துறவரம்

கோவில் படிகள் கடந்து,
பிரகாரம் அடையும் முன்,
ஆங்காங்கே அமர்ந்திருக்கும்,
சாதுகளின்பால் அடங்காத ஒரு ஈர்ப்பு !
யாசகமாய் பெற்றதை,
சூசகமாய் பகிர்ந்துண்டு,
நேரம் நீராடி நிதமும் நீருபூசும்,
அடியார்களின் முகம்பார்த்தது லயிப்பு !
உள்ளே நடனமிட்ட பேராவல்,
மேனிபடரத்துடித்த காவிக்கட்டு,
திருநீறு ஆக்ரமித்த அகலமான நெற்றி,
எல்லாம் பார்த்து உள்ளகமெல்லாம் சிலிர்ப்பு !
தெய்வம் பார்த்து திரும்புகையில்,
அவருடனே கொஞ்சம் உரையாடல்,
கடவுளர் கதைகளின் பகிர்தல்,
என என்னையுமறியாமல் எனக்குள்ளே பயிர்ப்பு !
எல்லாம் புரட்டிப்போட,
அடங்காத ஆவலுடன்,
திரும்பாத திமிருடன்,
வளையாத நெஞ்சுறுதியுடன்,
வளர்ந்தோங்கும் வாஞ்சையுடன்,
வானம் தொடப்பார்க்கும் ஆசையுடன்,
ஆக்ரமிக்கப்பார்க்கும் பேரவாவுடன்,
கிடைக்குமா காவியெனும் அலறலுடன்,
ஆவி துளைக்கும் அற்புத எதிர்பார்ப்புடன்,
நடக்கத்துவங்கினேன் நான் நான் நான்,
என்னை நானே ஒரு ஞானியாய் சிருஷ்டித்து,
எனக்கே பட்டையை அடித்து வியந்து முஷ்டித்து,
நாட்பட நாட்பட நானாகிப்போனேன்,
ஒரு முழுமை நிறைந்த காவிப்பழமாய்,
பார்த்தவர் ஆராதிக்கும் பேரழகு பிம்பமாய்,
கேட்கும் அமைதியை தூக்கித்தரும் துறவியாய் !
எல்லாம் கடந்தும் உருண்டும் திரண்டும் ஓடிய,
சிறப்பான நாட்களில் பெரிதாய் ஒரு திருப்பம்,
சந்தித்தேன் ஒரு மெலிந்த தெளிந்த யாசகனை !
அவன் சொன்னான் !
அற்பனே !
துறவு ஒரு வரம் !
அது பேராசை நிரம்பிவழியும்,
உன்போல் துஷ்ட்டனுக்கு இல்லை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (16-Jul-15, 9:15 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 149

மேலே