என் காதலானது
இங்கே தான் இருந்தது...
இப்போது
எங்கே போய்விட்டதெனத்
தெரியவில்லை...
வேடிக்கை என்னவெனில்
தொலைத்ததே நான் தான்...
வேண்டுமென செய்துவிட்டு
வேண்டாத துன்பங்கள்
தற்போதைய நாட்களில்...
கண்மூடிக்கிடக்கையில்
உன் முகம் தோன்றும்...
கண் திறந்து கொண்டாலும்
விழி உன்னைத்தேடும்...
உன்னைக் காணாமல்
காய்ந்துக் கிடக்கும் விழிகளை
கண்ணீர் விட்டல்லவா
நனைத்துக் கொண்டிருக்கின்றேன்...
உண்ணும் பொழுது
உன் நினைவுகள்
நிரப்பப்பட்ட என் நெஞ்சம்
உணவினை
ஏற்க மறுக்கும்...
என் உடலில்
ஒவ்வொரு நரம்பிலும்
உனது நினைவுகளால்
நிரப்பப்பட்ட உதிரம்...
நீ பேசுகின்ற பொழுது
உனது உள்ளமானது
உன் உதடுகள் வழியே
உதிர்க்கின்ற வார்த்தைகளை
என் இதயத்தில்
சேமித்து வைத்து
இரவு முழுவதும்
அசை போட்டுக் கொள்வதில் தான்
எத்தனை ஆனந்தம்...
உன் வார்த்தைகளை
வாங்கிக் கொள்ளும்
என் செவிகளானது
என்னத் தவம் செய்தனவோ ?...
உன் உதடுகளின்
நிறமானது
என் உயிரினைப் பருகும்...
என் ஜன்னல் வழியே
நுழைகின்றக் காற்றை
நுகரும் பொழுது
உன் வாசம் வீசும்...
உன் ஒவ்வொரு
கை அசைவும்
காற்றினில்
ஒவியம் அல்லவா
வரைந்துவிட்டுச் செல்கிறது...
காற்றும் நீரும்
என் உயிருக்கு அவசியம்
என்பது விடுத்து
உன் நினைவுகள் மட்டுமே
என் உயிரினை
வளர்க்கின்றது...
என் காதலானது
கல்யாணம் கேட்கவில்லை...
உன் கண்களுக்குள்
என்னை இருத்திக்கொள்ளத்தான்
கெஞ்சுகின்றது...
என் வாழ்வில்
உந்தன் வரவானது
சிறிது காலம் எனினும்...
புண்ணியம் செய்து
வாங்கி வந்த
வரம் அது...