​என் வாழ்க்கைப் பயணம் அனுபவச் சாரல்கள் - 10 ​

​​​என் இளமைப் பருவ காலத்தில் நேரம் செலவழிக்க , இப்பொழு உள்ளது போல நவீன வசதிகள் இல்லை ... பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த மையங்களோ இல்லை ...​அனைவரும் அறிந்தது , ஒன்று திரையரங்குகள் ..மற்றொன்று கடற்கரை மட்டுமே . கடற்கரைக்கும் அடிக்கடி செல்ல முடியாது. திரைப்படங்களோ இப்போது வருவது போன்று மாதம் 10 படங்களோ இல்லை. இந்த அளவிற்கு திரை அரங்குகளோ .. நவீன வசதிகளுடன் கிடையாது. ஆனால் டிக்கட் மிகவும் குறைவுதான் . இந்த அளவு நடிகர் , நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். அதனால் அப்போது உள்ள நடிகர் நடிகைகளின் பெயர்கள் எல்லாம் தெரியும் ....படம் ரிலீஸ் ஆகும்போது 3 அல்லது 4 அரங்குகளில்தான் திரையிடப்படும். அதிலும் சிவாஜி அவர்கள் படம் என்றால் ...சென்னையில் சாந்தி , கிரௌன் , புவனேஸ்வரி என்று மூன்றில் மட்டும்தான் வரும் . அதே போன்று எம் ஜி ஆர் படம் என்றால் சில குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும்தான் . பல நல்ல படங்கள் 100 நாட்கள் , 25 வாரங்கள் என்று ஓடும் . நாங்கள் பண்டிகை நாட்களில் ( தீபாவளி , பொங்கல் ) வெளிவரும் திரைப்படங்களை முதலிலேயே முன்பதிவு (அட்வான்ஸ் புக்கிங்) செய்வோம் ...இல்லையெனில் கள்ளமார்க்கட்டில் வாங்கிவிடுவோம் . ஒரே நாளில் இரண்டு படங்கள் பார்த்து விடுவோம். அதெல்லாம் எங்களுக்கு ஒரு சாதனை . மறுநாள் பள்ளியில் நண்பர்களுடன் முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை பகிர்ந்து கொள்வோம் . பாடல்களைப் பற்றி ஒரு பட்டிமன்றமே நடக்கும் .
அடுத்த வாரம் முதல் வானொலியில் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் எந்தப் பாடல் முதல் இடத்தை பிடிக்கிறது என்பதை அறிய வானொலிப் பெட்டியை சுற்றிலும் அமர்ந்து கொள்வோம். ஒரே த்ரில்லாக இருக்கும் .....

கடற்கரை அல்லது அருகில் உள்ள நல்ல பூங்காவிற்கு செல்வோம் . இப்பொழுது எங்கள் பகுதியில் பூங்காவே இல்லை .. அதுவேறு கவலை எங்களுக்கு . சில முக்கிய பகுதிகளில்தான் பெரிய அளவில் நல்ல பூங்காக்கள் அமைந்துள்ளது . அங்கேயும் மற்றப் பகுதிகளில் இருந்து வருவதால் , கூட்டம் அலைமோதுகிறது . வாக்கிங் போகிறவர்கள் பாவம் , அண்ணா சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வது போன்றும் , எதிரில் வருபவரையும் இடித்து செல்வதையும் பார்த்திருக்கிறேன் .

நான் 9 வது படிக்கும்போது எங்கள் மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் திரு S நரசிம்மன் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார். இருந்தாலும் அதற்குப்பின் அடிக்கடி பள்ளிக்கு வருவார். அவரை நிர்வாகம் Correspondent ஆக நியமனம் செய்தார்கள் . மிகவும் நேர்மையான , தகுதியான ஒருவரை அந்த பதிவியில் அமர்த்தியது நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அதன்பின் நான் SSLC படிக்கும்போது , திடீரென்று ஒருநாள் மதியம் மாரடைப்பால் காலமானார் . பேரிடி எங்களுக்கு . சொல்லன்னாத் துயரம் அடைந்தோம். அத்தனை மாணவர்களும் , ஏறக்குறைய 1200 பேரும் , வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினோம் ... கண்ணீர் விட்டு அழுதார்கள் அத்தனை மாணவர்களும் . மறக்க முடியாத மாமனிதர் .

அவருக்குப் பின் தலைமை ஆசிரியாராக வந்தவர் திரு K பாரத்தசாரதி அவர்கள் . மிக மென்மையான உள்ளம் படைத்தவர். சென்னை , சேத்துப்பட்டு , ஆண்கள் கிறித்துவ கல்லூரி பள்ளியில் இருந்து வந்தவர் . நான் பள்ளி இறுதி ஆண்டு படித்ததால் அவ்வளவு நெருக்கம் இல்லை . நன்றாக அன்புடன் பழகுவார் . சிரித்த முகமுடனே இருப்பார் .

இந்தப் பதிவின் முக்கிய அம்சமே எங்கள் தாத்தாவைப் பற்றி உங்களிடம் பகிர்ந்திட நினைக்கிறேன் .

ஒருமுறை எங்கள் பள்ளியில் அந்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு திட்டத்தை , திரு நரசிம்மன் அவர்கள் தலைமையில் , எங்களது தாத்தா தான் முதல் நாளன்று , அந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அந்த அளவிற்கு எங்கள் தாத்தா ஒரு சமூக அந்தஸ்துடன் வாழ்ந்தவர் . அவருக்கு எங்கள் பகுதியில் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவரை நேரில் வந்து பார்க்காத அனைத்து அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் , திரையுலகை சார்ந்த பலரும் , காவல்துறை உயர் அதிகாரிகளும் இல்லை என்றே கூறலாம் . ஒருமுறை திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களும் , கர்நாடக இசைப்பாடகர் திரு மதுரை சோமு அவர்களும் வந்தார்கள் . நான் அருகில் நின்று பேசுவதையே கவனித்து கொண்டிருந்தேன் . அதே போன்று எங்கள் தாத்தாவிற்கு அநேகமாக உயர்நீதி மன்ற அப்போது இருந்த அனைத்து நீதிபதிகளும் மிகவும் அறிமுகமானவர்கள் . முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு S நடராஜன் அவர்களும் , திரு S மோகன் அவர்களும் மிகவும் நெருக்கமானவர்கள் .

ஒருமுறை மதியம் தாத்தா அவர்கள் உறங்கி கொண்டிருந்தார் . மதிய வேளைகளில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பார். ஒருவர் காரில் வந்திறங்கினார் .அவருடன் வேறு சிலரும் இருந்தனர். வெளியில் நின்ற என்னிடம் , தாத்தாவின் பெயரை சொல்லி அவரை பார்க்கவேண்டும் என்றார்கள். நான் அவரின் நிலையை கூறி கொஞ்சம் காத்திருங்கள் என்றேன் . அவர்களும் சுமார் அரைமணி நேரம் அமர்ந்து இருந்தனர். அதற்குள் தாத்தா சிறிது விழிக்க ஆர்மபித்தார். நான் அருகில் சென்று , அப்பா ...( நான் வரை அப்படித்தான் அழைப்பேன் ) யாரோ 3 பேர் உன்னைப் பார்க்க காத்திருக்கிறார்கள் ... அரைமணி நேரம் ஆகிறது என்றேன் . அவரோ எழுந்து நின்ற , யார் என விசாரித்து வா என்றார் . நான் அங்கு கொஞ்சம் பெரியவராக கருப்பாக இருந்தவரிடம் , யார் என்று கேட்க சொன்னார்கள் என்று தாத்தா கூறியதை சொன்னேன் . அவர் உடனே சிரித்துக் கொண்டே ( பழக்கப்பட்ட குரல் போல இருந்தது ) .. நான் S V சுப்பையா என்று சொல்லப்பா என்றார். அவரிடம் சென்று கூறியதும் தாத்தா வேகமாக வெளியில் வந்து வாங்க வாங்க சுப்பையா ...என்று கைகுலுக்கி அமரவைத்தார்.
அவருடன் வந்தவரும் தாத்தாவின் பக்கம் திரும்பி வணங்கினார் . அவர் உடனே என்ன்னப்பா கோபாலகிருஷ்ணா எப்படி இருக்க ... என்று பேச தொடங்கிவிட்டார்.

அவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றபின் , என்னை அழைத்து கேட்டார் ...வந்தவர்களை உனக்கு அடையாளம் தெரியவில்லையாடா என்றார் .பின்பு அவரே , ஒருவர் நடிகர் S V சுப்பையா ...பெரிய நடிகர் ...இன்னொருவர் நடிகர் திரு V கோபலகிருஷ்ணன் என்று கூறினார். SVS அவர்களை திரையில் மேக்கப்புடன் வெள்ளையாகவே பார்த்ததால் அடையாளம் தெரியவில்லை. நேரில் கருப்பாக இருந்தார். ஆனால் கோபாலகிருஷ்ணன் சாதரணமாக இருந்தார்.

இது போன்ற பல அனுபவங்கள் ... எங்களுக்கு . எங்கள் வீட்டிற்கு தாத்தாவை பார்க்க வந்த பல அரசியல்வாதிகளில், எனக்கு நினைவில் உள்ளவர்கள் ...மறைந்த முன்னாள் அமைச்சர்கள் திரு N V நடராஜன் , திரு N V N சோமு , .நாவலர் திரு நெடுஞ்செழியன் , திரு கே மதியழகன் , திரு K A கிருஷ்ணசாமி , திரு S D சோமசுந்தரம் , திரு நாஞ்சில் கே மனோகரன் , திரு A V P ஆசைத்தம்பி , திரு இராம அரங்கண்ணல் , திரு N M மணிவர்மா , திரு G லக்ஷ்ணணன் , ex DY SPEAKER , லோக்சபா , ஆவார்கள் . எங்கள் தாத்தாவிற்கு அண்ணல் காந்தி அடிகளையும் , பெருந்தலைவர் காமராஜர் அவர்களயும் மிகவும் பிடிக்கும் . அவர்களின் படங்கள் வீட்டில் அவர் அறையில் இருக்கும் .

மற்றும் முன்னால் முதல்வர் பெரியவர் M பக்தவத்சலம் , முன்னாள் ஜனாதிபதி திரு R வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் கலைஞர் திரு மு கருணாநிதி , பேராசிரியர் கே அன்பழகன் , Dr A கலாநிதி , முன்னாள் MP , ஆற்காடு திரு வீராசாமி , தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை , போன்றோர் நன்கு அறிமுகமானவர்கள் . இயக்குனர் திரு A C திருலோகச்சந்தர் , இயக்குனர் K S கோபாலகிருஷ்ணன் , நடிகர் தங்கவேலு அவர்களும் தாத்தாவிற்கு மிகவும் நெருங்கியவர்கள் . முன்னாள் கேரள மாநில கவர்னர் திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து அவரிடம் பேசிவிட்டு செல்வார் .மற்றவர்கள் உடனே நினைவுக்கு வரவில்லை .

எங்கள் முகவரியின் மூலவரே தாத்தாதான் . அவரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது எளிமை , நேர்மை , நேரம் தவறாமை , சமூக சேவை , அடுத்தவரை மதிக்கும் தன்மை , உதவிடும் குணம், அயரா உழைப்பு ...போன்றவை . அவர் இறுதிவரை , 88 வயது வரை , பணிபுரிந்த பெருமகனார் . இவ்வளவும் தற்பெருமைக்காக இங்கே கூறவில்லை ....என் மன திருப்திக்காக பதிவிடுகிறேன் . என் கடமையும் கூட அவரை நினைவு கூர்வது . அவரின் பெருமைகளை பகிர்வது ...ஏன் , நன்றிக்கடன் என்றும் சொல்லலாம் . ( மேலே படத்தில் இருப்பதுதான் எங்கள் தாத்தா )

அவரின் 81 வது பிறந்தநாள் நிகழ்ச்சி மிக பெரிய அளவில் கொண்டாடப்பட்டது . அதை பிறகு பதிவிடுகிறேன் .

சில முக்கிய நிகழ்வுகளையும் ​, சந்தித்த பிரபலமானவர்களையும் பற்றி வரும் பகுதிகளில் கூறுகிறேன் .


மீண்டும் சந்திக்கிறேன் ...


பழனி குமார்
​16.07.2015​

எழுதியவர் : பழனி குமார் (17-Jul-15, 7:01 pm)
பார்வை : 330

சிறந்த கட்டுரைகள்

மேலே