உசுரு

பழைய சாமான்களையும்,தேவையில்லாத பொருள்களையும் சில வீட்ல சொத்து சேர்க்குறத போல சேர்த்து வைப்பாங்க. சில வீட்ல அது மலை மாதிரி குமிஞ்சு கிடக்கும். சிலர் அதை ஒழிச்சு கட்ட நாளு, கிழமை பார்ப்பாங்க. சிலர் தாலி கட்டுன மனைவியா நெனைச்சு அந்த அடசலோட அடசலா குடும்பம் நடத்துவாங்க. இன்னும் சிலர், வண்டு, பூச்சி, பொட்டுக்கெல்லாம் அத்தோட அடைக்கலம் கொடுத்திருப்பாங்க. இதுக்கெல்லாம் சரியான உதாரணமா ஒருத்தர சொல்லனும்னா… ஓ.. அதுக்குள்ள உங்களுக்கு ஒருத்தர ஞாபகம் வருதா? இருக்கலாம்! ஆமா, அந்த மாதிரி ஒருத்தர் நம்ம எல்லாரோட வாழ்க்கையிலயும் இருக்காங்க, என் அப்பாவோட சிநேகிதர் ஒருத்தர் அவர் பேரு ’டி.எம்.எஸ்’ ஆமா, எல்லாரும் அவர அப்படித்தான் கூப்பிடுவாங்க ஏங்… நானும் அப்படித்தான்

“டி.எம்.எஸ்.மாமா...”ன்னு தான் கூப்பிடுவேன். ஏன்? அவரு டி.எம்.எஸ்.ங்கிற பாடகர் மாதிரி தோற்றம் இருக்கறதாலா? இல்ல உண்மையிலே அவர் பேரோட இன்ஷியலா?.ங்கிற கேள்வி எனக்குள்ள அடிக்கடி தோணிகிட்டேயிருக்கும்! எனக்கு மட்டுமில்ல என்ன மாதிரி எல்லாருக்குமே தோணியிருக்கும். ஆனா, இதுவரைக்கும் யாருக்குமே தெரியாத ஒரு ‘சிதம்பர ரகசியம்’ அது!. கிட்டத்தட்ட அந்த பேருக்கேத்த மாதிரி முகம் ஆனா, டி.எம்.எஸ் மாதிரியெல்லாம் கண்டிப்பா அவருக்கு பாட வராது. ரேடியோ பெட்டிய டியுன் பண்ண வரும் பாருங்க ‘கரகர’ன்னு ஒரு சத்தம் அந்த மாதிரி இருக்கும் அவரு சும்மா பேசுனாலே, அதுல எங்க பாடுறது! மத்தபடி, அவர பாக்குற எல்லாருக்குமே ஒரு சின்ன மரியாதை கூட வந்து ஒட்டிக்கும்; அப்படியொரு தோற்றம்; பெருசா வேலை, வெட்டின்னு கிடையாது; கோயில், பூஜை, புனஸ்காரம்ன்னு ஊர் ஊரா சுத்துவாரு ஏதாவது கோயிலுக்கு போயிட்டு வந்துட்டாருன்னா ஒரு பெரிய சாதனை பண்ணிட்ட மாதிரி நாலு நாளைக்கி அதப்பத்தியே பேசிட்டுருப்பாரு. அது மட்டுமில்ல, யாராவது ‘தரிசனம் எப்படி இருந்தது ஓய்?’ன்னு கேட்டுட்டா போதும், நேர்ல போய் தரிசனம் பண்ணிட்டு வந்த ஒரு பக்தி பரவசத்தை பேச்சுலயே கொண்டாந்திடுவாருன்னா பாருங்களேங் அப்படியொரு பக்திமான். கடைசியா

“வீடு வரைக்கும் வாயேங்…! பிரசாதம் தர்ரேன்…!”னு கூப்டு கையில பிரசாதத்தோட தான் அனுப்புவார். அவருகிட்ட எங்க ஏரியாவுல ஏகப்பட்ட பேரு பிரசாதம் வாங்கியிருக்காங்க ஏன்? நானுந்தான் (ஹி…ஹி...ஹி...) எங்க அப்பா ஒரு நாளு

“டேய்…அமன் டி.எம்.எஸ்ஸு பிரசாதம் கொடுப்பாரு வாங்கிட்டு வா…”ன்னு என்னை அனுப்பி வெச்சாரு. முதல் தடவையா அவரு வீட்டுக்கு போறோமே! வழி தெரியாதே!ங்கிறதல்லாம் இல்ல. ‘பெயர் சொன்னால் போதும் தரம் மிக எளிதில் விளங்குங்’கிற மாதிரி ‘டி.எம்.எஸ் வீடு’ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவர் வீட்ட பார்த்து கைய நீட்டிடு வாங்க ‘அதோஅந்த வீடு தான்’னு.

“ச்சே, என்ன ஆளுப்பா…! எல்லாருக்கும் இவர தெரிஞ்சுருக்கே!”ன்னு அவர் மேல இன்னும் மரியாதை கூடுனுச்சு. அவர் வீடு அடுத்த தெருவுலதான் இருக்குங்கிறதே எனக்கு அன்னிக்கித்தான் தெரியும். அந்த வழியாத்தான் நாங்க ஸ்கூலு, மார்கெட்டு, பஸ்ஸுக்கெல்லாம் போவோம் வருவோம், இருந்தும் அங்க நான் அவர சரியா கவனிச்சதில்ல. அவர் வீடு ரொம்ப்ப்ப்ப…ரொம்ப பழசு. வெள்ளையடுச்சு பல மாமாங்கம் ஆகியிருக்கும் போல சுவரெல்லாம் அழுது வடிஞ்சது. ஆனா, அவர போலவே கம்பிரம் குறையாம ஒவ்வொரு சுவரும் ஓங்கி ஒசரமா நின்னுச்சு. அதுலேருந்து அவரு எட்டி என்ன பார்த்து

“வாடா பையா வா… உள்ள வா…”ன்னு வெத்தல போட்ட வாய கொதப்பிக்கிட்டே என்னை பாசமா அழைக்க நானும் அவரு வீட்டுக்குள்ள போனேன். அங்க எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. ‘அவரு வீட்ல வெறும் குப்பை... இல்ல... இல்ல... குப்பைக்குள்ளதான் அவரு இருந்தாருன்னு சொல்லனும். ஆமா, நிற்கவே இடமில்லாத அளவுக்கு ஒரே குப்பை. எங்க பார்த்தாலும் செதைஞ்சு கிடந்த பழைய புஸ்தகங்க, துருபுடிச்ச டைப் ரைட்டர் மிஷினுங்க, சுவத்துல தூக்கு கயிறுகளா தொங்கிட்டிருந்த கழுத்து பட்டைங்க, அழுக்கா அடுக்குன சூட்கேஸுங்க, அஷ்டகோணலா கிழிஞ்சு தொங்குன செருப்புங்க, ஷீங்க’ன்னு ஏதோ காயாலாங்கடை மாதிரி இதுலதான் இவரு இருக்காரா…என்ன? இதையெல்லாம் சுத்தம் பண்ண ஆளில்லையா…ஏன்? இவருக்கு பொண்டாட்டி புள்ளைங்க இல்லயா…ஏன்? இப்படி தனியா இருக்கார்?ன்னு ஏங் மனசுல பல ஏன்??? கேட்டுகிட்டே இருக்க

“இந்தா இத அப்பாகிட்ட கொண்டு கொடுத்துரு”ன்னு ஏங்கையில பிரசாத பொட்டலத்த திணிச்சவரு நான் அதிர்ச்சிகுள்ளாகி இருந்ததையும், ‘நீ கிளம்பு’ங்கிற மாதிரியும் என்ன ஒரு பார்வை பார்த்தார். அந்த நொடியே நான் குப்பையிலிருந்து கிளம்பின தூசியா கிளம்பிட ஏம்மனசு மட்டும் ‘டி.எம்.எஸ்’ட்ட சுத்தி கிடந்த குப்பையாச்சு. கால்தானா நடந்து வீட்டுக்கு வர.

“என்ன கொடுத்தாரா?”ன்னு எங்க அப்பா கேக்குற வரை நான் அங்க இல்ல

“ம்ம்...கொடுத்தாருப்பா”ன்னு பிரசாதத்தை கொடுத்தவனாநான்

“ஏம்ப்பா அவரு வீடு அப்டி கிடக்கு?”

“ம்ம்...”ன்னு பதிலேதும் சொல்லாதிருந்தார்.

“அவருக்கு யாரும் இல்லயா?”ன்னு நச்சரிக்க பிரசாத பொட்டலத்தை திறந்தவரா அவரை பத்தியும் மெல்ல திறந்தார் மனசுலேர்ந்து.

“அப்பவெல்லாம் அவரு கிளம்பி வெளியில வந்தாருன்னா... படத்துல வர்ற ஹீரோ மாதிரி பெல்பாட்டம் பேண்டு,பெருசா காலர் வெச்ச சட்டை, பெரிய பக்கில்ஸ் பெல்டு தெரிய பேண்டுகுள்ள சட்டைய இன் பண்ணி, டக்...டக்...ன்னு ஹைஹீல்ஸ் ஷீவுல ஸ்டைலா சிகரெட்டை பத்த வெச்சுக்கிட்டு சும்மா புல்லட்டுல படபடன்னு வருவாரு பாரு வச்ச கண்ண வாங்கமா நாங்க எல்லாரும் அவரையே பார்த்து கிடப்போம்.”அதை சொல்லும் போது எங்க அப்பா முகத்தில ஆயிரம் வாட்ஸ் பல்ப் பளிச்சுன்னு எரிஞ்சது. அதுல டி.எம்.எஸ். ஒரு வாழ்க்கைய வாழ்ந்திருக்காருங்கிறது மட்டும் தெளிவா தெரிஞ்சது.

“அவரு ஒரு கம்பெனியில பெரிய பதவியில இருந்தாரு; ஒரு சின்ன மனஸ்தாபத்துல வேலையே வேண்டான்னு எழுதி கொடுத்திட்டு வந்துட்டாரு; பல தடவை அந்த கம்பெனிக்காரங்க அவர திரும்ப கூப்டும் பார்த்தாங்க, வீடு வரை வந்து கெஞ்சியும் பார்த்தாங்க, வைராக்கியாமா முடியாதுன்னே சொல்லிட்டாரு. அந்த கம்பெனிய விட்டு வந்து அவரால வேற வேலைக்கெல்லாம் போக மனசு இடங்கொடுக்கல. பழைய அந்த பதவி, அந்த வேலை, அந்த கௌரவம்ன்னு பழசயே நெனைச்சு... நெனைச்சு... அவரு அந்த பழைய கம்பெனியோட ஃபைல்ஸ், புத்தகம், பேப்பர், துணிமணிங்கன்னு எதையுமே விட்டு தூர எறியாம அதுலயே தான் உசுர வெச்சு வாழ்ந்துட்டுருந்தார். ஆனா! அவரு சம்சாரம் அவுங்களோட வருங்காலத்தையும்; தன் பையனோட எதிர்காலத்தை பத்தியும்; எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட அவரு கேட்கல. அதனால இவரோட இனிமே இருந்தா தன் வாழ்க்கை மட்டுமில்ல; தான் பையனோட வாழ்க்கையும் எங்க சூன்யமா போயிடுமோன்னு கோபமா தன் குழந்தைய தூக்கிட்டு அந்த அம்மா அவுங்க ஊரோடவே போயிட்டாங்க. அதுலேர்ந்து இவரு இப்படி ஆகிட்டாரு ச்சு…”ன்னு வருத்தப்பட்ட அப்பா முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு ஃப்யூஸா போயி கிடந்துச்சு எனக்கும்

“ச்சே”ன்னு டி.எம்.எஸ் மேல ஒரு இது வந்துச்சு. அவரப்பத்தி யோசிச்சுகிட்டே கிணத்தடியில கை,கால், கழுவலாமேன்னு போன நான் கால் இடறி விழுந்தேன். வழக்கத்துக்கு மாற ஒரு குச்சி கிடந்ததால இடறிட்டு விழுந்த நான் கோபப்பட்டு அந்த குச்சிய தூக்கி தூர வீசி எறியப்போனேன். ஏன்னா..! எங்க வீடு படு சுத்தம். வெச்சா வெச்ச இடத்துல அது அது அப்டி அப்டியே இருக்கும். ஒரு சின்ன குப்பையக் கூட பார்க்க முடியாது. தேவையில்லாத பொருளுன்னு ஒண்ணு இருக்காது. அப்படியொரு சுத்தம்.

“அண்ணே... அத எறியாதேண்ணே...”ன்னு கொறிச்சான் தடுத்து அந்த குச்சிய ஏங்கிட்டேருந்து பறிக்க. ‘கொறிச்சாங்’கிறது வேற யாருமில்லங்க என் தங்கை ‘நிலாணி’தான் எப்பவுமே ஏதாவது வாயில போட்டு ரைஸ் மில்லாட்டம் அரைச்சுகிட்டே இல்ல கொறிச்சுகிட்டே இருப்பா. அதனால அவள ‘கொறிச்சான்’னு தான் கூப்பிடுவேன்.

“எதுக்குமே ஆகாத இந்த குச்சிய வெச்சுக்கிட்டு நீ என்ன பண்ண போறே?”

“இல்ல இது வந்து முருங்கை கண்ணு”

“ம்ம்…”

“இத நட்டு வெச்சா... மரமா... முளைக்கும்!”

“அப்டின்னு யாரு சொன்னா?”

“ஏங் ஃபிரண்டு வீட்ல இந்த மாதிரி கண்ணுதான் நட்டு வெச்சாங்க அது இப்ப பெரிய்ய்ய... மரமா வளர்ந்து நிக்குது!”

“அதெப்படி! நிலாணி இந்த குச்சியில…?”

“இல்லண்ணே, இந்தக் குச்சிய நல்லா ஊனி;முனையில மாட்டு சாணத்தை முதல் பதினைஞ்சு நாளைக்கு வெச்சு; ஒரு வாரம் ஈரம் காயாத அளவுக்கு தண்ணிய ஊத்தி வந்தா; வளர்ந்து பெருசா வரும்ணே”குச்சியின் மீது இருந்த நம்பிக்கை அவளது கண்களில் தெரிந்தது. ஆதனால, நான்

“என்னம்மோ போ…”ன்னு அவளோட விருப்பத்துக்கே குச்சிய நட, அது பாவமா நின்னது.
ஒரு நாள் காலையில, நிலாணியோட சத்தம் வீட்ல ரொம்ப பெருசா இருக்க. அது என்னை தூங்க விடாம தொல்லை பண்ண அவகுரலை கேட்டவனா போனேங். நிலாணி, அம்மா, அப்பான்னு மொத்தமா கூடி நின்னு அங்க எதையோ பார்த்து அதிசயப்பட்டு போயிருந்தாங்க. நிலாணி கத்தி பேசினவ என்னை பார்த்ததும்

“அண்ணே... அண்ணே... நான் அன்னிக்கே சொன்னேங்ல முளைக்குன்னு இப்ப பாருண்ணே”ன்னு அந்த முருங்கைகுச்சியோட பக்கவாட்டுல சின்னதா துளிர்விட்டிருந்ததை காட்டுனா. அதுல வெச்சிருந்த நம்பிக்கை அவகுரல்ல கணீர்னுச்சு. எனக்கோ ஆச்சரியம்! பெரிய சாதனை செஞ்சிட்டோங்கிற சந்தோஷத்துல அவ அத பத்தி பேசுறதும்; அதுக்கு தேவையான தண்ணீய ஊத்துறதும்; பராமரிக்கிறதுமாவே அவ இருந்தா. குச்சியும் மரமா கிடுகிடுன்னு வளர்ந்து வர. ஒரு நாள், மதியம் சாப்பிடும் போது

“டேய்...அமன் இது நம்ம மரத்து கீரைடா!”ன்னு தட்டுல பரிமாறுனாங்க. அந்த நிமிஷம் எனக்கு ஒண்ணும் விளங்கல

“என்னம்மா சொல்றீங்க! இது நம்ம மரத்து கீரையா?

“ஆமாண்ணே, காலையில நானும் அம்மாவும் ஒண்ணாத்தான் பறிச்சோம் நீ எப்டியிருக்குன்னு சாப்ட்டு சொல்லுண்ணே”ன்னு முன்னமே வாயில் மென்னபடி நிலாணி சொன்னா. இனிப்பா, சுவையா ரொம்ப நல்லாயிருந்தது. எப்பவும் கீரைய தொடாத நான் அதிலேருந்து சாப்பிட பழகிட்டேன். அதுக்கு காரணம்“நம்ம வீட்டு கீரை இனிப்பா! சுவையா! இருக்குல்ல, அதுதாங் உனக்கு புடிக்குது”ன்னு அம்மா சொல்ல.

“ஆமாம்மா! இல்லன்னா அண்ணேங் சாப்டுமா?”ன்னு கொறிச்சான் நக்கலா சிரிச்சா. அதுக்கப்புறம், எங்க வீட்ல அடிக்கடி கீறை சமையல் தான். அதுமட்டுமில்ல, புதுசு புதுசா விருந்தாளிங்க வந்தபடியே இருந்தாங்க எல்லாருமே கீறைய கேட்டுதான். எங்க வீடே கீறையால ரொம்ப பரபரப்பாகிடுச்சு. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க ஏற்கனவே சொல்லி வெச்சிருந்தெல்லாம் வந்து வாங்கிட்டு போவாங்க. ‘முருங்கமர இருக்குல’ அவுங்கன்னு அடையாளம் வெச்சுவேற சொல்ல ஆரம்பிச்சாங்க. எங்க வீட்டு மரத்து கீறை,காயோட சுவை எல்லாருக்கும் நல்ல பரிட்சயமாயிருந்துச்சு. எங்களுக்கு அது ரொம்ப பெருமையா இருக்க.கீறை கேட்டு வர்ற எல்லாரும் நிலாணியபார்த்து

“ராசியான பொண்ணுடி இவ! கைராசிய பாரேங்! இந்த மரம் எப்படி வளர்ந்துருக்குன்னு! இவ வாக்கப்பட்டு போற வீடு கொடுத்து வெச்சுருக்கனும்!”ன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. எனக்கு சில நேரங்கள்ல‘கீறைக்கு காக்கா புடிக்கிறாங்களா? இல்ல நிஜமாத்தான் சொல்றாங்களா?’ன்னு தோணும். அவளும் அந்த மரத்தை போலவே நெடு நெடுன்னு வளர்ந்து நின்னா.

“வயசுக்கு வந்த புள்ளய வீட்ல வைக்கக் கூடாதுங்க, காலாகாலத்துல கல்யாணத்தை முடிங்க”ன்னு அப்பாகிட்ட அம்மா சொல்ல அவளுக்கு உள்ளூர்லயே கல்யாணத்தை பேசுனாங்க. பெரிய உத்யோகத்திலிருக்குற மாப்ளன்னு சீர், வரிச, வரதட்சணையெல்லாம் எங்க அளவுக்கு மீறியே இருந்துச்சு. அதுக்கெல்லாம் வேற வழியில்லாது போக எங்களுக்கு சொந்தமான்னு சொல்லிக்க இருந்த அந்த வீட்டை வித்து கல்யாணத்தை பண்ண வேண்டிய கட்டாயம் வந்துச்சு. தங்கை நிலாணி ‘பொறந்த வீட்ட விட்டு போறா’ங்கிற சோகத்தை விட, ‘வாழ்ந்த வீட்ட விட்டு போறோ’ங்கிற வேதனை தான் எங்களுக்குள்ள அதிகமா இருந்தது. ‘தன் வீடே தனக்கு அரண்மனை’ன்னு மூச்சுக்கு முண்ணூறு தரம் சொல்லிக்கிட்டிருந்த எங்க அப்பாவால அத தாங்கிக்கவே முடியல. வீட்ட விட்டு வந்த கொஞ்ச நாள்ளயே தன் மூச்சையும் விட்டாரு. யாருமே இல்லாத தனிமரமா நான் ஆகிடக் கூடாதேங்கிற எண்ணத்துல எங்க அம்மா முழூ மூச்சையும் எம்மேல பாசமா பொத்தி வெச்சுருந்தா. எங்க அப்பாவோட சம்பாத்யமும் சுத்தமா நின்னு போச்சு இனி ‘என்ன பண்ண போறோங்?’குற கேள்வி எங்ககிட்ட மட்டும் இல்ல!, எங்கள சுத்தி நின்னு வேடிக்கை பாத்த சொந்த பந்தம் எல்லாருட்டயும் கொக்கி போட்டது. ‘ஆண்டவன் ஒருவாசல் மூடுனா; மறுவாசல் திறந்து வைப்பான்னு’ சொல்லுவாங்க. வந்தது திறந்து வெச்ச வாசல் வழியா

“போஸ்ட்”ன்னு நான் எழுதி போட்ட கம்பெனியிலருந்து ஆஃபர் லெட்டர் வர, நானும் அந்த பட்டணத்து கம்பெனில வேலைக்கி சேர்ந்தேன். அம்மாவும், நானும் கொஞ்ச கொஞ்சமா பட்டணத்து வாசிகளானோம். பட்டணம் எங்களுக்கு ரொம்பவே வேகமா, கேலியா, ஆச்சர்யமா இருந்துச்சு. சொந்த ஊர சுத்தமா மறந்திருந்தோம். பட்டணம் எங்க வாழ்க்கையோட இன்னொரு பகுதியாச்சு. வேலய விட்டு வீட்டுக்கு திரும்புன எனக்கு ஒரு சேதியோட வாசல்ல அம்மா காத்து கிடந்தாங்க

“எப்பா…அமன்…நம்ம நிலாணிக்கு பொம்பள பிள்ள பொறந்துருக்காம்ப்பா!”

“எப்ப...! யாரும்மா சொன்னா..?

“மாப்ளயோட போனு வந்துச்சுடா! காலையில 10மணிக்கு புள்ள பொறந்துச்சாம்! புள்ள அழகா…நிலாணியவே உரிச்சு வெச்சுருக்காம்!”அந்த செய்தி காயம் பட்ட இடத்துல வருடி விட்ட மாதிரி சுகமா இருக்க ரொம்ப நாளா மறந்திருந்த சிரிப்ப அன்னைக்கித்தான் நாங்க திரும்பவும் சிரிச்சோம். அம்மா ஊருக்கு போக ஏற்கனவே பொட்டிய கட்டி வெச்சுருந்தாங்க. டிக்கெட்டை தவிர. தங்கை நிலாணி மேல வெச்சுருந்த பாசம் எங்க எல்லாத்தையுமே துரிதப்படுத்திடுச்சு. சரியான நேரத்துக்கு எல்லாம் நடந்துங்கூட எங்களுக்கு எல்லாமே காலத்தாமதமா தோனுச்சு. ஆனா, எங்க மனசு மட்டும் வேகமா எக்ஸ்ப்ரஸூக்கு முன்னாடி ஊர் போய் சேர்ந்தது.
ஆஸ்பத்திரில தன் குழந்தை அழுக நிலாணி

“பாப்பா மாமன் வரலன்…னு அழுவுறியா? இல்ல பாட்டி வரலன்...னு அழுவுறியா?”ன்னு புகுந்த வீட்டு ஜனங்கன்னு ஒரு டஜன் இருந்தும் பொறந்த வீட்டு நெனப்பா எங்களைத் தேடி அவ மனசும், கண்களும் அலைபாஞ்சது ஆவலா தவிச்சு கிடந்தது. எங்கள பாத்ததும் அவளும் குழந்தையாகி அழுதா, தான் குழந்தை நிலாணி அழுதேன்னு அம்மாவும் அழ, நானும் அழுதுட்டேன். பொறந்த குழந்தையும் அழுதுச்சு தன்னோட அம்மா அழுகுரல கேட்டு. ‘பாசத்தை பகிர்ந்துக்க இன்னொரு ஜீவன் இருக்கேங்’கிறது அந்த குழந்தை அழு குரல்ல கேட்டுச்சு. சந்தோஷத்துல, அது ஆனந்த கண்ணீரானது.

“அழதா”ன்னு நிலாணிய மாப்ள தட்டி கொடுத்தவராக இருக்க

“புள்ளதாச்சிகாரி அழக்கூடாதும்மா”ன்னு மாமியா ‘தல பிரசவத்த ஏன்? தாய் தான் பாக்கனுமா என்ன? நாங் பாத்துக்குவேங்’ன்னு பிரசவங்கூட தான் மகளா நெனச்சு தானே நின்னு எல்லாம் பார்த்துகிட்டா. ‘நிலாணி சந்தோஷமா இருக்கா’ங்கிறதும் அவளுக்கு நல்ல புருஷனும், ஒரு நல்ல மாமியாரும், நல்ல குடும்பமும் கிடச்சுருக்குங்கிறதும் அவுங்க காட்டுன பரிவுல, அன்புல தெரிஞ்சது. எங்க அம்மா அந்த சந்தோஷத்தில மிதந்திட்டுருந்தாங்க. இருந்தும், சொந்த ஊரு மண்ண மிதிச்சதுமே நாங்க வாழ்ந்த வீடு, சுத்தி வந்த தெருங்க, பழகுன ஜனங்க, அப்பாவோட நெனைப்புன்னு ஏம்மனச அழூத்திகிட்டே இருக்க ’ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துறலாம்’னு கிளம்புனேங். வழக்கமா நாங்க ஸ்கூலு,மார்கெட்டு,பஸ்ஸ்டாண்டுக்கெல்லாம் போற அந்த பாதையிலயே போனேங். எல்லாம் மாறியிருந்துச்சு. வியாபார விஸ்தரிப்புக்கள்னு பெரிய பெரிய வினெயில் போர்டுகள்ள புதுசு புதுசா முளைச்சிருந்தது. மண் ரோடு தார் ரோடா கணக்கச்சிதமா இருந்துச்சு. இன்னும் கொஞ்ச தூரத்தில பளிச்சுன்னு வெள்ளையடிச்சிருந்த ‘டி.எம்.எஸ் மாமா வீடு’ என்னை ஆச்சர்யபட வெச்சது!. என்ன? ஒரு வேலை டி.எம்.எஸ் மாமா மனசு மாறிட்டாரா? இல்ல பொண்டாட்டி புள்ளயெல்லாங் அவருகிட்ட வந்துடுச்சா?ன்னு எனக்குள்ள கேட்க நடையோட்டமா போனேங் அவரு வீட்டு வாசல்ல நின்னேங். அவரு எட்டி என்ன பார்த்து ‘வாடா பையா வா… உள்ள வா…‘ன்னு வெத்தல போட்ட வாய கொதப்பிக்கிட்டே என்னை பாசமா கூப்டுவாருன்னு. ஆனா...! அங்க அவரு இல்ல! செவுத்துல மாட்டுன போட்டோவுல மாலையோட சிரிச்சுகிட்டு இருந்தாரு..

“ஹலோ! நீங்க…?”ன்னு ஒருத்தரு, அவரு கிட்டத்தட்ட டி.எம்.எஸ் மாமா ஜாடையில இருந்தாரு.

“நான் முன்ன இங்க இருந்தேங்! சா…ரு..?”ன்னு அவரு போட்டோவை பார்த்து கை நீட்ட

“அப்பா காலமாயிட்டாரு”

“யாருப்பா…அது?”ன்னு ஒரு குரல் வீட்டிற்குள்ளீருந்து

“அப்பாவுக்கு தெரிஞ்சவங்களாம்! விசாரிச்சுட்டு போக வந்துருக்காங்கம்மா”ன்னு அந்த பையன் பதில் சொல்ல நான் அவரோட போட்டோவுல இருந்த வைராக்கியமான சிரிப்ப திரும்ப ஒரு தடவை பார்த்தேன். கீழ டி.முருகுசுந்தரம் தோற்றம், மறைவுன்னு எழுதியிருந்துச்சு. ‘டி.எம்.எஸ்’ன்னா ‘டி.முருகு சுந்தரம்’ ங்கிற ரகசியம் அன்னைக்கித்தான் விளங்குச்சு. ஒரு சின்னதூசு கூட இல்லாத அளவுக்கு வீடு சுத்தமா, முழூசா அப்படியே மாறியிருந்தது. அவரில்லாத அந்த வீடு இப்ப வெறும் வீடா கிடக்க

“சார்…”ன்னு அவர் பையன் என்னை கூப்பிட சுதாரிச்சவனா

“செரிங்க… அப்ப நாங்… வர்…ரெங்”ன்னு அங்கிருந்து கிளம்பினேன். டி.எம்.எஸின் நினைவுகளேருந்து என்னால மீள முடியல. நடை ஓரிடத்துல என்னை அறியாமலயே நிற்க. அது எங்க பழைய வீடு இருந்த இடம். ஆனா, அங்க எங்களோட வீடு இல்ல! வேற ஒரு புதுசா கட்டிடந்தான் இருந்துச்சு. தேடுனேங் கிடைக்கல. எங்க வீடு இருந்ததுக்கான எந்த ஒரு அறிகுறியுமில்ல. திரும்பவும் தேடுனேங் ஏங்மனசு, எம்மூளை எல்லாமே பரபரப்பா தேடி கடைசியில களைப்பாகிடுச்சு. களைப்பா இருந்த எம்மூளையில, மனசுல கவனிக்காம போன அந்த ‘முருங்கமரம்’ அடையாளமா ஏங்கண்ணுல…பட்டது. தல நிமிர்ந்…து பார்க்கிற அளவுக்கு எல்லாத்தை விடவும் அது ஒசரமா...பெருசா…அசைஞ்சு நின்னுச்சு. எனக்கு ஒரே ஆச்சர்யம்! ‘நான் இருக்கேன்’னு அது அசைஞ்சு என்ன பாத்து செய்கை காட்டுச்சு, தல அண்ணா…ந்து அதை பார்த்தேன்

பழைய நினைவுகளிலிருந்து...

“எதுக்குமே ஆகாத இந்த குச்சிய வெச்சுக்கிட்டு என்ன நீ பண்ண போறே?”

“இல்ல இது வந்து முருங்கைக் கண்ணு”

“ம்ம்…”

“இத நட்டு வெச்சா... மரமா... முளைக்கும்!”

“அப்டின்னு யாரு சொன்னா?”

“ஏங் ஃபிரண்டு வீட்ல இந்த மாதிரி கண்ணுதான் நட்டு வெச்சாங்க அது இப்ப பெரிய்ய்ய…மரமா வளர்ந்து நிக்குது!”

“அதெப்படி!நிலாணி இந்த குச்சியில…?”

நினைவுகளிலிருந்து மீண்டு...

காணாம போன எங்களோட உசுரா! அது தல நிமிர்ந்து நிற்க.

கண்ணுல கண்ணீர்…

***

எழுதியவர் : அபிமான் (4-Jul-15, 4:25 pm)
Tanglish : usuru
பார்வை : 286

மேலே