அவள் என்காதலியா

உறவினர் திருமணம்-என்
உறவுகளின் கூட்டத்தில் புதிதாய் நீ
மணம் காணவந்தாய் -என்
மனம் கொத்தி நின்றாய்

பால்வீதியில் பவணி வந்த
பால் நிலவாய் உன்முகம்
பருவமாது என்பதன் அடையாளம்- உன்
பாவாடை தாவணிகொண்ட எழிலுடல்

குமரிபெண்கள் குழுமி இருந்தாலும்
குறிப்பாக உன்னுரு என்முன்
குளிர்ந்த நீரோடையாய் நெஞ்சில்
குறையாத தெளிவைத் தந்தாய்

கருவிழியில் மையில்லை
கன்னத்தில் குழியுண்டு
அதரத்தில் சாயமில்லை
அழகிய பல் வரிசையுண்டு

கபடமில்லா பார்வை
கனிவான பேச்சு
அழகான நடை
அமைதியான குணம்

காற்று வருடிச் செல்லும்
கருங்கூந்தல் தனில் ஒற்றைரோஜா அழகு
ஐம்பொன் உருக்கி செய்த
அற்புத சிலையவள்

வானத்து மதியவள் வெட்கம்கொண்டு
வண்ணமுகத்தை புதைத்துக் கொண்டாள்
முகில் எனும் முந்தானைக்குள்
அவளின் அழகு கண்டு

இந்திரலோகத்திலே இப்பாவை
இன்னுயிர் பெற்றிருக்க வேண்டும்
பிரமன் மாற்றி எழுதிவிட்டான் -அவள்
பிறப்பை அவனிதனில்

தொலைவில் இருந்து ரசித்த நான்
தோகைமயிலாள் பெயர் அறிய
அருகில் சென்று வினாவினேன்-என்
பெயர் பின்னே அவள்பெயர் எழுதி
குறிப்பால் உணர்த்தி சென்றாள் அதிர்ந்தேன் மகிழ்ந்தேன்
அவள் என்காதலி......

எழுதியவர் : வேலணையூர் சசிவா (15-Jul-15, 6:54 pm)
பார்வை : 120

மேலே