காதலில் ஓர் தவம்

செல்லமடி நீ எனக்கு..
சிங்காரநடை தான் உனக்கு..
மயிலிறகு நான் எடுத்து
வானவில்லின் நிறம்துடைத்து
தோகைமயில் தோழியவளின்
பொன்தேகம் வடிக்கவோ..
தேன் சேர்க்கும் வண்டினமும்
தேவதையின் கண் பார்த்து
தேடிவந்த தொழில் மறந்து-அவளை
நாடித்தான் சென்றதோ..
உன் இதழ் சாயம் போகாமல்
குழல் சாயம் நீ எடுத்து
நோகாமல் தேய்கையிலே
நொந்துதான் போகிறது என் உள்ளம்..
நான் பெறா வரம்தனை
வண்ணச்சாயம் பெற்றதே என எண்ணி
வாழ்வுதனை முடித்துக்கொள்ள-என்றும்
மனம் தேடுகிறதே உன்னால் பள்ளம்..
உன் செம்மேனி மணம்தனிலே
பூ போன்ற குணம்தனிலே
சந்தனமும் தோற்குதோ..
மணத்திற்கு யாம் இருக்க
மறு உருவை ஏன் படைத்தாய்- இறையிடம்
ஜவ்வாதும் சண்டைதினம் போடுதோ..
அன்னம் இவள் கன்னம் தொட்டு
ஆசைமுத்தம் நானும் இட்டு
கெட்டிமேள சத்தம் கேட்டு
மஞ்சள் தாலி கட்டு கட்டு..
மனமும் தினமும் ஏங்குதே....
மாசற்ற மல்லியவள்
இந்த மன்னவனின் அல்லி அவள்
இதழ் சேர்ந்து பேசாத
மௌனத்தின் வார்த்தைதனில்
சம்மதத்தை கேட்டிட-என்
செவியும் தவமாய் கிடக்குதே..