உழவனே உயர்ந்தவன்
#உழவனே உயர்ந்தவன்
#சிந்து வகைப் பாடல்
#கிளிக்கண்ணி
மண்ணில் உழவரெல்லாம் மானுட தெய்வமன்றோ
எண்ணித் தொழுதிடடி - கிளியே
ஏற்றிநீ போற்றிடடி
விடியலில் ஏர்ப்பூட்டி வேர்வையைக்
கொண்டுழுவார்
துடிப்புள்ள பேர்களடி - கிளியே
சோர்வவர்க் கில்லையடி..!
எத்தனை யிங்குதொழில் எத்தனை இருந்தாலும்
அத்தனைக்கும் மூத்ததடி - கிளியே
அனனத்துலகும் ஏரினடி…!
பொன்வணிகர் கீழேதான் பொருள்வணிகர் கீழேதான்
மண்ணில் உயர்ந்தோரடி - கிளியே
மாண்போ டுழவரடி.!
செந்நெல் பயிர்விளைச்சல்
செய்யும் உழவரையே
வந்தனை செய்வமடி - கிளியே
வாழ்த்திட வேணுமடி …!
ஏரோட்டச் செய்திடலாம்
இப்புவியில் நம்பிள்ளை
தேரோட்டிச் செல்வரடி - கிளியே
தீங்கின்றி வாழ்வரடி..!
நாட்டில் சிறப்பெல்லாம் நம்முழவர்
நற்றொழிலால்
பாட்டில் புகழ்வோமடி - கிளியே
பைந்தமிழ் உள்ளதடி..!
நாடித் துடிப்புகளை நாளும் வளர்த்திடுவார்
கூடிஉயிர்க் காப்பரடி - கிளியே
கூறவேணும் நன்றியடி..!

