திருத்தப்பட்ட பிழைகள்
பள்ளங்களில் இறங்கியும் மேடுகளேற காத்திருந்தும், வளைவுகளின் போக்கிற்கேற்றபடி வளைந்தும் சரேலென்று விழவேண்டிய இடத்தில் அருவியாய் விழுந்தும் எல்லா வித அசெளகர்யங்களையும் தனது செளகர்யமாக்கிக் கொண்டு நகரும் நதிதான் எத்தனை அழகானது.... வசீகரமானது..!வற்றிப் போனாலும் மீண்டும், மீண்டும் தனது தடங்களில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு கடந்த காலத் தழும்புகளை வெளிக்காட்டமால் உற்சாகமாய் கரைபுரண்டோடும் நதியின் வாழ்வோடு எத்தனையோ உயிர்களுக்கு தொடர்பு உண்டுதானே....?
நதி என்று ஒன்றும் கிடையாது, நதித்தல் என்ற ஒன்று மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நதியின் பிரவாகத்தில் கணத்திற்கு கணம் அங்கே புதிய வாழ்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும் நதியை இதுதான் இன்னதுதான் என்று வரையறை செய்து விட முடியாது, அது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேங்கிக் கிடப்பதல்ல...அது எப்போது புதியது, சற்று முன் நீங்கள் பார்த்தது அல்ல இப்போது பார்த்துக் கொண்டிருப்பது என்று ஓஷோ சொல்வதைப் போல...
நதிகள் வாழ்க்கையின் மையக் கூறினை, அதன் அடித்தளத்தைத் தானே நமக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
எழுதும் போது கூட நதி நகர்வதை ஒத்த ஒரு பிரக்ஞை நிலை எனக்குத் தோன்றுவதற்கு காரணம் உண்டு, இதைத்தான் இப்படித்தான் என்று ஒரு முன் திட்டமிடலோடு எழுதத் தொடங்கினால் அங்கே செத்துப் போன வார்த்தைகளைத்தான் பிரசவிக்க முடியும்....ஆனால் எழுத்துக்கு உயிர் இருக்க வேண்டும் அந்த ஜீவன் வாசிப்பவனின் ஆன்மாவோடு சென்று கலக்க வேண்டும். வாசித்துக் கொண்டிருக்கையிலேயே துக்கமோ, பேரானந்தமோ அவனை ஆட்கொள்ள வேண்டும். அதுவரை அவன் பயணப்படாத தூரங்களுக்கு அவனை அந்த எழுத்துத் தூக்கிச் செல்ல வேண்டும். இரத்தமும் சதையுமாய் உணர்வைக் கொடுக்காத எழுத்துக்கள் எல்லாம் ஒப்பனை பூசிய நாடக நடிகர்களைப் போலத் தான் எனக்குத் தெரியும்....
ஒரு காலத்தில் மனித மனங்களைச் சுண்டி இழுக்க ஒப்பனைகள் தேவைப்பட்டிருக்கலாம், ஆனால் காலங்கள் கடந்து இன்றும் எழுதுபவன் தன்னை ஆகச் சிறந்தவன் என்று நிலை நிறுத்திக் கொண்டு ஊருக்கு உண்மைகள் சொல்வேன் என்று கட்டியம் கூறுவது போல எழுதுவது மிகப்பெரிய அபத்தம். அதோடு மட்டுமில்லாமல் ஒரு எழுத்து நல்லதைத்தான் சொல்ல வேண்டும் என்று வரையறைகள் செய்வதும், அப்படி எழுதாதவர்களை விமர்சிப்பதும் மிகப்பெரிய அபத்தம். நான் ஏன் நல்லதைச் சொல்ல வேண்டும். எழுதுவது என்பது கரடு முரடாய் காட்டில் முளைத்து வளரும் ஒரு முள் செடியைப் போல தான் தோன்றித்தனமானதாய் இருக்க வேண்டும், கூண்டு போட்டு தினம் தண்ணீர் ஊற்றி, உரமிட்டு போஷாக்கோடு வளர்க்கும் வீட்டுச் செடிகள் பார்க்க வேண்டுமானல் அழகானதாய் இருக்கலாம்...
ஆனால் தானே நின்று, தானே எழுந்து, தானே விழுந்து, தன் இஷ்டப்படி வளரும் ஒரு காட்டுச் செடியின் சுதந்திரமும் அதன் அனுபவமும் வேறுதானே...?
போன வாரம் நண்பர் ஒருவரை அவரது குடும்ப சகிதமாய் சந்திக்க நேர்ந்தது, லிவ்விங் டுகெதர் பற்றி பேச்சு வந்தது அப்போது, திருமண வாழ்க்கையைப் போல புனிதம் வேறொன்றிலும் வந்துவிடாது என்று தம்பதி சகிதமாய் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்....
நான் சட்டென்று சொன்னேன், எனக்கு திருமணம் சடங்கு அதன் பின் உருவாக்கிக் கொள்ளப்பட்ட வாழ்க்கை இது எல்லாமே போலியாகத் தெரிகிறது என்றேன். காரணம் என்னவென்றால் ஆயிரம் பேரைக் கூட்டி இவனுக்கு இவள் மனைவி என்று தாலி கட்டிக் கொண்டு அதன் பின் இந்த சமூகத்திற்காக, பெற்றவர்களுக்காக, பிறந்த பிள்ளைகளுக்காக என்று போலியாய் அனுசரித்து அனுசரித்து ஆயிரம் முரண்பாடுகளோடு வாழ்வதில் இருக்கும் ஒரு நச்சுத் தன்மையை யாரும் புரிந்து கொள்வதே இல்லை. ஒரு ஒப்பந்தம், அதை மீறினால் நமக்கு கெட்ட பெயர் வந்து விடும் அல்லது இந்த சமூகம் நம்மை கேவலமாக பேசும் என்பதற்காகவே இருவர் வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று நடித்துக் கொண்டு வாழ்க்கையை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்....?
வாய்ப்பிருந்தால், இந்த உலகம் ஒன்றும் சொல்ல வில்லை என்றால் பிரிந்து போகலாம் அதிலொன்றும் பிரச்சினை இல்லை என்றால் இன்றைக்கு மிகையான திருமண பந்தங்கள் சுக்கு நூறாய்த் தான் போயிருக்கும். இது கொஞ்சம் உங்களுக்கெல்லாம் எரிச்சலை வரவழைக்கலாம் கண்டிப்பாய் எரிச்சல் வரத்தான் செய்யும் ஏனென்றால் நான் இங்கே உடைத்துக் கொண்டிருப்பது நூற்றாண்டுகளாய் உங்களுக்குள் கட்டி எழுப்பப் பட்ட ஒழுக்கம் சார்ந்த வரைமுறைகள், வழமையாய் புகுத்தப்பட்ட பொதுபுத்தி இது, சரலேன்று ஏற்றுக் கொள்ள முடியாதுதான்....
ஆனால் இப்படிப் பாருங்களேன்....
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாய் இணைந்து வாழ யாதொரு சமூக நிர்ப்பந்தங்களும் கிடையாது, சமூக நெறிக்காவலர்கள் என்று சூப்பர்வைஸ் செய்ய ஒருவரும் அங்கில்லை, இருவரும் சுதந்திரப் பறவைகள், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தீர்மானித்துக் கொள்ளும் பரிபூரண உரிமை இருவருக்குமே இருக்கிறது, அவர்கள் இருவரையும் காதலையன்றி வேறு ஒன்றுமே பிணைத்திருக்கவில்லை, அவளுக்காக அவனும், அவனுக்காக அவளும் என்று மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், கூண்டு பூட்டப்படவில்லை, இன்னும் சொல்லப் போனால் கூண்டே கிடையாது, இருவருமே எந்த நிர்ப்பந்தங்களாலும் பூட்டப்படவில்லை, அவர்கள் ஒன்றாய் இருக்க அவர்களுக்குள் இருக்கும் அன்பே பிரதானமாய் இருக்கிறது....
அவனுக்காக அவள் ஒன்றை விட்டுக் கொடுத்தாள் என்றால் அது போலியான விட்டுக் கொடுத்தலாயிருக்காது அது முழுமையான புரிதலில் இருந்து பூத்த பூவாய் இருக்கும், அதே போல அவனும், எந்த சூழலிலும் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வதென்றால் யாதொரு தடையுமில்லை என்ற சூழலிலும் ஒருவர் கை பிடித்துக் கொண்டு ஒருவர் உனக்கு நான் எனக்கு நீ என்று வாழும் வாழ்க்கையில் இருக்கும் சுகத்தை அனுபவிக்கும் போதுதான் நியதிகளுக்குள் நின்று கொண்டு புழுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் அபத்தம் என்னவென்று புரியும்.
சரியான துணையை இந்த சமூகம் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு அபத்தத்தை நமக்குத் துணையாக்கி விட வேறு வழியில்லாமல் வாழும் வாழ்க்கையை விட சரியான துணைக்காய் கோடி முறை கோட்டினை அழித்து மறுபடியும் போட்டுக் கொள்வதில் தவறொன்றும் இல்லைதானே....?
எந்த தலை சிறந்த ஓவியம்
அழித்து திருத்தாமல்
முழுமையடைந்திருக்கிறது....?
அடித்து எழுதாத கட்டுரையோ
கவிதையோ இந்த பூமியில் உண்டா...
முழுமையானது என்று எதுவுமே
இந்த பிரபஞ்சத்தில் கிடையாது....
இன்று நீங்கள் பார்க்கும் முழுமைகளெல்லாம்
திருத்தப்பட்ட பிழைகள் தானே?!
தேவா சுப்பையா...