உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது

உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது
---------------------------------------------------------

உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது?' என்றதும் முதலில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில் ஏதோ ஒன்று இந்த இரண்டுக்கும் தடையாக இருக்கின்றது என்பது தான். அதாவது உறவுக்கு எது தடையாக இருக்கின்றதோ அதுவே உணர்வுக்கும் தடையாக இருக்கின்றது என்பதாகும். ‘உறவுக்குத் தடையானது எது?’ என்றதும் பல விடயங்கள் எமது மனக் கண் முன் குவிந்து விடுகின்றன.. உறவுக்குத் தடையானவையாக போட்டி, பொறாமை, சந்தேகம், அகம்பாவம், துரோகம், தற்பெருமை, பொய் பேசுதல், சுயநலம் போன்றவை உள்ளடங்கலாகப் பல விடயங்கள் அமைகின்றன.

உணர்வுகளைப் பொறு த்தவரையில் அவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு உணர்வும் தனித்தே இயங்கும் என்பதாகும். உறவு என்பது கூட்டு அல்லது இணைப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டது. ஆனால் உணர்வுகளோ ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்குவதில்லை. அவை தனித்தனியாகவே வெளிப்படும். அதாவது ஒரே நேரத்தில் ஒருவர் கவலை கொண்டவராகவும் மகிழ்ச்சியுடையவராகவும் இருக்க முடியாது. அதே போன்றே ஒருவர் கோபமாக இருப்பார் அல்லது சாந்தமாக இருப்பார். அதுமட்டுமன்றி உணர்வுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உறவுக்குத் தடையாக இருப்பதுமில்லை. உதாரணமாக, தனது பிள்ளை மீது ஒரு தாய்க்கு கோபம் ஏற்படும் போது அது உறவைப் பாதிப்பது மிகவும் அரிதானதாகவே நிகழ்கின்றது.

இப்போது உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது என்பதைப் பார்ப்போம். கேள்வி அல்லது வினா (Question) என்பதே உறவுக்கும் உணர்வுக்கும் தடையானதாக அமைகின்றது. 'கேள்வியா?' 'கேள்வி இல்லாமல் எப்படி விடயங்களை அறிந்து கொள்வது?'. 'கேள்வி பிறந்ததால் தானே மனிதன் இந்த அளவிற்கு அறிவாலும் ஆற்றலாலும் வளர்ந்திருக்கின்றான்?' என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு காலத்தை வீணாக்காதீர்கள்.

மனைவியைப் பார்த்து 'நீ என் மனைவியா?' என்றால் பந்தம் போய்விடும். தாயைப் பார்த்து 'நீ என் தாயா? என்றால் பாசம் தொலைந்து விடும். நண்பனைப் பார்த்து 'நண்பனா நீ?' என்றால் நட்புப் போய்விடும். இவை எல்லாம் கேள்வியின் விளைவுகள் தான். அதே போன்று தான் வார்த்தைகளால் அன்றி உள்ளுணர்வால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்களில் கேள்விகளைத் தொடுப்பதன் மூலம் அதன் உண்மைத் தன்மையை நாம் உள்வாங்க முடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தையின் சிரிப்பை உள்ளுணர்வால் உள்வாங்குவதற்குப் பதிலாக அது ஏன் சிரிக்கின்றது என்று கேட்போமாயின் குழந்தையின் சிரிப்பின் உணர்வு ரீதியான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

இப்போது நாம் கேள்வி என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வோம்.

கேள்வி என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. எது எதுவோ அதை அதுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்மையினதும் உள்ளதை உள்ளபடி உணர்ந்து கொள்ளவதில் (புரிதலில்) ஏற்படும் தடுமாற்றத்தினதும் வெளிப்பாடே கேள்வியாகும். ஏற்றுக்கொள்ளலும், புரிதலும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகள் குறையும். கேள்விகளைக் குறைக்கக் குறைக்க ஏற்றுக்கொள்ளலும் புரிதலும் வளரும். உறவுக்கும் உணர்வுக்குமான தடைகள் அற்றுப் போகும்.

நன்றியுடன்: KG Master

எழுதியவர் : KG Master (14-Jul-15, 5:25 pm)
பார்வை : 88

மேலே