யாருக்கு விடுதலை
ஏழே உங்க ஆத்தா இருக்காளா....
வீட்டுக்குள்ள தான்தே இருக்கு..
பள்ளிகொடத்து சட்டைய தொவச்சுகிட்டே சொன்னான் வடுவு...
என்னாடி அவன் தொவச்சுட்டு இருக்கான்...
ஆமா மதினி காலைல இருந்தே மேலுக்கு நல்லா இல்ல...
நேத்து மொத மழ அதுமா பச்சி தோடத்தில கள எடுத்துட்டு வரும் போது நனைஞ்சுட்டேன் மதினி...
தர்மாஸ்பத்திரிக்கு போக வேண்டியது தான.. அடுப்பு புகையில் கண்ண தொடச்சுகிட்டே சொன்னா அலமேலு...
அந்த தீத்தட்டைய எடுத்து ஊதி விடுடி..
இல்ல மதினி அது நேத்து மழைல ஈரமாய்டுச்சு..
அந்த பய பள்ளிகொடத்துக்கு போய்ட்டான் அதே நனைஞ்சு போச்சு விறகு...
உன் புருஷன எங்க..?
அது எங்க வீட்டுக்கு வருது அது வர 10 மணி ஆய்டும் நாலு ஆளா வரும்..
அடியே என்னா தலைல காயம் என்ன ஆச்சு..
அலமேலு கேக்கவும் ஒழிஞ்சு இருந்த கண்ணீர்..
பொந்துக்குள்ள இருந்த பாம்பாட்டாம் பொசுக்குனு எட்டி பாத்துச்சு...
சீலையில மூக்க சீந்திகிட்டே மதினி
செத்தவடம் அந்த திண்ணையில உட்காரு வந்துட்ரேன்...
ஏழே வடுவு என்ன உங்க ஆத்தா தலைல காயம்..
ஆமாத்த ராத்திரி ஐயா வந்து ஆத்தாவ அடிச்சு தள்ளி விட்டுருச்சு..
ஆத்தா நில கதவுல முட்டிகிருச்சு...
சரி இந்தா காசு போய் காய்ச்சல்க்கும் காயத்துக்கும்
மருந்து வாங்கிட்டு வா..
தெக்க போய்..
பாத்து போடா
2 ரூவா க்கு நீ வாங்கி திண்டுக்கோ..
சரி அத்தே என்று துள்ளி ஓடினான் ஒன்னாவது படிக்கும் வடுவு...
இந்தா மதினி இந்த சுக்கு தண்ணிய குடி..
ஏன் டி இம்புட்டு கொடும படுத்துறானே பேசமா சின்னவன கூப்பிட்டு ஆத்தா ட போக வேண்டிய தான..
எங்க மதினி போக அதே மருமக காரிட்ட புடுங்கு பெத்துகிட்டு
ஓசி கஞ்சி குடிச்சிட்டு இருக்கு நான் எங்க போக...
இந்த வடுவு இல்லாட்டி அந்த கம்மா கரையில எப்பவோ படுத்து இருப்பேன்..
இந்த பயட்ட இம்புட்டு புடுங்கு பெறதுக்கு...
போய்டலாம் மதினி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சொன்னாள் வீரு..
எல்லாம் தலைவிதி யார சொல்ல..
இந்த கவர்மெண்டு கட வரவும் தான் ரெம்ப குடிக்குறாப்புள..
மொதலாம் ஒழுங்கா காளவாச வேலைக்கு போய்டுதான இருந்துச்சு...
சரி இந்தா 300 ரூவா
போன வார வேல காசு..
நாளைக்கு மூக்கன் தோடத்தில கள வெட்டு இருக்கு வாரியா...
இல்ல மதினி நாளைக்கு சனிக்கிழமை கந்து காரரு வருவார்
கந்துக்கு எடுக்கனும்..
கம்மலுக்கு நோட்டீஸ் வந்து இருக்கு முங்கி போய்டும்..
சரி சின்னவன மாத்தர வாங்கி வர சொல்லி இருக்கேன் சாப்பிட்டு தூங்கு...
வடுவு உறங்கிட்டான்.
இவ மட்டும் அந்த குண்டு பல்பு பக்கத்தில இருந்த பல்லிய வெறிச்சு பாத்துட்டே இருந்தா கண்ணீர் அவள கேட்காமலே பாய நனச்சுட்டு இருந்துச்சு...
தெருவுல நாய் குலைக்க செருப்பு சத்தம் சர் சருன்னு கேட்டது..
கதவுல டம்மனு சத்தம் கேட்க திடுக்கிட்டாள் வீரு..
அடியே கதவ தொரடி முந்தானைய சொருகிகிட்டே கதவ திறந்தாள்..
என்னாடி இன்னேரத்துக்கு தூக்கம்..
சாராயம் வீச வீட்டுக்குள்ள தள்ளாடி வந்தான் கருப்பு...
என்னாடி வச்சு இருக்க திங்குறதுக்கு...
சாப்பாட்டை எடுத்து வைத்து எதுவும் பேசாமல் உக்காந்து இருந்தால் வீரு...
ஒரு வாய் சாப்பிட்ட கருப்பு ஓங்கி எறிந்தான் தட்டை..
என்னா வெண்ண மாதிரி வச்சுருக்க ஏன்டி.. அடிக்க எழுந்தவன் அப்படியே விழுந்தான்....
அங்கேயே கத்திகிட்டே படுத்து விட்டான்...
விடுஞ்சும் வேட்டி இடுப்புக்கு வர வாந்தி எடுத்த படியே படுத்து கிடந்தான் கருப்பு....
வீரு காலைலயே வெயிலுக்கு மொதவே வெரகு பிரக்க ஓட பக்கம் போய்டா..
விராலிமாறு பெறக்கிட்டு 10 மணிக்குலாம் வந்துட்டா வாசல்ல கட்ட போட்டுட்டு சாமி வடுவு கொஞ்சம் தண்ணீ கொண்டு வாயா..
அசந்து உக்காந்தாள் வீரு..
தண்ணி கொண்டு வந்த வடுவு ஆத்தா நீ வச்ச காச ஐயா தூக்கிட்டு போய்டுச்சு..
அட பாவி நான் வம்பாடு பட்டு கள வெட்டுன காசு இப்படி தூக்கிட்டு போய்டானே..
நிம்மதியா இருக்க விட மாட்ரானே...
யத்தேய் மாமாவ 108 ல க.விலக்கு கொண்டு போராக..
என்று சொல்லி கொண்டே ஓடி வந்தான் அலமேலு மூத்த மகன்..
வீரு தலையில் இடி விழுந்தது...
ஒத்தையடி பாத வழி ரோட்டுக்கு ஓடி வந்தாள் வீரு பின்னாடியே வடுவும் வெறும் டவுசரோட ஓடி வந்தான்..
டவுன் பஸ்ல இருந்து இறங்க கருப்பு கூட்டாளி வந்து கூப்பிட்டு போனான்...
காலையிலேயே குடிச்சுட்டு சைக்கிள ஓட்டி மண்ணு லாரிக்குள்ள விழுந்துருச்சு..
ஆஸ்பத்திரிக்கு வரும் போதே வழியில செத்து போச்சு என்றான்....
அது வரை இறுகி இருந்த இதயம் உடைந்தது...
அப்போது தான் கத்தி அழுதாள் வீரு...
அவள் அழுததற்கான காரணம்..
சுவத்து பல்லிக்கும்...
ஒரு வேளை அலமேலுக்கும் தெரியலாம்.....
____மஞ்சள் நிலா 🌙