ஐஸ்
 
 
            	    
                அது ஒரு கோடை விடுமுறை. முற்பகல், வெயிலைக் கூட பொருட்படுத்தாத நானும் என் சகாக்களும் வழக்கம் போல் மைதானத்தில் அந்த குட்டிச் சுவரின் ஓரம் விளையாடிக் கொண்டிருந்தோம்.  கிரிக்கெட் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது.  உற்சாக விளிம்பில் திடீரென ஆட்டம் டிக்ளர் ஆனதைப் போல ஸ்தம்பிக்க ஒரே பதட்டம், அலைபாய்ந்த கவனமாய் தடுமாற மனம் முழுதும் குட்டிச்சுவரை அடுத்திருந்த அந்த ஒற்றையடிப் பாதையிலேயே குவிந்தது. பளீச்சென ஒரு அழகு தேவதை  நடந்து வந்திருந்தாள். கடவுளின் உன்னதமான படைப்பென உள்ளுக்குள் சொன்னது.  அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டும், மெலிதான டாப்ஸும் மேனியில் மெனக்கெடாமல் கிடக்க, வர்ணம் பூசாத சிகப்பு உதடுகள் சிரிப்புக்கும், மௌனத்திற்கும் இடையே இருக்க, கருவிழிகள் ரெண்டும் பளிங்குக் குண்டுகளாய் உருண்டுக் கொண்டிருந்தன.  கண்டிப்பாக அவள் ஒர் ஆங்கிலோ இந்தியனாக இருப்பாளென ஒரு டெலிபதி சொல்ல. அவள் அப்பாதையில் மறைந்தாள். புட்டியை வாயிலிருந்து பிடுங்கிய பிள்ளைகளாய் ஏக்கமுடன் குட்டிச் சுவரோடு சுவராகினோம்.
அன்றிலிருந்து பேச்சும், மனதும் அவளைப் பற்றித்தான்.  விளையாட்டு என்பது வெறும் விளையாட்டாகி விட. அவள் வந்து சென்ற அப்பாதையில் ஓயாது பார்வை அலைந்திருந்தது. அலி அவளழகை எப்போதும் வர்ணித்தவனாய் இருந்தான். (அலி எங்க டீம் கேப்டன் தாந்தாங்கிற தலக்கணம் புடிச்சவன். எல்லாத்துலயும் அவந்தான் மொத ஆளாயிருப்பான் அலி என்ன எலின்னு நெனைச்சியா புலிடான்னு பஞ்ச் அடிப்பாங் )
     
“அன்னிக்கி அவள சரியா பாக்கலைடா இன்னிக்கி நா மிஸ் பண்ண மாட்டேங்ல” என  முன்னமே மரத்திலேறி ரிசர்வ் செய்துக் கொண்டான் திருக்கை (ஆமாங், அவனுக்கு அவுங்க வீட்ல வெச்ச பேரு சரவணன் இருந்தும் ‘திருக்கை வாலு’ ன்னு தான் கூப்பிடுவாங்க அதையே நாங்க செல்லமா ‘திருக்கை’ன்னு திருத்திட்டோம்) அவள் வரவு நிச்சயமில்லாதிருந்துங்கூட காத்திருந்தோம்.  காத்திருந்த பாதையில் ஐஸ் வண்டி வந்திருக்க
    
 “டேய் ஐஸ்டா… ஐஸ்” என்று ஆவலில் மூர்த்தி (மூர்த்தி எப்பவுமே ஏதாவது திண்ணுக்கிட்டே இருப்பான் அதுதாங் அவங்கிட்ட புடிக்காத விஷயம். அப்புறம் எப்பவுமே லேட்டாத்தான் வருவான் இல்லன்னா சுத்தமா வரவே மாட்டான் சரியான இர்ரெகுலர் ஃபெல்லோ ஆனா ரொம்ப நல்லவன்) தனது சட்டையிலிருந்து சில்லறையை எடுக்க மற்றவர்களும் அவரவரது பைகளை துழாவி காசுகளை எடுக்க அந்நேரம் பார்த்து என்னிடம் ஒருபைசாக் கூட இல்லை
    
 “டேய் எங்கடா? எடுறா…”
     “இல்லடா நாங் கொண்டு வரல”மூர்த்தி சந்தேகத்துடன் எனது கால் சட்டை, மேல் சட்டையில் என கை விட்டு துழாவி நெளிய வைத்தான்.
     “இல்லையா?
     “அதாங் சொன்னேங்…ல”என கையில இருந்த சில்லறைக்கு வாங்கி ஆளுக் கொன்றென  உரிஞ்சினோம்.
     “டேய்…டேய்…அங்க பாருடா அவ”ன்னு அலி அவசரப்படுத்த இந்தியா-பாகிஸ்தான் மேட்சில் இந்தியா விக்கெட் இழந்ததை போல அவ்விடமே களேபரமானது.
     “ச்சே….போச்சே…ஐயோ...”என சிலாகித்து கொள்ள ஐஸ்காரர் பதறித் திரும்ப அவளைப் பார்த்தவராய்  எங்களை ஒரு முறை முறைத்தார்.
     “ச்சே…நாங் என்னமோ ஏதோன்னுல பதறிட்டேங்!”ன்னு முனுமுனுத்தார். இருந்தும் நாங்கள் அவரைக் கண்டு கொள்வதாயில்லை.  “இதுங்கல்லாங் எங்க”ன்னு தலையில் அடித்துக் கொண்டு நடையைக் கட்டினார். வாயில் வைத்த ஐஸ்யையும், அவள் மீது வைத்த ஐஸ்யையும் எடுக்கவே மனமில்லாதிருந்தது. அவள் மீது தவழ்ந்த தென்றல் இதமாய் தழுவிப்போக  கொஞ்சம் கொஞ்சமாக ஐஸும், நாங்களுமாக கரைய, அவளும் தூர கரைந்து போனாள்.
அந்த பாதையை நோட்டமிடுவதிலேயே விடுமுறை வேமாகவே கழிந்துக் கொண்டிருந்தது. கிரிக்கெட் கிளீன் போல்டு ஆனது.
     “கிரிக்கெட் விளையாட போலாமா?” என்றாலே அவளைப் பார்க்க போலாமா? ங்குற கோட்வேர்டை  கொண்டோம். கிரிக்கெட் மட்டை, பட்டையெல்லாம் தலையணைகள் ஆகின. புல்வெளியில் மல்லாந்து வான்வெளியை பார்த்து பகல் கணா கண்டிருந்தோம். திருக்கை மட்டும் மரத்தின் மேல் வாலில்லா குரங்காக தாவிக் கொண்டிருந்தவன்  திடீரென
     “டேய்…டேய்…அவ வர்றடா…வாங்க…” என கத்த மல்லாந்து கிடந்தவை யெல்லாம் ஏகிறி குதித்தது. சிவா பதற்றத்தில் குட்டிச் சுவரில் இடமில்லை என்றதும் குழப்பத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கால்களை வைத்து நிலையில்லாமல் நின்றான். ஆனால், அங்கு அவளில்லை. நிலையில்லாது நின்றிருந்த சிவா தடுமாற பொத்தெனக்  கீழே சரிந்தான். (சிவா எங்க வீட்டு பக்கத்தில இருக்கான். எதுக்கெடுத்தாலும் சகுனம் பார்ப்பான். அவன் பேரயே ‘ஷிவா’ ன்னு தான் எழுதுவான். ஏதோ நியூமராலஜியாம்மா அதுமட்டுமில்ல இப்டி ஏதேதோ புதுசு புதுசா  தினமொன்னு அவுத்து விடுவாங்)
     “ஹீ...ஹீ…”ன்னு திருக்கை கைத்தட்டி சிரித்தான்.  அப்போது தான் புரிந்தது எங்களை அவன் ஏமாற்றியிருப்பது. சிவாவிற்கு கை, கால்களில் சிராய்ப்புகள்.  மேலும், திருக்கை கெக்கெ பிக்கெ என பலமாக சிரிக்க. சினம் கொண்ட சிவா கீழே கிடந்த கற்களால் அவனை அடிக்க, மரக்கிளைகள் சிரித்துக் குலுங்கின.  அன்று முழுவதும் காத்து கிடந்தே கதிரவன் சாய்ந்தான். அவள் மட்டும் வரவேயில்லை. மீனேதும் வலையில் சிக்காத  மீனவனைப் போல ஏமாற்றத்தோடு வீடு   திரும்ப சிவா தன் கையில் அடிபட்ட காயங்களை தடவிக் கொண்டே
     “காலைய்ல வீட்லேருந்து வரும் போதே நினச்சேங் அந்த எயித்த வுட்டு கிழவி கண்ணுல பட்டுட்டோமே ரூபி மோதிரம் வேற போடாலயே எதுவும் விளங்காமல்ல போயிடும்னு அதே மாதிரி நடந்துடுச்சு” ன்னு நொந்துகொண்டான்.
     அடுத்த நாள், விடுமுறை என்பதால் எட்டு வரை தூங்குவதை வீட்டில் யாரும் கண்டு கொள்ளவில்லை. காலை நேர டென்ஷனில் வீடு குக்கராய் விசிலடித்தது.  ஆனால், எனக்கோ கிரிக்கெட், மைதானம், அவள்ள்ள்……. நினைவுக்கு வர படுக்கையிலிருந்து  துள்ளி எழுந்தேன் 
     “லீவு அதுவுமா எங்கடா கிளம்பிட்டே?” என்றாள் அம்மா
     “ம்ம்… மேட்சும்மா”
     “சசிதாவோட சைக்கிள் பஞ்சராகி கெடக்கு” 
     “இன்னிக்கி மேட்சிருக்கும்மா”
     “உக்குங்”என சலிப்பு கொட்டினாள். ஒரு வழியாக சமாளித்து வெளியே வந்தேன்.  சிவா கிரிக்கெட் மட்டையுடன் வீட்டிலிருந்து நடையோட்டமாய் வந்தான்.
     “என்னடா? என்னாச்சு?”
     “கிழவி கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு தாங்”என்றான்.
     “மோதிரம்?”
     “ஓ போட்ருக்கேங்” என விரல் மோதிரம்  சிரிப்பு மூட்ட, அவனும் சேர்ந்து சிரிக்க மைதானத்தினுள் ஏற்கனவே டீம் ஆஜராகி அசடு வழிந்தது. அதில் ஒரே ஆச்சர்யம் மூர்த்தியின் வருகைதான்.  எதற்குமே கலந்து கொள்ளாதவன் இப்போதெல்லாம் 100% அட்டெண்டன்ஸ் போடுவதை டீம் நக்கலாய் பார்க்க அவன்  நானிக் கோணினான்.
     “தொடச்சுக்கடா வழியுது”என கொள்ளென மொத்தமும் சிரித்தது.  கிரிக்கெட் ஸ்டெம்புக்களை நட,   பேட்டிங் ப்ராக்டீஸ் தொடக்கமும், முடிவும் இல்லாமல் இருந்தது. யாருடைய மனநிலையும் கிரிக்கெட்டுடன் ஒன்றவில்லை. திருக்கை திடீரெனக் கத்தினான்.
     “டேய்… டேய்… அவப் போறாடா...”என அவன் ஏற்கனவே எங்களை ஏமாற்றியிருந்துங் கூட ஆவலில் மறந்தோடினோம். உண்மையாகவே அவள்  போய்க் கொண்டிருந்தாள். உற்சாகத்தில் அலி வாயில் விரல்களை குவித்து விசிலடிக்க  சத்தம் வந்த திசைப் பார்த்து அவள் திரும்ப அந்நொடி மொத்தமாய் முடங்கியது. ஏதோ வானர வேடிக்கை பார்ப்பதை போல பார்த்து விட்டு திரும்ப  நடந்தாள்.
     “ஹலோ… ஹலோ…” என சிவா.
திருக்கை பரவசக் களிப்பில் கிளைகளை அசைத்து
     “யே சுதா….. லதா….. அபி…..” எனச் சத்தமிட அவள் மீண்டும் அதே வேடிக்கை பார்வை வீசிச் சென்றாள்.  உடனே திருக்கை
   “டேய் அவ பேரு அபி… அபிடா…”
     “எப்டிறா?”
     “நாங் எல்லாப் பேரையும் கத்தி கூப்டேங்ல?”
     “ஆமா!”
     “அபின்னதும் டக்குன்னு அவத் திரும்புனா பாரு ”
     “ஓ அதெ வெச்சா!”
     “ஆமாண்டா அபி….” என்று பலத்த குரலில் கத்த, மரம் அபியெனக் குலுங்கியது. 
அதுமுதல் ‘அபி வருவாளா?’ அபி வந்துட்டாளா?’ அபி போயிட்டாளா?’ என மூச்சுக்கு முண்ணூறுதரம் அபி என்று தான்  எல்லாம் தொடங்கி முடியும்.
வெயில் சரிந்துக் கொண்டிருந்தது. சசிதாவின் சைக்கிளை சரி செய்து கொண்டு போய்க் கொண்டிருந்தேன்.   விடுமுறை என்பதால் என்னவோ சாலையெங்கும் வெறிச் சோடி இருந்தது.   ஆலமரத்து பறவைகள் சல சலவென சங்கீத கச்சேரி நடத்த அதில் ஸ்ருதி விலகிய அபஸ்வரம் ’க்ரீச்..க்ரீச்’ எனக்கேட்க ஒரு கிளி மட்டும் மரக்கிளையிலிருந்து படபடவென கீழே விழுந்தது. சைக்கிளை வேலியில் விட்டு கீழே விழுந்தக் கிளியை கையில் எடுக்க ‘க்ரீச்.. க்ரீச்…’எனத் துடித்தது.  தண்ணீரைத் தேட என்னருகே ஒரு குரல் 
     “ஐயோ…என்னா…ச்சு?”என அபி நின்றிருக்க
    “ஒண்ணும் ஆகல! தண்ணீ வேணும்” என அவளும், நானும் சுற்றி முற்றிப் பார்க்க. ஐஸ் தள்ளு வண்டியில் தொங்கிய வாளித் தண்ணீரில் ஓடிச் சென்று சிறிது உள்ளங்கையில் கொண்டு ஊட்ட ஆசுவாசமடைந்தவளாய்
     “நௌ இட்ஸ் ஆல் ரைட்?”
     “ம்ம்…” என கிளியைத் தடவி கொடுக்க அதை பரிவோடு பார்த்தவளாய் நின்றாள்.  எனக்குள் இது நிஜம் தானா? என்றது. அவளின் வாசனை என்னை எங்கோ கிளறியது.     
     “ச்சு…ச்சு…” என கிளியின் நிலையை எண்ணி பல’ ச்சு…ச்சு…’க்களை அவளின் சிகப்பு உதடுகள் போட்டவை “ப்ளீஸ்… ஏங்கிட்ட கொடேங்” என கைகளிலிருந்து வாங்கிக் கொண்டாள்.
    “இப்ப பறக்குமா?”
     “ஓ…”வென 
     “இப்டியேவா?” என ஆச்சரியத்துடன் கண்களை அகலமாக்கினாள். மெய் மறந்து
     “ம்…”மென அவள் கைகளை மேலே தூக்கினாள் கிளி ‘க்ரீச்… க்ரீச்…’என பட படவென சிறகடித்து மேலே பறந்து மரக்கிளையிலிருந்த தன் குடும்பத்துடன் கூடிக் கொண்டது. 
     “ஸோ நைஸ்” எனக் கிளியை அவள் பார்க்க 
     “ம்…”
     “ரொம்ப தாங்க்ஸ்…எப்டி பஸ்ட் எய்ட்ல்லாங் உனக்குத் தெரியுமா?
     “ம்… தெரியும்”
     “உங்க வீட்ல பேர்ட்ஸ் இருக்கா?”
     “ம்ம்…”
     “இருக்கா…!”என ஆச்சர்யமாய் விழிகளை அகல விரித்தாள் 
     “வீட்ல நெறைய்…யா வளக்குரேங்”
     “ஐ…”என பரவசத்தில் குதித்தாள். என் மனமும் சேர்ந்து குதித்தது
     “உங்க வீடு எங்கெருக்கு”கென ஆவலில் கேட்டாள் தெருப்பேரை சொன்னால் மறந்து விடுவாளோ என கை விரல்கள் சுட்டிக் காட்டி
     “அதோ அந்த தெருவுல தாங் நாலாவது வீடு”
     “ஓ…நைஸ்”என
மரத்தில் அமர்ந்த கிளியினை பார்த்தவளாய் தன் முகத்தில் விழுந்த கத்தை முடியை ஒற்றை விரலால் கோதிக் கொண்டே
    “உங் பேரு?” என கேட்க அவள் முடிக் கோதலில் என் பேர் சிக்கிக் தவித்தது யோசனைக்குப் பிறகு
     “ரகு”
     “ர..கு..வா! நைஸ் நேம்!”
    “செரி பாய் ரகு” என தன் கைகளை அசைத்துவிட்டு சென்றாள் அவள் விட்டுச் சென்ற வாசனையில் என் மனம் அங்கேயே நிற்க கூடு மட்டும் வீடு வந்தது.
இரவு முழுதும் என் பேரை மறந்த ஆச்சரியத்தில்  படுக்கையில் புரண்டு கிடந்தேன். என் பேரை அவள் உச்சரித்த தொனியை சொல்லிப் பழகினேன். அன்றிரவு மிக சுருங்கியது. விடிந்ததும் துரிதமானேன். வீடு, அப்பா, அம்மா, தங்கை, குளியல், காலை டிபன், தெரு, தெருவாசிகள், நண்பர்கள் என எல்லாமே தொலைந்து போயின. நானும், அவளும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். இருந்தோம்.. இருந்தோம்… என் கால்கள் ஒரிடத்தில் நின்றன.  என் மனம்  ஆலமரத்தடியில் காத்து கிடந்ததை அறிந்தபோது காலில் ஒன்று இடரியது.
     “ஐயோ!” நான் விட்டு போன சசிதாவின் சைக்கிள் என்பது நினைவுக்கு வர நல்ல வேள பொரிச்சாங் சைக்கிள் பத்திரமா இருந்துச்சு என நிம்மதி மூச்சுடன் சைக்கிளை ஓட்டியவனாய் மைதானத்தினுள் நுழைய கிரிக்கெட் மட்டையால் கட்டை போட்டது நான் அவளிடம் பேசியவனாய்
     “என்னடா பண்ண?” எனச் சத்தம் 
     “…..”
     “டேய்…சொல்டா…”என்றதும் உணர்வுத் திரும்ப 
     “ஹேங்”
     “எப்டிறா பேசுன?”
     “இல்ல… அவளத்தான் பேசுனா!” ஏதோ செய்யக் கூடாத தப்பை செஞ்சுட்ட மாதிரி என்னை போட்டு துளைச்சான் அலி.
     “டேய்… நீ பயங்கரமான ஆளுடா…” என என்னிடமிருந்து விலகி நடந்தான் மற்ற பசங்களும் என்னை வேண்டா வெறுப்புடன் பார்த்துவிட்டு     
     “அலி என்னடா பண்ணாங்?”
     “நேத்து நாம சாயங்காலம் விளையாடிட்டு போனோம்ல”
     “ஆமாங்” பொறாமையில் என்னை பற்றி குறை சொல்லிக் கொண்டே போனான். அப்போது தான் அந்த இடத்தில அவனும் இருந்ததை அறியலானேன். டீமிலிருந்து தனியாகினேன். இருந்தும் அவளின் நினைவு கூடவே இருந்ததால் தனிமைக் கூட சுகமாய் இருந்தது. திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே..யிருந்…தோம்…
அதிகாலை 8 மணி, ஆம். எனது விடுமுறைக் கால அதிகாலை. முகம் கழுவி தேங்காய் பூத்துண்டில் புதைத்து எடுக்க’பொரிச்சாங்’
     “அம்மா… அம்மா…” என்று தேள் கொட்டினது போல் கத்தினாள். சமையலறை யிலிருந்த அம்மா 
     “என்னடி? ஏண்டி இப்டி கத்துற”என ஓடி வர  இருவரும்  ஜன்னலில் லயித்தார் கள். 
     “நாங் அன்னிக்கி சொன்னேங்ல”
     “ஆமாங்”
     “இந்த பொண்ணுதாம்மா அது”
     “ஓ… ஆமா  ரொம்ப... அழகாயிருக்கா...! மெழுகு பொம்ம மாதிரி”என இருவரும் வாயை பிளக்க.  அது அபி...அபியே தான் நடந்து வந்து கொண்டிருந்தாள்.  அவளைத் தெருவாசிகளும் வைத்த கண் வாங்காமல்  ரசித்தார்கள்.
     “எம்மாடி எம்புட்டு செவப்பு!” என்றாள் ஒருத்தி
     “இது எந்தூரு பொண்ணுடி?”
     “நம்முரு பொண்ணில்ல இது ஏதோ... வெளியூரு மாதிரியிருக்கு” நடந்து வந்த அபி எனை ஏதேச்சையாகப் பார்த்து விட
    “ஹாய் ! ரகு”என்றாள்.  நான் பனியனில் நெளிந்தேன். 
முப்பத்துரெண்டும் தெரிய சிரிச்சது… இல்ல… வழிஞ்சது. பேரை ஞாபகாம கூப்டதே முடியல...  அவ கடகடன்னு எங்க வீட்டு வாசலுக்கே வந்துட்டா சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தவங்க
     “இங்க பாருடி நம்ம ரகுவ தெரியுமாம்லே!”என ஒரு கிழவி நீளமாக இழுத்தாள். பொரிச்சாங் 
என்னிடம்
     “உன்னெ தெரியுமாண்ணே?”
     “ம்”
     “வாம்மா”வென அம்மா உள்ளே அழைக்க கத்திரி வெயிலிலும் வீட்டிற்குள் ஜில்லென்றது. அவளிடம்
     “இவுங்க தாங் அம்மா இவ என் தங்கச்சி சசிதா”ன்னு அறிமுகப்படுத்த அவள் தங்கையின் கைகளை குலுக்கினாள்.  சசிதா குஷியாகி
     “கிளாட் டூ மீட் யூ” என்றாள். ஐய்ஐய்யோ பொரிச்சாங் வாய வெச்சுட்டு சும்மா இருக்கமாட்டேளேன்னு பயந்தேன் ஏன்னா! பொரிச்சானுக்கு அற குறயாத்தாங் இங்கிலிசு தெரியுங் அதனாலத்தாங்.  அவளப் பத்தி நாம தாங்க கவலைப்படனும் அவ எதுக்குமே இதுவர பயந்ததேயில்ல அப்டியொரு ராட்சசி.
     “வாட்ஸ் யுவர் நேம்?
     “மை நேம்ஸ் அனீ” எனையும் மீறி 
     “என்ன?”
     “அ.னீ…” அப்போது தான் புரிந்தது அபி என்றழைத்ததும் அவள் திரும்பி பார்த்தது. அபிக்கும் அனீக்கும் இருந்த வித்தியாசத்தில் என்று. பேசிக் கொண்டே இருந்த அபி ச்சீ... சாரி அனீ என் வீட்டுத் தாழ்வாரத்தில் இருந்த கூண்டுப் பறவைகளை ஆர்வத்துடன் பார்த்து
     “இது என்ன பேர்ட்ஸ்?”
     “ஓ… அதுவா அது ஹம்மிங் பேர்ட்ஸ்” என முந்திரிக் கொட்டையாய் சசிதா.  பறவைகள் ‘க்ரீச்..க்ரீச்’ என
     “வாவ்… வாட் எ சவுண்ட்!”
     “இதெல்லாங் என்னோட பெட்ஸ் தான்” அத்தோட விட்டாளா அவள் “பெட்ஸுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் எங்க அண்ணணுக்கு அவ்வளவா இதுலலெல்லாம் இன்டரஸ்ட்டே இல்ல” 
   “ம்ம்…”
   “நீங்க எப்டி?”
   “யெஸ் ஐ லவ் பேர்ட்ஸ்”
   “ஓ…இதெல்லாம் எங்க பாட்டி எனக்கு கொடுத்தது” என்றவளாய் கூண்டிலிருந்த லவ்பேட்ஸ்களை “இந்தாங்க இது என்னோட கிப்ட்”என பரிசளிக்க
    “இட்ஸ் ஃபார் மீ!”
     “ஆமாங்…உங்களுக்குத்தாங் “
     “ஓ…தெங்க்ஸ்! ஹவ் குயூட்... நைஸ்”எனப் பாராட்டினாள். அவர்கள் நீண்ட நாள் நண்பிகளை போல் குழாவினார்கள். எனைக் கொஞ்சமும் கண்டு கொள்வதாயில்லை.  கடிகாரத்தை  பார்த்தவள்
     “ஓ மை காட் டைம் ஆச்சு. ஓகே அப்ப நாங் கிளம்புறேங் “
     “கிளம்புறீங்களா?  அம்மா...அனீ… கிளம்பிட்டாங்க…”என்று சசிதா அலற இன்னுங் கொஞ்ச நேரம் இருந்ததாங் என்னவாங்? என்றது எனக்குள்.
     “பய் ரகு” என்றாள் 
    “பய்”என அம்மாவும் அனீக்கு விடை கொடுக்க, கூண்டு கிளிகளுடன் கையசைத்து சென்றாள். ஜில்லென்ற மழை தனிந்து, மீண்டும் வெட்கையில் வீடு வெறிச்சோடியது.
சிவா கிழவியின் கண்களில் படாதவாறு ஓடி வந்து கொண்டிருந்தான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவனும் சிரித்து விட ஒரே கலகலப்பானது. திடீரென சிரிப்பு சீரியஸ் ஆனது. என்னை வேண்டாதவனாய் முகத்தை திருப்பி கொண்டு வேக வேகமாய் நடந்தான். நானும் சீரியஸ் ஆனேன். ஏனெனில், என்னிடம் முகத்தை திருப்பி கொண்டு பழைய மாதிரி பேசாது போனான் என்பதற்காக அல்ல. அவன் அணிந்திருந்த மேட்சுக்கான வெள்ளைநிற உடைதான் காரணம். இதுவரை நானில்லாது எந்த மேட்சும் நடந்ததே இல்லை.  போன மேட்சில் ‘மேன் ஆப் தீ மேட்ச்’ வேறு கொடுத்தார்கள். ஏன்? எதுக்காக? என்னை டீமிலிருந்து விலக்கினார்கள் என்கிற கோபம் என் நுனி மூக்கினை முட்டியது. என் தலையில் ஒரு ‘கிறுகிறு’ அடக்க முடியாதவனாய்
      “டேய்…டேய்…சிவா” கூப்பிடக் கூப்பிட காதில் விழாதவனாய் நடந்தான்.
     “மேட்சுன்னு ஏண்டா எனக்கு சொல்லல? சொல்டா? டேய்…சிவா... சிவா…”என்று கூப்பிட்டு கொண்டே அவனைத் துரத்திச்  செல்ல அவன்  நின்று பதில் கூறாதவனாய் போய்க் கொண்டிருந்தான். நான் வேகமாக ஓடி அவனை முன்னேற விடாமல் தடுத்தேன்.
      “ம்ம்...நீ எங்க? ப்ராக்டீஸ்க்கு வந்தே?”
     “வரலதாங் அதுக்காக… அதுக்காக என்ன டீம் லேர்ந்தே விலக்கிடுவீங்களா?”
     “ஆமாங்” என்று எனை தள்ளிவிட்டு நடக்கலானான்.
     “டேய்…சிவா...”
     “நீ கிடயாது ப்ராக்டீஸ்க்கெல்லாம் வந்தாதாங்” என்று சத்தமாக சொல்லிவிட்டு மைதானத்தினுள் நுழைந்தான். அழுகையும், ஆத்திரமும் பொங்கியது.
 
    “ச்சே… இவனுங்கல்லாங் ஒரு ப்ரெண்ட்ஸா!” என்று வேதனையுடன் திரும்பலானேன். இந்த தடவயும் ‘மேன் ஆப் தீ மேட்ச்’ வாங்கினுங்கிறது தாங் என்னோட ஆசை. அது நிராசையாயிடுச்சு. வழியில் மூர்த்தி வந்து கொண்டிருந்தான். எனை பார்த்து வெட்கித் தலைக் குனிந்தான். என் முகமே அவனுக்கு காட்டி கொடுக்க பொறுத்து கொள்ள முடியாதவனாய்
     “சாரிடா…” என்றான் அவனுடைய அக்கறையில் அழுகை பீறிக் கொண்டது.
     “ரகு…  அழதடா…  ரகு…”என அவன் சமாதானம் சொல்லியும் என்னில் அடங்காத அழுகையாக இருக்க “ரகு...நாங்க எவ்ளவோ சொன்னோம்டா அலிதான்… செரி நீ அழாத” என துக்கம் தொண்டையை அடைத்தது என்னால் எதுவுமே பேச முடியவில்லை. கண்ணீரை துடைத்தவனாய் அங்கிருந்து நடந்தேன்.
    “டேய் ரகு வா.. கிரவுண்டுக்கு போவலாம் வா…”என என்னை மைதானத்தினுள் இழுத்தான். ஆனால் என் வறட்டு கெளரவம் 
     “இல்ல நா வரல”ன்னு அவன் கைகளிலிருந்து விடுபட்டு நடந்தேன்.  ஆனால், மூர்த்தி என்னை பின் வந்தவனாய்  பரிதாபப்பட்டு நின்றான்.
மன வேதனையோடு வீடு திரும்பி கொண்டிருந்தேன். வழியில் ‘அனீ’ என்னை பார்த்து விட்டாள். நானும் அவளை பார்த்துவிட நான் என் முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டேன்.
     “ஹாய் ரகு “என்றாள் அனீ.
     “ஹாய்”
     “உங்க வீட்டுக்குத்தான் போயிட்டு வற்றேங், ‘டுடே நைட் நாங்க எங்க ஊருக்கு கிளம்புறோங், அத சொல்லனும்னு தான்” என்றாள் என் மனம் நொறுங்கியது.
     “அப்டியா? அப்ப எப்ப திரும்ப வருவீங்க?”
     “இங்க டாடியோட ரிசர்ச் முடிஞ்சது ரகு அதனால…”
     “அதனால…?”
     “இனிமே இங்க வர்ற வேல இல்ல”என்றாள். விரக்தியின் உச்சத்தில் இருந்தேன். அவள் ஏதெதோ பேசிக் கொண்டிருந்தாள். எதுவுமே காதில் விழவில்லை. உரைந்து நின்றேன். கடைசியாய்... கைகளை அசைத்து
     “ஐ மிஸ் யு பய் ர..கு…”என்றாள்.  அவள் என் பெயரை உச்சரித்தது அதுவே கடைசி முறை. 
ஆனால், முதல் முறையாக அன்று தான் என் இதயத்தை எனக்கு உணர வைத்தாள். பள்ளியில் வகுப்பாசிரியர் ஒவ்வொரு முறை இதயத்தை பற்றியும், அதனுடைய செயல்களை பற்றியும் சொல்லும் போது என்னில் ஆயிரம் கேள்விகள் கேட்கும்.  இன்று புரிந்தது. ரணமாய் வலித்தது. சிவாவின் எதிர்வீட்டு சூன்யக்கார கிழவி கண்களில் கூட படவில்லை. இருந்தும் ஏன்? இப்படியெல்லாம்? தோல்வி முத்திரையாய் ஆனேன்.  எல்லாமே சூன்யமானது. வீட்டில் சசிதா
     “அண்ணே… அனீ வந்திருந்தா…! ஊருக்கு போறாங்களாங்! ஊங்கிட்ட சொல்ல” 
     “ம்…தெரியும் வழியில பாத்தேங்” என அம்மா
     “ஏம்பா ரகு என்னப்பா ஆச்சு உனக்கு?”என்றாள் 
     “ஒண்ணுமில்ல” என்றன உதடுகள்
     
“அப்பறம் ஏங் முகம் வாடிக்கிடக்கு?”
அனீயின் பிரிவு துயரத்திலிருந்தவன்
     “டீம்லேர்ந்து என்னை எடுத்துட்டாங்க” எனக் கிரிக்கெட் மீது பழியைப் போட்டேன்.
     
“ஏம்ப்பா?”
     “ம்… தெரியல!”என படாரென கதவினை அடைத்து கொண்டேன். கண்ணீர் தலையணைகளை கணமாக்கின. பலமுறை எனது அறை கதவுகள் தட்டப் பட்டும் நான் திறக்காதிருந்தேன். மிண்டும் கதவுகள் தட்டப்பட்டது. ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக  
     “நா மூர்த்திடா… கதவத் திற…“என்றது கதவுகளை திறந்தேன். மூர்த்தி,சிவா,திருக்கை,என அலியைத் தவிர நின்றிருந்தனர்
     “ஏண்டா?” என மூர்த்தி சிரித்துக் கொண்டே“நாளைக்கு மேட்சுல நீ இருக்க, காலையில வந்துரு” என்று கட்டி பிடித்து ஆறுதலை சொன்னான்.
     “அத ஏம்ப்பா கேக்குற டீம்லேர்ந்து என்னை எடுத்துட்டாங்கன்னு வந்ததுலேர்ந்து எதுவும் சாப்பிடாம கொள்ளாம வெறும் வயிறா ரூமூக்குள்ளயே கிடக்கான்” என வறுந்திக் கொண்டாள் அம்மா.  அதற்குள் திருக்கை
     “டேய் ரகு நீ இல்லாம மேட்சே இல்லடா!” எனத் தேற்றினான். ஏதோ ஒரு சந்தோஷம் திரும்ப வந்தது.
அடுத்த நாள், அக்னி நட்சத்திரம் உச்சமாய் தகதகத்தது. மேட்ச் தொடங்கியது. அலி பவுலிங் போட மற்றவர்கள் ஃபீல்டிங் பார்த்தோம். எதிரணி பட்டையை கிளப்பியது. மைதானத்தில் பார்வையாளர்களின் ஆரவாரம் எதிரணிக்கே  இருந்தது.  இருந்தும், எங்கள் அணி நம்பிக்கை இழக்கவில்லை அலி எச்சரித்து கொண்டே இருந்தான்.  அடுத்த ஓவர் சிவா மோதிரத்தை முத்தம் கொடுத்தவனாய் பந்தினை வீச,  எதிரணி மட்டையால் விளாச பந்து சூரியப் பந்தினைத் தொட்டுவிட முயற்சித்தது. மைதானத்தில் பார்வையாளர்களிடையே தாரை தப்பட்டை கிழிந்தது.
அவ்வப்போது மனம் ஏனோ அவள் வந்து சென்ற அப் பாதையிலே இருந்துவிட்டு வரும். அவளின் நினைவுகள் யாவும் மறக்க முடியவில்லை. மறந்து விட நினைக்கிறேன். முடியவில்லை. அவளின் நினைவுகள் என்னில் வலித்தது. எதிர்பாராதபோது
     “டேய்...டேய்...ரகு...ரகு…ஈஸி…கேட்ச்... ஈஸி கேட்ச்…”என்ற சத்தம் என்னருகில்  
சுதாரித்தவனாய் மேலே பந்தினை அன்னாந்து பார்க்க வட்ட வட்டமாய் சூரியப் பந்தின் வெளிச்சம் என் கண்களைக் குத்தியது. கண்கள் கலங்கி  கண்ணீர் மல்கிட  அனைத்தும் காணாமல் போனது.
  “டேய்…ரகு..ரகு ஈஸி கேட்ச்டா”என மொத்தமும் கத்தி கொண்டே இருந்தது. பார்வையாளர்களிடமிருந்து ஒருமித்த ‘ஓஓஓ….’ வென்ற அலறல் சத்தம் பந்து பவுண்டரியை தொட்டதாய்  உணர்ந்தேன்
     “ச்சே…ஈஸி கேட்ச் இப்டி மிஸ் பண்ணிட்டியே ச்சே...போடா நீ சரியான வேஸ்டுடா”என அலி வருத்தப்பட்டு போனான்.  அனல் காற்று சுட்டது நான் வெறுமையாய் நின்றேன்.    கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க பார்வையாளர்களிடமிருந்து மீண்டும் ‘ஓஓஓ…’ வென்ற அலறல் சத்தம் என்னை தள்ளிவிட்ட உணர்வு நான் கீழே புரண்டு விழ “நம்ம இந்த மேட்சுல அவ்வளதான்”என அலியின் தோல்விக் குரல் கேட்க சிறிதில் எல்லாம் என்னில் இருண்டு போக,  தாரை தப்பட்டை சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது.
 
                     
	    
                
