அழகு என்பது - கற்குவேல் பா

அழகு என்பது
`````````````````
ரவிவர்மன் ஓவியங்கள் ;
அறைச்சுவர்களை - அழகாய்
அலங்கரித்திருந்தபோதும் ..

நேற்று விடுமுறைக்கு
வந்திருந்த தமக்கைமகள் ;
சுவரில் கிறுக்கிச்சென்ற ,
பென்சில் கிறுக்கல்களுக்கு
ஏனோ ஈடுகொடுக்கவில்லை ..!!

* * *

நிமிர்ந்து பார்க்கும்உயர
அடுக்குமாடிக்கட்டிடம் ;
சுற்றுச்சவர் முழுவதும் ,
எல் ஈ டி விளக்குகளால்
மின்னியபோதும் ..

எதிரே கூவநதிக்கருகே ;
மங்கிய ஒளிவீசிய
தெருவிளக்கின் நடுவே ;
மின்மினிப் பூச்சிகளின்
கூடாரமாயிருந்த - அந்த
குடிசைகளின் அழகிற்கு
ஈடுகொடுக்கவில்லை .. !!

* * *

நகத்தில் வர்ணம்தீட்டி ,
புருவப் பிசுருகளெடுத்து ;
முகப்பொலிவு - ஒருசுற்று
அதிகரித்து - நேற்று
அழகுநிலையம் சென்றுவந்த
அவளைவிட ..

அடுப்படியில் கொஞ்சம்
அழுக்கு வாங்கி - மீதம்
அறைப்பெருக்கையில் பெற்று ;
கொஞ்சம் அழுக்காய் - மீதம்
இயற்க்கையாயிருந்த அவள் ,
அழகாய்த்தானிருந்தாள் ..!!

* * *

பாதம்தொடும் கவுன் ,
இறுக்கிப்பிடிக்கும் லெகின்ஸ் ,
ஜீன்ஸ் டாப்ஸ் சுடிதார் - என
வலம்வந்த குழந்தையொன்று ..

அக்காள் வைத்திருக்கும்
பட்டுப்பாவாடை ஆசையில் ;
தலையில் மொட்டையேற்று ,
சந்தனம்பூசி ; தாய்மாமன்மடியில்
அகோர சத்தத்தோடு - காதணி
அணிந்துகொண்டு ; கத்திய
நொடி மறந்து - கண்ணாடி
பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது ,
அழகாய்த்தான் இருந்தது ..!!

-- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (15-Jul-15, 11:58 am)
பார்வை : 263

மேலே