பாதியில் விட்டுச்சென்ற கவிதையில்

பாதியில் விட்டுச்சென்ற கவிதையில்...

விதைக்கப்பட்ட வார்த்தைகளை விட
வரும் வழியில் தடம் புரண்டு தவிக்கின்றனவோ
என பதறவைக்கும் வருகைதரா வார்த்தைகளில் தான்
அதிகம் உணர்வுகள் பூக்கின்றன போலும்...


என்ன சொல்ல எத்தனித்து எழுதுகோலும் உழுததோ
பழுது கண்ட சக்கரமாய் பாதியிலே நின்றது
தீர்ந்து விட்ட மையென்றால் மீண்டும் நிறைத்தல் சாத்தியம்
உறைந்துவிட்ட எண்ணங்களோ உள்ளிருக்கும் ரகசியம்

புரிந்த நேற்று விடிந்த இன்று புலரப்போகும் நாளையா
நெகிழ்ந்த நேசம் குமைந்த கண்ணீர் புன்னகையின் பயணமா
யூகித்து இதுவென்று சொல்லிடவும் இயலுமோ
உயிர்பெற்று உருக்கொள்ளும் வரவிருக்கும் வார்த்தைகள்

பாதியில் விட்டுச்சென்ற கவிதையில்...
மொழிகள் துறந்த மௌனங்களின் ஆழ்குரல் கேட்முமெனில்
பாதுகாப்பாய் தொலைத்திடலாம் பாதியில் நிறைந்துள்ள
கவிதை சுமந்த தாளினை

வெளிப்பாடுகளற்ற வெளியிலும் சொல்லப்படாத உள் கசிந்திடும்...
...பாதியில் விட்டுச்சென்ற கவிதையில்!

எழுதியவர் : மதுமதி . H (5-Jul-15, 10:37 pm)
பார்வை : 78

மேலே