வெற்றி உடுத்து

முட்டைக்குள்
எத்தனை காலம் முடங்கியிருப்பாய்
மூடியிருப்பது வெறும் ஓடு தான்
உடைத்துப் பார்
வெளியேறுவாய்

உன்னை சலவை செய்
ஆற்றில் மூழ்கி
அழுக்கிறக்கி எழு
உன் அழுக்குகளை
கழுதை ஏற்றி
கரை கடத்து

சிறகுகளை வைத்துக் கொண்டு
எறும்புகளோடு
ஏன் நடக்கிறாய்

உலகம் இன்னும்
தீரவில்லை
கடலை முழுதாய்
நீ இன்னும் குடிக்கவில்லை
வாழ்வின் தூரம்
நீ நடந்து முடிக்கவில்லை

மூளை கொளுத்து
பழையதை எரித்து
உனக்குள் பகை உண்டாக்கு

தோற்றுப் போன
உன்னை கழற்று
வெல்லப் போகும்
உன்னை உடுத்து

மொட்டுக்குள் புகுந்து
சூரியனாய் வெளியேறு

தேனூறும் பூவாய்
நீ மாறு
வண்டுகள் உன்னை வட்டமிடும்

முட்களையும்
உற்பத்தி செய்
உன் பூக்களை பாதுகாக்க

கல்லாய் மாறு
சிற்பி தேடு
சிலை கொடு
விலை பேசு
கலையாகு
முடியாதென்பதை கொலையாக்கு

எரிமலையாய்
பயமுறுத்து

பொறி அடங்கா
வெறியுடன் புறப்படு

சுடமுடியா பழமாய்
கிளையில் தங்கு

அன்பை புடைத்து
ஆக்கு விருந்து

சந்தைக்கு தயாரிக்காதே
விந்தையாகு

எழுதியவர் : Raymond (13-Jul-15, 4:59 am)
பார்வை : 334

மேலே