில் ரத்தக்கறை இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு டிராக்டர் தன் டிரைலரில் முப்பது பேரை ஏற்றியவாறு பெருஞ்சப்தத்துடன் நடுங்கியபடியே வந்து அவனது வேனை உரசி நின்றது.
டிராக்டரின் டிரைலரில் இருந்த கூட்டத்தில் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் கீழே இறங்கினார். வலது கால் தொடையிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட ஒருவனை இரண்டு பேர் தூக்கிக் சென்று அவர்களைத் தொடர்ந்து ஒருவன் ஓலைப்பாயில் சுருட்டியிருந்த ஏதோ ஒன்றினைத் தன் இரண்டு கைகளினாலும் ஓரு குழந்தையைப் போல சுமந்து சென்றான். அதில் கால் இருந்தது. வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டான். காலிழந்தவனை முதியவர் சிகிச்சை பெற்றுவரும் அறைக்குப் பக்கத்து அறையினுள் தூக்கிச் சென்றனர். கூட்டத்தில் இருந்தவர்களில் பாதிபேர் பெண்கள். பெண்கள் அனைவரும் வராந்தாவை நிறைத்துக் கொண்டிருந்தனர். ஆண்களில் சிலர் வேனுக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். அருகில் இருந்தவரிடம் காளிதாஸ் விசாரித்தான். எங்க ஊர்க்கார பயல ஒரு மொபசல் பஸ் அடிச்சிடுச்சி. காலு துண்டாயிடுச்சு. டைவர் ஓடிட்டான். கன்டக்டரைப் பிடுச்சி ஒதச்சித் தூக்கிட்டு வந்துட்டோம் என்றார் பெரியவர். காளிதாஸ் டிராக்டரின் டிரைவரின் மீது ஒரு காலை எக்கி ஏறிப்பார்த்தான். பின்புறம் கட்டப்பட்டு வாயில் ரத்தம் ஒழுகிய நிலையில் ஒருவன் குறுக்குவசமாகச் சாய்ந்து கிடந்தான். அவனது காக்கி யூனிஃபார்ம் கிழிந்தும் கசங்கியும் இருந்தது. அவனுக்கு காவலாக இரண்டு இளைஞர்கள் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். ஒருவன் ஓடிவந்து வேனுக்கருகில் நின்றிருந்த பெரியவரிடம் ஒரு மஞ்சள் சீட்டைக் கொடுத்தான். அவர் அதை காளிதாசிடம் கொடுத்து நிரப்ப சொன்னார். காளிதாஸ் விவரங்களைக் கேட்டு பூர்த்தி செய்தான். அவன் வராந்தாவில் நின்று கொண்டிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு முதியவரைப் படுக்க வைத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.
அவர் தம் கண்களைப் பாதி இடுக்கி வேதனையைப் பொருத்துக் கொண்டு காளிதாஸைப் பார்த்து இன்னும் போகலியா என்றார். காளிதாஸ் எதுவும் பேசவில்லை. அவர் அவனிடம் எனக்கு ஒரு உதவி செய்ரியா தம்பி? என்று கேட்டார். காளிதாஸ் தலையை மட்டும் ஆட்டினான். அவர் பெருங்சிரமப்பட்டு தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தார். அதை அவனிடம் கொடுத்து அதிலிருந்து தனது விசிட்டிங்கார்டை எடுக்கச் சொன்னார். போரப்ப எங்க வீட்டுக்கு போன்ல தகவல் சொல்லிட்டுப் போப்பா என்றார். சில்லரைக் காசுகளை எடுத்துக் கொள்ள சொன்னார். அவன் ஒரேயொரு ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்துகொண்டு பர்ஸை பெங்யவரிடம் கொடுத்தான். அறையைவிட்டு வெளியே வந்தான். ஒரு நர்ஸ் காளிதாஸை நோக்கி ஹலோ உங்களத்தான் என்று கூப்பிட்டார். காளிதாஸ் திரும்பிப்பார்ப்பதற்குள் மஞ்சசீட்டக் குடுத்து எழுத சொன்னேனே எழுதிட்டிங்களா? என்றார். காளிதாஸ் தயங்கியபடியே நர்ஸிடம் சென்று அந்த சீட்டு தப்பாயிடுச்சு. வேற சீட்டுக் கொடுங்களேன் என்றான். அத அப்பவே கேட்டிருக்கலாம்ல என்று கூறிக்கொண்டே வெள்ளைச் சீருடை அணிந்த அந்தக் கறுத்த நர்ஸ் ஒரு புதிய மஞ்சள் சீட்டை கொடுத்தார். மரப்பெஞ்சில் உட்கார்ந்து விசிட்டிங் கார்டை பார்த்து பூர்த்திசெய்தான். வயது என்ற இடத்தில் தோராயமாகவும் தாராளமாகவும் ஓர் இரண்டிலக்க எண்ணை எழுதினான். விசிட்டிங்கார்டில் இருந்த முகவரி மருத்துவனைக்கு சற்று அருகில்தான் என்பதை உணர்ந்து கொண்டான். மஞ்சள் சீட்டை நர்ஸிடம் கொடுத்துவிட்டு லோக்கல் கால் பண்ணணும். எங்க பண்ணலாம் என்றான். நர்ஸ் பதிலை சைகை மூலமே கூறினார். நர்ஸ் தனது வலதுகையை உயர்த்தி காட்டிய திசையை நோக்கி காளிதாஸ் நடந்தான்.
தொலைபேசியை சுழற்றியவுடன் எதிர்முனையில் இருந்து ஒரு சிறுவனின் ஹலோ குரல் கேட்டது. சிவலிங்கம் சார் வீடுதானே? என்றான். ஆமாம். எங்க தாத்தா தான். அவரு வெளியே போயிருக்காரு என்றான் அந்தச் சிறுவன். மேற்கொண்டு ஏதும் பேசமுடியாமல் மௌனமாக இருந்தான் காளிதாஸ். சிறுவனின் ஹலோ குரல் மட்டும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தது. இணைப்பைத் துண்டித்துவிட்டு வராந்தாவிற்கு வந்தான்.
வராந்தா தரையில் பெண்கள் அனைவரும் குழுக்குழுவாக அமர்ந்திருந்தனர். ஆண்களில் சிலர் டிராக்டரின் டிரைலரிலும், சிலர் வேனுக்கு அருகிலும் நின்று கொண்டிருந்தனர். காளிதாஸ் வேனை இயக்கி முதியவரின் வீடு நோக்கி விரைந்தான். வேனிற்குள் புதுபெயிண்டிங் வாசனை சுழன்றபடியே இருந்தது. எவ்வளவு முயன்றும், காளிதாஸின் சிந்தனையைத் தொட்டு, எப்.சி.வேலையை அவனுக்கு நினைவூட்ட அவ்வாசனையால் முடியவில்லை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
