அறிந்ததும் அறியவேண்டியதும்

அறிந்ததும் அறியவேண்டியதும்
------------------------------------------------

அறிந்திருத்தல் சம்பந்தமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, எதை அறிந்திருக்கின்றோம், எவ்வாறு அறிந்திருக்கின்றோம், எவ்வளவு அறிந்திருக்கின்றோம் என்பவை தான். எதை அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் எமது நினைவுகளின் தொகுப்பில் இருந்துதான் அடையாளம் காண முடியும். நிகழ்வுகளின் சேகரிப்புத்தான் நினைவுகள். இந்த நிகழ்வுகள் ஐம்புலன்களின் ஊடாக எமது ஆழ் மனதில் பதியப்படுகின்றன. தொட்டுணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்பவற்றின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவுகளை நாம் அறிந்திருத்தல் என்கிறோம்.

எந்தெந்த விடயங்களை நாம் அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் இலகுவாக அடையாளம் காண்பதற்கு, ஒன்றை நாம் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, நுகரும்போதோ, சுவைக்கும் போதோ அல்லது தொட்டு உணரும்போதோ உடனடியாக அதை அடையாளப்படுத்தவோ அல்லது இனங்கண்டு கொள்ளவோ முடியுமாயின் அது ஒரு மீள் நிகழ்வாக இருப்பதனால் அந்த விடயம் ஏற்கனவே அறியப்பட்டாதாக அமைகின்றது. மாறாக, நாம் எதிர்கொள்ளும் ஒன்றை அடையாளப்படுத்தவோ அல்லது இனங்கண்டு கொள்ளவோ முடியாவிடின் அது இதுவரையில் அறியப்படவில்லை என்பதாகப் பொருள்படும்.

அடுத்து, எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதைப் பொறுத்தவரையில் நாம் எந்தவிதமான அளவீட்டையும் மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு விடயம் மீண்டும் நிகழும்போது அதை இனங்கான முடியுமாயின் அதை அறிந்திருக்கின்றோம் என்பதால் நிகழ்வுகளால் மட்டுமே எமது அறிதலை அளவிடமுடியும். ஆனால் நிகழ்வுகளின் எண்ணிக்கை வரையறையற்று இருப்பதனால் நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை அளவிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

அறிந்திருத்தலில் உள்ள மிகப் பெரிய பின்னடைவு என்னவெனில் நாம் அறிவு பூர்வமாக ஏற்றுக்கொண்டவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டவையாகவே அமைகின்றன. ஆனால் நம்பிக்கை அதன் தன்மையில் பலவீனமானது ('நம்பிக்கையின் இரு பலவீனங்கள்' என்ற கட்டுரையை வாசிக்கவும்). நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் பிறரின் உள்ளீடுகளே. இந்த உள்ளீடுகள் மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, சட்ட திட்டங்கள், சமுதாய ஒழுங்கு விதிகள் என்ற வடிவில் எமக்குள் செலுத்தப்படுகின்றன. இவ்வாறு உள்வாங்கப்பட்டவற்றை நாம் வேறுபாடுகளைக் கண்டறியும் கருவியாக பயன்படுத்திக் கொள்கிறோம். இதனால் நாம் அறிந்திருப்பவை அனைத்தும் வேறுபாடுகளே. எமக்கும் பிறருக்குமான வேறுபாடுகளே.

நாம் அறிந்திருக்கும் இந்த வேறுபாடுகள் தான் எமக்குள் பிளவுகளையும், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாடுகள் அனைத்தினதும் தயாரிப்பாளர்கள் நாம் தான். இந்த வேறுபாடுகள் குடும்பத்துக்குள், குடும்பங்களுக்கிடையில், சமூகத்துக்குள், சமூகங்களுக்கிடையில், நாட்டுக்குள், நாடுகளுக்கிடையில் வெறுப்பை உருவாக்கி அதன் மூலம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அழிவில் இருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு அறிந்துகொள்ள வேண்டியது எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளைத் தான். அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முடியும். எனவே, இதுவரை நாம் அறிந்திருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளை அறிந்து கொள்வோம்.

நன்றியுடன் - KG Master

எழுதியவர் : KG Master (14-Jul-15, 5:20 pm)
பார்வை : 130

மேலே