குரங்கு பெடல்
ஒரு ஜோடி குறும்பு கண்கள் என்னை பார்த்து சிரித்து சென்றன. எதற்கென அறியாது பதிலுக்கு நானும் சிரித்து வைக்க. என்னை அறியாது சற்றில் நான் அவனை கடந்திருந்தேன். தொடும் தூரத்தில் என்னை அவன் பின் தொடர்ந்து மல்லுக்கட்டி முந்தினான். அந்த முந்தலில் சிரிப்பின் காரணத்தை உணரலானேன்.
“ஓ…! இது ஒரு போட்டி”யென. சைக்கிளின் ஒரு பாதி கூட எட்டாத உயரத்தில் குரங்குபெடலில் ஒரு புறம் தொத்தியும், மறுபுறம் அரணாக்கயிறின் அரை உசுருல அரை ட்ரவுசர் கழண்டும் கிடக்க போட்டியா! அதுவும் முழூசா ஓட்ட தெரிஞ்ச ஏங்கிட்ட” என என்னுள் உறங்கி கிடந்த சிங்கத்தினை சீண்டிவிட அசுரபலத்தில் நான் அவனை முன்னேறினேன். அவன் கண்கள் தோற்ற பீதியில் பின்னே கடந்தன. மீண்டும் ‘முந்திட்டேனே’ங்கிற கர்வத்துடன் குரங்கு பெடலில் சிரித்துக்கொண்டே என்னை அவன் முந்திச்செல்ல. சும்மா போறவனை கூப்பிட்டு வம்புக்கு இழூக்குற அவன் சேட்டையில் குபுக்கென சிரிப்புத்தான் வந்தது. அப்போட்டி இருவருக்கு மட்டுமே நடக்கும் மௌனப்போட்டியானது. கொடி,விசிலு,பார்வையாளர்கள், எதுவரையிலுங்கிற லிமிட்டு கூட இல்லாத ஒரு போட்டி. கண்கள் முந்தியும், பிந்தியுமா சந்திரனும், சூரியனுமா மாறி மாறி துரத்த குண்டு குழிகள் கூட வழி விலகி கிடந்தது. அந்த மேட்டுச்சாலையை தொடர்ந்து நீண்டதொரு வால் இறக்கம் அதில் கட்டை வண்டி கூட புல்லட் டிரெயினாகி விடும் வேகம் அதிவேகம். சொர்கத்தையே தொட்டு விடுகின்ற சில்லிப்பில் அனைத்தும் அதில் மின்னலென பறக்கும். குறும்புக்காரனின் கண்களிலிருந்து தொலைந்திட சாதகமான அவ்விறக்கத்தில் என் வீல்களை விர்ரென அழூத்தி பறந்தேன். சற்று நேரத்திற்க்கெல்லாம் இறக்கத்தை முழூதாய் நான் கடந்திருக்க கண்ணுக்கெட்டும் தூரம்வரை ஒன்றும் பின்னால் காணாதிருக்க மனம் ஆசுவாசப்பட்டு சொன்னது
“அப்பாடா…! அவங்கிட்டேருந்து தப்பிச்சோம்”என. மறுகணமே‘படார்’என அனைத்தும் கிடுகிடுங்க பின்னாலிருந்து பெரிதாய் ஒலித்தது.
“ஆ…!”வென அலரலில் அபரீதம் கேட்க. ஆசுவாசப்பட்டதெல்லாம் பதறி போனது.
“என்னாச்சு?”ங்கிற பீதியில் அத்திசையை நோக்கி அனைத்தும் ஓடின. எனது சைக்கிள் பிரேக் கம்பிகள்‘க்றீச்’சென இழூத்தி நிறுத்த,மனம் அலறிய பக்கமெ அலை பாய்ந்து ஓடியது. அவ்விறக்கத்தில் பேருந்தொன்று தறிகெட்டு நிற்க அனைத்தும் அதற்கு முன் கூடியிருந்தது. அக்கூட்டத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒருவள் மின்சாரம் தாக்கி எறிந்ததைப் போல வெளியே தெறித்து வந்தாள் வெளிரீய முகத்துடன்
“ஐயோ… கடவுளே…! சின்னபையன்… கண்ணெல்லாம் வெளிய வந்து கெடக்கு! பாவம்… யாரு பெத்த புள்ளயோ… ச்சே…”என காணாத கோரத்தை கண்டவளாக தன் காதுகளை கைகளால் இறுக பொத்தி தலையை சிலிர்த்தபடி ஓடினாள்