நல்லமுத்து - உதயா

படிப்பின் வாசம் அறியா பாமர மக்களுக்காய் பத்து ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது அந்த செல்வபுர கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் ஐந்தாவது வகுப்பு வரை மட்டும் . இன்னும் நிரப்ப படாமலே உள்ளது சில ஆசிரியர் பணியிடங்கள். நிரம்பியுள்ள சில ஆசிரியர்களும் எந்நேரமும் வருப்பறையில் உறங்குவதயே தொழிலாகவே இருந்தது .

தன் வம்சத்திற்கே முதல் முதலில் வீச தொடங்கியுள்ளது படிப்பின் வாசம் என்றே, தன் பிள்ளைகளை தினமும் சிங்காரித்து அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்கள். சில பிள்ளைகள் தன் படிப்பினை அந்த ஏறிக்கரை ஆலமரத்தடிலும், சில பிள்ளைகள் பள்ளிக் கூடத்தில் வாத்தியார் கால்களை பிடித்துவிடுவதிலும், இன்னும் சில பிள்ளைகள் சத்துணவு அமைப்பாளருக்கு உதவி செய்து முட்டைகளை வாங்கி திண்ணுவதிலும் தினமும் முடித்துக் கொண்டிருந்தனர்.

என்றாவது ஓர் நாள் நிகழும் சூரிய சந்திர கிரகணத்தை போல ஒரு சாமான்யன் வந்தார் புது ஆசிரியராக அந்த பள்ளிக் கூடத்திற்கு. அவன் பெயர் நல்லமுத்து. இவனுக்கு இளம் வயது ஆனால் எள்ளவும் வேகம் இல்லை , விவேகம் மட்டும் மலையளவு இருந்தது. அவன் அந்த பள்ளிக் கூடத்தில் எதையும் மாற்றவில்லை, தன் மதி உளியால் சில சிலைகளை மட்டும் செத்துக்க தொடங்கினான்.

எல்லா பிள்ளைகளுக்கும் படிப்பு பள்ளியின் வகுப்பறையில் முடிய தொடங்கியது. சிலைகள் ஒவ்வொன்றாய் மெருகேற தொடங்கியது. ஒவ்வொரு சிலைக்கும் தனிதனி தன்மையும் உண்டு. உறங்கிக்கொண்டிருந்த சக ஆசிரியரும் உளியாக தொடங்கினர். நல்லமுத்து கல்வியை மட்டும் போதிக்கவில்லை. அவர் அவர் அறிவு திறனுக்கு ஏற்ப சில கலைகளையும் போதித்தார்.

சிறு வயது பிள்ளைகள் என்றாலும், அவர்களின் திறமையை அறிந்து இன்னும் உயர்ந்து விரிந்திட ஏணியாகமாறினார். பேச்சு, கவிதை, கதை கட்டுரை, நடனம், விளையாட்டு என பிள்ளைகளின் திறமையை அறிந்து, இன்னும் சிறந்து விளங்க பாலமாக மாறிநின்றார். செல்வபுரம் கிராமத்தில் ஒரு பள்ளிக் கூடம் உள்ளது என்பதை, அண்டை கிராமமும் அறியாதிருந்த காலம் கடந்து, அணைந்து பள்ளிகளிலும் இணைந்து பயிலும் மாணவர்களில் இக்கிராம பிள்ளைகள் மட்டும் தனி தன்மையுடன் மிளிர தொடங்கினர்.

இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்த பிறகு மற்ற பள்ளிகளில் மேல் படிப்பை தொடரும் மாணவர்களை அவ்வபோது நேரில் சென்று நலன் விசாரித்து அறிவுரைகளை வழங்கி , அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இவர்களை பற்றிய முழு விபரங்கள் எடுத்துரைத்து அவரவருக்கான பாதையை தெளிவாக்கி கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார் நல்லமுத்து

சில பிள்ளகைள் சிறுவயதில் பேச்சில் சிறந்து விளங்கியதால் அவர்களை அரங்கம் ஏற்றி அரங்கத்தை அலங்கரிக்க முற்பட்டார். அப்பிள்ளைகளின் பெற்றோர்களோ வறுமையில் வாடும் வாடா மலர்கள். அவர்களிடம் பிள்ளைகள் எந்த பண உதவியையும் எதிர் பார்க்கவே முடியாது. ஆனால் நல்லமுத்தோ தன் சொந்த பணத்தினில் அப்பிள்ளைகளை அழைத்து சென்று அவர்கள் உண்ண உறங்க வசதி செய்தார்.

சில பிள்ளைகளின் அசாத்திய திறமைகளை கண்டு பல கல்வி நிறுவனங்கள் அப்பிள்ளைகள் எதுவரை பயில ஆசைப்படுகின்றனரோ அதுவரை ஆகும் பொருளாதார செலவுகளை ஏற்றுக் கொண்டனர்.
படிப்பின் வாசம் அறியா கிராமத்தின் ஒவ்வொரு வீட்டினிலும் ஒரு பட்டதாரியை உருவாக்கி வைத்திருந்தார்.

நல்லமுத்து செத்துகிய சிலைகளில் சற்று வித்தியாசம் நிறைந்தது சிங்காரவேலன் எனும் மாணவன் மட்டும். இவன் அரங்கத்தை அலங்கரிக்க இல்லை இல்லை அரங்கத்தை தன் பேச்சு திறமையால் கட்டி ஆளப் பிறந்தவன். யாரும் அறியாத நல்லமுத்துவை அகிலமே அறிந்திட செய்தவன்.இதுவரை பேச்சு திறமைக்காக கைதட்டிய அரங்கம் முதல் முறையாக தன் மாணவனின் அழைப்பை ஏற்று அரங்கம் ஏறி மௌனமாய் நின்றிருந்த நல்லமுத்திற்காக சில நிமிடம் எழுந்து நின்று கைதட்டியது.

அனாதையாய் பிறந்தும் பல நல் முத்துகளை விதைத்துக் கொண்டிருந்த நல்லமுத்து , வகுப்பறையில் சில இளம் முத்துகளை செதுக்கி கொண்டிருக்கும் போது, அவருக்கான சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. இதுவரை சரித்திரம் காணாதா அளவிற்கு பல உயர் அதிகாரிகள் எல்லாம். ஒரே இடத்தில் ஒரு அனாதை பிணத்தினை காண இல்லை இல்லை அனாதை பிணத்தைக் கண்டு கதற ஒன்று சேர்ந்திருந்தனர் .

எழுதியவர் : உதயா (5-Jul-15, 2:35 am)
பார்வை : 256

மேலே