ஓர் சிவப்பு விளக்கு-ரகு

அரளிகள்
பூத்துக் குலுங்கும்
பாதை ஒன்றில்
திட்டுத்திட்டாய்
அசிங்கத்தின்
பாதச் சுவடுகள்

எச்சில் ஒழுக்கும்
கரிய நிற நாய் ஒன்றின்
வரவேற்பில்
அருவருப்பேதுமில்லை

வெற்றிலை உமிழ் நீரில்
மிதந்து
பூக்களின் அழகு காட்டும்
பூந்தொட்டிகள்
பலவும் அங்கு

நடுங்கித் தொலைத்த
கைகளும் கால்களும்
மணித்துளிகளில்
தேமேவென
சயனித்துக் கிடந்தது
ஆச்சர்யம்தான்

பழகிவிட்ட
தண்டவாள மரங்களாய்
ரயிலுக்குப் பின்
ஆட்டங்கண்ட தடயமே
இல்லாமல்
அமைதி கற்றது
உணர்வும்

இப்போதும்
புத்தம் புதிதாய்
என்னில் படர்ந்து
சுடர்ந்திருக்கிறது
ஓர் சிவப்பு விளக்கு

கசாப்புக் கடை
கட்டையில் விழும்
வெட்டுக்களாய்
வந்து தாக்கும்
முத்தத்தின் சத்தத்தில்
என் அறை
மூர்ச்சையாயின

இளைஞர்களுக்கான
வானொலியின்
எழுச்சி உரை
கதவிடுக்கில் கசிந்து
தொலைந்து போகிறது
முற்றுப் பெறாத முனகலில்..!

எழுதியவர் : சுஜய் ரகு (12-Jul-15, 4:40 pm)
பார்வை : 116

மேலே