குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் - சுஜாதா
முன் குறிப்பு: படித்தவுடன் கவிதை விரும்பும் / நேசிக்கும் / வாசிக்கும் / ரசிக்கும் / யாக்கும் / எழுதும் அனைவரும் படிக்க வேண்டும் என்று விரும்பினேன் / வேண்டுகிறேன் / ஆசைப்படுகிறேன் / விழைகிறேன் இந்தக் கட்டுரையை..
கழுத்து வலி பொருட்படுத்தாமல் நகலெடுத்துக் கீழே:
இனி எழுத்தாளர் சுஜாதா:
குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்.
சில சமயம்தான் கவிதைகள் உடனே என்னை பாதிக்கின்றன. மற்ற சமயங்களில் கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றன.... கொஞ்சம் புன்னகைக்க, கொஞ்சம் நெற்றியை சுருக்க, கொஞ்சம் திகைக்க, அல்லது கொஞ்சமேனும் புரியாமல் துறக்கவும் வைக்கின்றன. கவிதை அனுபவம் என்பது தனிப்பட்டது. சொந்தரங்கமானது. எனக்குப் பிடித்த கவிதை உனக்கும் பிடித்து இருக்கவேண்டும் என்று கட்டயம் இல்லை. ரொம்ப ரொம்ப அரிதாகத்தான் உலகில் சர்வ ஜனங்களுக்கும் பிடிக்கும்படியாக வில்லியம் ப்ளேக்கின் 'ஆட்டுக்குட்டி' போன்ற கவிதைகள் பிறக்கின்றன. மற்றவை அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப ரசிக்கப்படுகின்றன...
எனக்குப் பிடித்த கவிதை, எனக்கு ஏன் பிடித்ததென்று சொல்லும் போது ஒருவேளை அதன் சிறப்பை நீங்கள் ஏதாவது தவறவிட்டிருந்தால் மறுபடி படித்து உணரலாம். ஆனல், பெரும்பாலான சமயங்களில் அது நிகழ்வதில்லை. நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்துவிடும். குப்பையில் கிடக்கும் பொற்காசு போல், நல்ல கவிதைகளை அடையாளம் கண்டுகொள்ள குப்பைக் கவிதைகளும் வேண்டும். உலகின் கவிதைக் கணங்கள் ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவற விடக் கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக் கூடாது..
பேராசிரியர் த.பழமலய் அவர்களின் 'குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்' எங்கிற கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது. அவருடைய முதல் தொகுப்பான 'சனங்களின் கதை' நவீன தமிழ்க் கவிதை உலகில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி என்று எழுதியிருந்தேன். இவ்வளவு உன்னதமாக எழுதியவர் எப்படி அதே தரத்தில் தொடரப் போகிறார் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். மூன்று வருஷம் விட்டு வெளி வந்திருக்கும் இந்த தொகுதியில் என் 'கவலய்'யை நீக்கிவிட்டார்.
பழமலய்யின் - அவரை பழமலய் என்று குறிப்பிடுவதில் எனக்கு சந்திப் பிழைகளினால் தொந்தரவாக இருக்கிறது; எதற்காக ஒரு உயிர் எழுத்தைத் தமிழ் மொழி இழக்க வேண்டும்? கவிதை வடிவம் ஒரு 'வடிவமில்லாத வடிவம்', எதுகை-மோனை-சீர்-தளைகளைப் புதுக்கவிதை புறக்கணித்து ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் பெரும்பான்மையான புதுக்கவிதைகளில் தனி வரிகளில் ஒரு விதமான ஓசை நயம் அல்லது தொனி அல்லது கட்டுப்பாடு இருக்கும். பழமலையின் பல வரிகள் அந்த விதியையும் மீறின சுதந்திரச் சரக்கு. பின் என்ன? இவைகள உரை நடை என்றே சொல்லி விடலாமே? இல்லை, எப்படி சொல்லுகிறேன்.
"சிற்றுண்டிகளுக்கு அழைத்துச் சலித்தவள்
செடிகொடிகளையே வெறுக்கத் துவங்கினாள்"
இதை உரை நடையில் எழுதினால்
'என் மனைவி டிபன் சாப்பிட வா, டிபன் சாப்பிட வா என்று கூப்பிட்டுக் கொண்டே யிருப்பாள். நான் தோட்டத்தில் குரோட்டன்களைக் கொத்திக் கொண்டே யிருப்பேன். அதனால் சலித்துப்போய்
அவளுக்கு செடி, கொடிகள் என்றாலே வெறுத்துப் போய் விட்டது.....'
இத்தனை விஷயதை இரண்டு வரிகளில் அடக்கும் திறமை - கவிதை. Compression அடர்த்தி, சொல்லாமல் விட்ட வார்த்தைகள், வாசகன் கவிதையின் ஆதார சங்கதியில் பங்கு கொள்ளும் குதூகலம், வாசகா நீ முட்டாளில்லை உனக்கும் கவிதை நெஞ்சம் இருக்கின்றது. என்போல் உன்னாலும் மென்மைகளை உணர முடியும் என்று அவனுக்கு கோடி காட்டி விட்டால் போதும். இப்படி கவிஞன் நினைக்க வாசகன் நிரப்புவதுதான் கவிதானுபவம். உரை நடை 'விஸ்தரிக்க' கவிதை 'கத்தரிக்கிறது'. இன்னும் கொஞ்சம் யோசித்தால் மேற்சொன்ன வரிகளில் செடிகளை விரும்பும் கவிதை நெஞ்சத்துக்கும் அன்றாட வாழ்க்கையின் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடும் புலனாகிறது. கவிதைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்தான் நல்ல கவிதையை அடையாளம் காட்டுகின்றன.
இந்தவாசகப் பங்கீட்டின் அதீத வடிவம் ஹைக்கூ. பழமலையின் இந்த புத்தகத்தில் கொஞ்சம் திருத்தினால் "ஹைக்கூ" வரிகள் கிடைக்கின்றன...
"வறண்ட கிணற்றில்
சிறுவர்களை ஏமற்றிய ரப்பர் பந்துகள்
மிதக்காமல் கிடக்கும்"
'சிறுவர்களை ஏமாற்றிய' என்பதை நீக்கிவிட்டால் இது "ஹைக்கூ" வடிவம்.
இந்தப் புத்தகத்தை மேம்போக்காகப் பார்த்தால் எழுபத்தோரு 'தொடர் நிலை' கவிதைகள் எல்லாமே ஒரு கருத்தைத்தான் சொல்வது போல் இருக்கும். அது குரோட்டன் வளர்க்க புது மோகம் கொண்டு பிடிவாதமாகத் தொட்டிகளும், செடி வெட்டும் பதியங்களுமாக பலவகையில் சேகரித்து, உரம் போட்டு தண்ணீர் வார்த்து வளர்த்து, இழந்து, மனைவி மக்களின் கோபத்துக்கும் நண்பர்களின் லேசான கேலிக்கும் உள்ளாகி.... அத்தனை கவிதைகளும் செடி கொடிதான்.... இலை தழைதான்...
ஆனல் அடித்தளத்தில் இந்தக் கவிதைகள் வேறுவிதமாக் இயங்குகின்றன. நகர ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழலில் அக்கறையின்மை, சின்னச் சின்ன ஆசைகளை வளர்ப்பதில் உள்ள சிரமங்கள், மிக நுட்பமாக கவனிக்கப்பட்ட மாந்தர்கள், அனுபவங்கள், இயற்கையின் மேல் மனிதனின் ஆக்கிரமிப்பு போன்ற பல பரிமாணங்கள் தெரிகின்றன. ஓரு மரம் வெட்டுவதில் உள்ள இழப்பைப் பாருங்கள்:-
"சாலமேடு கிராமம் சென்று
ஒரு பூவரது வெட்டி வந்தோம்
வீட்டின் தோட்டமே நிழலை இழந்தது
ரூ 700---இக்கு இழந்தார்கள்
மகளுக்கு இருந்த நிழல்
மருமகளுக்கு இல்லை.
வண்டி பாடைதான்
மருமகள்
வெயிலையே பார்த்துக்கொண்டிருந்தாள்
பேற்றுக்குப் பிறந்தகம் வந்திருந்த மகள்
நிழலையும் நினைவுகளையும்
பறிகொடுத்துக்கொண்டிருந்தாள்
மயானக் கொள்ளையாக இருந்தது
இடைத்தரகர்
வேர்களையும் இலைதழைகளையும்கூடத்
தனக்கு என்று கேட்டு ஏற்றினார்
கண்டித்து நிறுத்தினேன்
நட்டு வைப்பதற்காக
ஒரு கிளையை எடுத்தாள் மருமகள்
இன்னொன்றையும் கொடுத்தேன்
இவை வளரும்
இவற்றை வாங்கவும் ஒருவன் வருவான்
இந்த நச்சு வளையம் தொடரும்
நிழல் திருட்டு பெரிய திருட்டு
இந்தக் கவிதைக்கு விளக்கம் தேவையா என்ன?
"ஒன்றைச் செய்ய முடியாததற்கு ஆறுதல் பிறிதொன்றைச் செய்வதில் இருக்கிறது" என்னும் பழமலை "நிறங்கள் வெளியிடும் க்ரோட்டன்கள் வளர்ப்பது ஏதோ என் நஷ்ட்டத்துக்கு ஈடாக இருக்கலாம்" என்கிறார்.
"இருக்கலாம் ஆனால் தமிழுக்கு லாபம்
(குரோட்டங்களோடு கொஞ்ச நேரம்" - த. பழமலய்,
வெளயீடு: நிரங்கள், கலை இலக்கிய அமைப்பு, விருத்தாச்சலம்,
விற்பனை உரிமை: தாமரைச்செல்வி பதிப்பகம்,
16 நாலாவது தெரு, மருத்துவர் சுப்பராயன் நகர்,
சென்னை - 6000 024
பக்கம்-88, விலை ரூ.15/-)
--- சுஜாதா
கணையாழி கடைசிப் பக்கங்கள்
மார்ச் 1992
பின் குறிப்பு: இந்தக் கட்டுரையை சுஜாதாவின் படைப்பில் பதிய நினைத்தேன் .. எப்படி என்று கேட்டிருந்தேன் ...விடை இன்னும் இல்லை... கிடைத்ததும் மாற்றிவிடலாம்...