நாகரீக மோகம்

இரவு நேரம் 8 மணியை தாண்டியிருந்தது. புகையிரதத்தில பயணித்த களைப்புடன் வெள்ளவத்தையில் உள்ள தமது மகளின் தங்குமிடத்துக்கு விரைந்து கொண்டிருந்தனர் பானுவின் பெற்றோர்கள்.
அங்கு மகள் இல்லாததால் மகளின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டனர்.
"அம்மா... இன்னமும் பார்ட்டி முடியலை. திறப்பு பக்கத்து பிளாட் ஆன்டி ட கொடுத்திருக்கிறன். வாங்கிக் கொள்ளுங்க..." தொடர்பை துண்டித்தாள் பானு.

"என்னவாம் உண்ட மகள்...." - கணவர் கணேசலிங்கம்.
"இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாளாம். எங்களை உள்ள போயி இருக்கட்டாம்..." - மனைவி தேவி

"இது அவள் சொன்னாளா.... இல்லை நீயா சொல்லுறியா... இப்பவே நேரம் 8 தாண்டிட்டு. பிள்ளை வீட்டில இல்லை... இவள் இன்னமும் சின்னபிள்ளையாக தான் இருக்காள்ல..." சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்.

பானுவின் வரவிற்காய் பயண களைப்பையும் பொருட்படுத்தாது காத்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் வந்து சேர்ந்தாள் பானு. அவளின் ஆடையை பார்த்ததும் கோபம் உச்சிக்கு ஏறினாலும் காட்டாமல் அடக்கிக் கொண்டார் அவளின் அப்பா.

"இன்னமும்மா நித்திரை கொள்ளவில்லை நீங்கலாம். என்கிட்ட தான் இன்னொரு திறப்பு இருக்குல" - பானு

"ஆமாண்டி... நீ கேட்ப... இன்னமும் வரலையே என்று தவிச்சிட்டு இருக்கிறம். உனக்கெங்க புரிய போகுது..." - தாய்

"ஆபீஸ் பார்ட்டி மா. பாதில விட்டுடு வர முடியாது. அது நல்லா இருக்காது. நான் என்ன சின்ன பிள்ளையா அம்மா..." பானு சொல்லி முடிக்க முன்னர்
"நீ இன்னமும் சின்ன பிள்ளையாவே இருகிறாய். அதான் பிரச்சனையே..." - அவளின் தந்தை கூற

"சரி சரி... இப்ப நித்திரை கொள்ளுங்கள். நாளைக்கு கதைக்கலாம். சரியான அலுப்பாக இருக்கு...." கூறிக்கொண்டு தனது அறையினுள் நுழைந்தாள்.

பொழுது விடிந்தது.
தேவி அனைவருக்கும் தேத்தண்ணி தயாரித்து மேசையில வைத்தார்.

பானு அறையை விட்டு வெளியே வரும் பொழுது கையில் தொலைபேசியை நோண்டிக்கொண்டே வந்தாள். கைபேசியை மேசை மீது வைத்துவிட்டு தேத்தண்ணியை ரசித்து ருசித்து குடித்தாள்.

"ம்ம்ம்ம்ம்...... ஷா...... எத்தனை நாளாச்சு அம்மாட கையாள தேத்தண்ணி குடிச்சு.... நீங்க போட்டா தனி சுவை தான் மா...."

"என்னம்மா... போன் இந்த பெருசா இருக்கு...." கணேசலிங்கம் கேட்டார்.

"போன் சின்னது தான்பா. வெளி கவர் தான் கொஞ்சம் பெருசு." போனை கவரில் இருந்து கழட்டி காட்டினாள் பானு.

"ஓ... அப்பிடியா... எனக்கேங்கம்மா இதெல்லாம் தெரியப் போகுது. இந்த கால பசங்க என்னென்னமோலாம் செய்றாங்க...."

"அப்பிடிலாம் இல்லைப்பா. நீங்க அந்த காலத்தில செய்தது தாத்தா பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்ல. அது போல இப்ப நாங்க பண்ணுறது உங்களுக்கு விநோதமாக இருக்கு... நாளைக்கு எங்க பிள்ளைகள் செயுறது நமக்கு வியப்பாக இருக்கலாம். அவளவு தான்பா..." - பானு

"அதென்றால் உண்மைதான்மா... அதுசரி. இந்த போன், கவர் இல்லாமல் அழகா தானே இருக்கு. இதுக்கேன் கவரை போட்டு அசிங்க படுத்துறீங்கள்."

"அப்பிடியில்லைபா... இந்த போன்ட விலை உங்களுக்கே தெரியும். ஒருவேளை நாளைக்கு ஒன்று நடந்துட்டால் மனதுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். சும்மா ஒரு கீறல் விழுந்தாலே தாங்காதுப்பா... அதுக்குதான் இந்த கவர் போட்டுக்குறது...." - பானு விளக்கம் கொடுத்தாள்.

எதையோ யோசித்துக் கொண்டு கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார்.
அவளும் கொஞ்ச நேரத்தை போனில் கடத்திவிட்டு மீண்டும் இயல்புக்கு வந்தாள்.

"என்னப்பா... அமைதியாகிடீங்கள்... எதையோ கடுமையாக யோசிக்கிற மாதிரி இருக்கு..." - பானு கேட்க

"ஒண்ணுமில்லைமா... சும்மா யோசித்து பார்த்தன். உன்கிட்ட சொல்லி எதுக்கு காலங்காத்தாலை கஷ்டபடுத்துவான் என்று தான்...."

"பரவாயில்லைப்பா... என்கிட்ட தானே... தயங்காம சொல்லுங்கப்பா..."

"வேண்டாம் விடுமா..."

"இல்லை... சொல்லுங்கப்பா...."

"இல்லைமா... ஒரு சாதாரண விலைமதிப்புள்ள போனுக்கு கவர் எல்லாம் போட்டு ஒரு பிழையை பார்க்கிறது போல பார்த்துக்குற. ஆனா... விலைமதிப்பில்லாத எண்ட பிள்ளை தன்னை அப்பிடி பார்த்துகிறாள் இல்லையே... அதான் யோசித்துட்டு இருந்தான்"

சுளீர்ரென்று இருந்தது அவளுக்கு. திரும்பி தாயை பார்த்தாள். தாய் அமைதியாக இருந்தார். தந்தை தொடர்ந்தார்...

"... நீ சொல்லுறது எல்லாமே சரியாக தான் இருந்துச்சுமா... ஆனால், எங்கட குலவிளக்கு - குடும்ப சொத்து - விலைமதிப்பில்லாத தங்கம் நீயடா... இப்பிடி அரை குறை ஆடையோட பார்ட்டி அது இதுன்று போறது தாங்க முடியலைம்மா. ஒரு பொண்ணு இரவு 9, 10 மணிக்கு மேல வெளியில நிற்கிறது அவ்வளவு சரியில்லைமா. அதுவும் இது மாதிரியான கண்றாவியான உடுப்போடு... "

"... அதுக்காக உன்னை சேலை கட்ட சொல்லலைமா. நாகரீகத்துக்கு ஏற்றவாறு மாறத்தான் வேண்டும். இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இப்பிடி உடம்பை காட்டிடு இருக்கிற மாதிரியான உடுப்புக்கள் தான் வேண்டாம் என்கிறன். " - தந்தை

"உனக்கு பல தடைவை சொல்லி பார்த்துட்டன். நீ தான் காதுல வாங்கிக்கிறதே இல்லையே... வீட்டில இருக்கும் போது தினமும் உன்னைப் பற்றி நினைச்சு கவலைப்பட்டிடு இருப்பார். இப்ப கூட அவர் தான் உன்னை பார்க்கனும்னு அடம்பிடிச்சு வந்ததவர்." தாய் தனது பங்குக்கு கூறினார்.

"போன் போனா போயிச்சுமா... இது போனால் இன்னொன்று... அதுவும் புது மொடொளோட... ஆனா... எங்களுக்கு இருக்குறது நீ மாட்டும் தான்மா... உன்னைப் பற்றி தப்பான ஒரு கதை வந்தாலும் நான் உயிரோட இருக்க மாட்டன். நீ அடிக்கடி எங்களை கேட்பாய் இங்க வந்து இருக்க சொல்லி.... எனக்கும் ஆசைதான் தாங்கம். உன்கூட, உன்னை பார்த்துட்டு இருக்கணும்னு ஆசை தான்மா. வீட்டில இருந்தாலும் உன்னை பற்றியே நினைச்சுட்டு இருப்பன். தனியாக இருந்து கஷ்டப்படுகிறாயே என்று. ஆனா... இந்த மாதிரியான ஆடையோட உன்னை பார்க்கிற சக்தி எனக்கு இல்லைமா... "

"...உன்னை வீரமாக தான் வளர்த்திருக்கிறன். அதனால தான் உன்னை தனியாக வேலைக்கு கூட அனுப்பினன். நீ உழைச்சு தான் நாங்கள் சாப்பிடனும் என்று இல்லை. ஆனாலும் உனக்கு வெளியுலகம் தெரிய வேணும். நாலு பேரோட பழகனும் என்று தான் அனுப்பி வைச்சன்... உண்ட போன் மீது வைச்சுருக்கிற அக்கறையில கொஞ்சம் சரி உன்னில வைச்சுக்கமா... அது போதும் எனக்கு..." - சொல்லி முடிக்கும் போது அவரின் கண்கள் பணித்தது.

"அப்பா... என்னை மன்னிச்சிடுங்கப்பா... ப்ளீஸ் பா என்னை மன்னிச்சிடுங்க... இங்க என்கூட வேலைசெய்யிற நண்பர்களை பார்த்து பார்த்து தான்பா நானும் பழகிக் கொண்டேன்.... ஆனா, உங்களை இந்த அளவு பாதிக்கும் என்று நினைக்கலை... நான் என்னை மட்டுமே நினைச்சேனே தவிர உங்களை பற்றியோ அம்மாவை பற்றியோ நினைச்சுபார்க்கலைப்பா... சாரிப்பா.... இவ்வளவு வேதனையையும் இத்தனை நாளாக உங்களுக்குள்ளையே புதைச்சு வேதனைபட்டிருகீங்கலே... நீங்க கிரேட்பா.... உங்களைபோல அப்பா யாருக்குமே கிடைச்சுருக்காது.... நாளைல இருந்தே என்னை மாற்றிக்கிறேன்பா... கொஞ்சம் டைம் கொடுங்க. உடனே மாறுறது கஷ்டம் தான். ஒரு கிழமைக்குள்ள மாறிடுறன்... நீங்க ரெண்டு பெரும் என்கூடயே இங்கயே இருங்கப்பா... ப்ளீஸ்... " தந்தையின் மடியில் தலை வைத்து அழுதாள். தாயும் கூடவே அவள் முதுகை தடவிக் கொடுத்தாள்.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (4-Jul-15, 5:08 pm)
Tanglish : naagareega mogam
பார்வை : 655

மேலே