சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை

கடைசி இருக்கையில் கைத்தட்டும்
குழந்தையொன்றின்
சன்னல் டாட்டாக்களுக்கு
சட்டென்று வராத பதில் டாட்டாவையும்
உதட்டிலிருந்து உதிராத புன்னகையையும்
விழுங்கிக்கொண்டிருக்கும் உரசல்களையோ
அழுத்த விருப்பங்களையோ
தீரத்தீர ருசிக்கும் நாக்கு முளைத்த
விழிகளே..

முட்டிக்கொண்ட கோப்பைகளில்
சிந்திக்கொண்டிருக்கும் தன்னிலைகளால்
தொட்டுக்கொள்ளும் கோழி வறுவலை
கொண்டுவர தாமதிக்கும்
டவுசர் பையன்களின் முன்
த்தாக்கள் போன்றவைகளை உமிழும்
விழிகள் முளைக்காத நாக்குகளே..

மரபணுவில் ஊறிவிட்ட
புசிக்கும் முறைகளால்
தட்டினை கவ்வியிருக்கும்
இலைகளிலொட்டிய கடைசிப்
பருக்கையினையும் ருசிப்பவன் மீது
பார்வைகளால்
இன்டீசன்ட் ஃபெல்லோக்களை வீசும்
கூகுள் வாயர்களே...

புதிதாய் உடுத்த கற்றுக்கொண்ட
புடவைகள்.. முந்தானைகளை
பிடித்துக்கொண்ட ஊசிகள் வலுவிழக்க
எதேச்சையாக குனிகையில்
சொய்ங்கென்று இரண்டு புறாக்கள்
பறக்கிறதென்று உங்களுக்குள்
சொல்லிச் சிரிக்கும்
குருட்டு முகங்களைக் கொண்ட
திருவாளர் ஜென்டில்மேன்களே..

சப்பென்றே முடித்துவிடுகிறேன்
உங்களிடம் சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லை..
மற்றும்
இந்தக் கவிதைக்கு
கெட்டவார்த்தைகள் பேசத்
தெரியவில்லை..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (13-Jul-15, 7:14 am)
பார்வை : 148

மேலே