தூய நட்பும் துளி காதலும்

வெண் மேகப் பெண்ணொருத்தி
தன் அருகே திரண்டிருந்த
குளிர் மேகக் கண்ணன் மீது
சின்னதாய் மையல் கொண்டாள்...!

வானிலை மாற்றம் ஓர் நாள்
சுப முகூர்த்தம் குறித்திட,
மின்னல் இடி மேளத்துடன்
மேகத் திருமணம் மேலே நடந்தது...!

இரவுத் தென்றல் இதமாய்
இருவரையும் உரசிச் செல்ல..
காதல் பார்வை வீசினான் முகிலவன்,
கண்டு சொக்கிய திருமதி முகில்
வெட்கத்தில் கருமை பூசி
காதல் மழையாய்க் கசிந்துருகினாள்...!

துளித் துளியாய்ச் சிதறிய
பெண் மேகப் பிள்ளைகளில்
வைரமாய் மின்னிய துளி ஒன்று,
ஆற்றுப் படுகையிலே வளர்ந்து
நெளிவும் சுளிவும் செறிந்த
பருவ நதியாய் ருதுவாகியது....!

பொலிவும் வனப்புமாய்
இனிய கவி பாடிக்கொண்டு
கன்னி நதி அவள்,
மேடு பள்ளம் பல தாண்டி
எல்லைகள் ஏதும் இன்றி
இன்பமாய் ஓடத் தொடங்கினாள்....!

பக்கத்துப் பட்டியிலே பிறந்த
அகன்ற பரப்பைக் கொண்ட
கம்பீர நதி மன்னன் ஒருவனை
விழியால் கண்டாள் வழியிலே...!

காலத்தின் ஓட்டம் ஓரிடத்திலே
இருவரையும் கட்டியது
நட்பென்னும் நூலினைக் கொண்டு...!

இரவும் பகலும் இணைந்தே
இருவரும் ஓடினர் இங்கும் அங்கும்
கோர்த்த கைகள் இரண்டும் - புதுக்
கோலமிட்டன நதிகளின் நட்பிலே...!

நட்பாய் ஓடிய நதிகளின் மேலே
நன்றாகவே பட்டு விட்டது
ஆற்றுக் கண்ணும் அருவிக் கண்ணும்
சல சலக்கத் தொடங்கியது சுற்றம்...!

இவை எதையும் கண்டு கொள்ளாத
இருவரும் இணைந்தே சங்கமித்தனர்
தூய நட்பும் துளி காதலும் நிரம்பிய
ஓர் பெருஞ் சமுத்திரத்திலே....!!!!

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (5-Jul-15, 4:40 pm)
பார்வை : 840

சிறந்த கவிதைகள்

மேலே