பரவாயில்லை

ஒரே நாளில்

அலுவலகத்திற்குப்
புதிதாய் வந்த எழில் யுவதி
அவளாய் வந்து
நட்புப் பாராட்டியது

அன்பாய்ப் பேசி
அழகாய் வேலை வாங்கி
மதிப்பீட்டில் ஆப்பு வைக்கும்
அன்பான மேலாளர்
மாற்றலாகிச் சென்று விட்டது

ஊருக்குச் சென்று வர
வேலைப்பளுவின்
காரணமாய்
வழமையாய்
நிராகரிக்கப்படும்
விடுப்பு விண்ணப்பம்
அனுமதிக்கப்பட்டது

நம்பிக்கையைக்
கொடுத்து வைத்த
என்னிடம்
துரோகத்தைப்
பரிசாய் அளித்த
நண்பன் அவனாய்
மனம் வருந்தி
மன்னிப்புக் கோரியது

பல நாளாய்ப் பாரா
முகங்கொண்டக் காதலி
அப்பா சம்மதித்துவிட்டாரென
குதூகலமாய்
அழைத்துச் சொல்லியது

அனைத்திற்கும் ஊடே
புத்தம் புதுக் காலையை
இளையராஜா
இசைக்கும் உணர்வு
இதயத்தை இதமாய்
வருடிக்கொண்டிருக்கையில்

எழில் யுவதியும்
அன்பான மேலாளரும்
விடுப்பு விண்ணப்பமும்
நண்பனும்
காதலியும்
அதிர்வலைகளில்
மறைந்துவிட்டிருந்தனர்
அறை நண்பன் என்னைச்
சற்று வேகமாகவேக்
குலுக்கியதில்...........

சிறிது அதிகமாகவே
உறங்கிவிட்டதில்..........

அலுவலகப் பேருந்தைத்
தவறவிட்டதில்..............

அழைப்பூர்திக்கு
என் அதிகாலை
உறக்கத்தின் விலையாக
நானளித்த 112 திராம்கள்
கொஞ்சம் அதிகம்தான்
என்றாலும்.............

பரவாயில்லை.......................!!!!!




********************************************
குறிப்பு:
மதிப்பீடு - Appraisal
அழைப்பூர்தி - Call Taxi
திராம் - Dubai Currency

எழுதியவர் : தர்மராஜ் (7-Jul-15, 12:57 am)
Tanglish : paravaayillai
பார்வை : 786

மேலே