கும்பகோணக் கொடுமை
94 தளிர்களை பலி கொண்ட கும்பகோணம் பள்ளியில் நடந்த கொடிய தீவிபத்தின் (16.7.2004) 11.ம் ஆண்டு நினைவு தினம் இன்று. அன்று இரவு கண்ணீருடன் எழுதியது.
மடலவிழ்த்து
மணம் வீச வேண்டிய
மழலை மொட்டுக்கள்
மறைந்த சோகம் தாக்கி
மண்ணுலகே விம்மியதே!
வாழ வேண்டிய
வாரிசுகளை நெருப்புக்கு
வாரிக்கொடுத்து விட்டு
வாடி நிற்கும் பெற்றோர் கண்டு
கருகிய அரும்புகள் கண்டு
கண்ணீரை கண்டறியாத
கண்களில் கூட குருதி வடிந்தனவே!
பாடம் படிக்கவென்று
பாடசாலை சென்ற
பச்சிளம் சிறார்களை
பலி கொண்டது தீ!
பாடம் கொண்டதா சமுதாயம்?
அக்னியின் அகோர பசிக்கு
அழகிய அரும்புகளா?
நெஞ்சங்களை கீறிய
நெருஞ்சிமுள்ளான நிகழ்வில்
பிஞ்சுகளை கருக வைத்து
பிணக்குவியல் கண்டோமே!
காரணங்கள் அலசப்படும்
நிவாரணங்கள் வழங்கப்படும்
நீதி விசாரணை துவங்கப்படும்
தவறு செய்தவர் தண்டிக்கப்படலாம்
இவையெல்லாம்...
தளிர்களின் இழப்புக்கு ஈடாகுமா?
பெற்றவர்க்கு கொள்ளி
வைக்கவேண்டிய
பிஞ்சுகளுக்கு கொள்ளி
வைத்தனரே பாவிகள்!
தணலினின்று
தப்பித்து வெளியேற
தக்க வழியில்லாத பள்ளியில்
அவர்தம் ஆவிகள் வெளியேற மட்டும்
அத்தனை வழிகளா?
வாழ்வுக்கு வழிகாட்டுவர்
வாத்திகள் என்போம்... ஆனால்
தாம் மட்டும் தப்பித்து
சிறுவரின் சாவுக்கு வழிகண்ட
சிறுமதியோர் நினைத்திருந்தால்
தவிர்த்திருக்கலாம்....
தடுத்திருக்கலாம்....

