பட்டறிவு
பட்டறிவு
எல்லையை மீறி வந்து
தொல்லையே தந்ததாய்
துள்ளி வந்த எதிர் வீட்டுக் கன்றுக்கு
கட்டி வைத்து அடி போட்டவர் ..........
கொக்கரக்கோ கூவலோடு
கொண்டையாட்டி வந்த
அடுத்த தெருச் சேவலை
மடக்கியமுக்கி கறியாக்கி மகிழ்ந்தவர் .......
கணுக்காளளவு தூரம்
தன் காணிக்குள் வளர்ந்ததென
மரக்கிளைகள் அறுத்து
அயல்மனை மீது அடங்காக்கோபம் கொண்டவர் .........
ஏழ்மை தூதனுப்ப
வேலிக்குள் எட்டி நின்றே
கஞ்சிக்கரிசி கேட்டவரை
எள்ளி நகையாடி மகிழ்ந்தவர்..........
நன்னீர்க் கிணறென
நாலு மைல் தொலைவிலிருந்து
நாரியில் குடம் சுமந்து வந்தவர்க்கு
நுழைவாயில் பூட்டி ஏமாற்றி மகிழ்ந்தவர் .........
அந்நியன் காலடியில்
அவனளந்தளித்த
முட்கம்பி முகாமினில்
சுருண்டு படுத்துக் கிடந்த இருப்பினால்
ஒதுக்கிய அயலவன்
பகிர்ந்துண்ட உணவினால்
எதிரியென்று வசை பாடிய
எதிர் வீட்டினன் தந்துதவிய
நெகிழிக் குவளையில் நெகிழ்ந்து ..................
மூத்தோன் செப்பிய
ஒன்று பட்டால் உண்டு வாழ்வெனும்
அர்த்தம் உணர்ந்து கொண்டார் .

