எல்லாம் மாயா

மதி மயக்கும் மாலை வேளை

அந்த இனிய பொழுதில்,

சாலை ஓரமாக நடந்து கொண்டிருந்தேன்.

திடீரெனக் அவசரக் கூட்டம்

நடத்தியது மேகங்கள்.

என்ன காரணமோ தெரியவில்லை

பேச்சு வார்த்தை முடியாமல்

நீண்ட நேரமானதால்

இருட்டி போனது.

வெளிச்சத்திற்காக

மின்னல் கொடியேற்றினார்கள்

மேகக் கூட்டத்தில் சிலர்.

முடிவில் மழைப் பொழியலாம் என

ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மழைத்துளிகள் தன் பயணத்தை

கீழ் நோக்கி ஆரம்பித்தது

என்னை கரைத்து விட வேண்டும் என

வேகமாக வந்த மழையிடமிருந்து தப்பிக்க

ஒரு மூடியிருந்த கடையின்

தாழ்வாரத்தில் ஒதுங்கி கொண்டேன்



இன்னும் கொஞ்சம்

அவகாசம் கொடுத்திருந்தால்

என் வீட்டை அடைந்திருப்பேன் என

மழை மீது சலித்துக் கொண்ட

அதே வேளையில்,

மழை நன்றாக பொழிய வேண்டும் என

விவசாயிகள் வேண்டிக் கொண்டனர்



எப்போது மழை நிற்கும்

வேண்டிய அதே வேளையில்

ஒரு உருவம் என்னை

நோக்கி வந்து கொண்டிருந்தது

இடைவெளி தெரியாத அந்த கனத்த

மழைச் சிதறலை ஊடுருவிக் கொண்டு

அந்த அழகு பதுமை

மழைக்காக ஒதுங்கியது

என் பக்கத்தில்.



சாரலின் குளிர்ச்சியில்

நடுங்கிய என் உடல்

புரியாத வெப்பத்தின்

காரணத்தால் வியர்த்தது.

இப்படிபட்ட அழகை

நான் பார்த்ததே இல்லை.

கொண்டு வந்து சேர்த்த சாரலுக்கு

கோடி நன்றிகள் சொன்னேன்.


முழுவதுமாக பார்க்க தைரியம்

இல்லாத ஆண் மகனாய்

எனது ஓர விழிப் பார்வையை

துணைக்கு அழைத்தேன்.

அவளின் கரு விழிப் பார்வை

என்னை நோக்கி கரை சேர்ந்திருப்பதை

பார்த்து பரவசமடைந்தேன்.



சாரலோடு பின்னிய காற்று

அவள் சேலையோடு போராட

என் மனம் ஏதோ இனம் புரியாத

இன்பத்தில் ஊசலாடியது.

அவள் நெற்றியில் இருந்து

வழிந்த மழைத் துளிகளை

தன் விரல்களால் மென்மையாக சுண்டிவிட

நிலவில் இருந்து தெறித்த

பனித் துளிகள் போல

சில என் மீது விழ

மோட்சம் அடைந்தேன்.



மின்னல் ஒன்று வானில் கீற

அந்த மின்னலில் ஒரு நூலை பிரித்து

அவள் கழுத்தில் கட்டி விடத்

தூண்டியது என் வேகம்.

மீண்டும் ஓர விழியில்

என் கண் அவளை தேடியது

அவள் கடைக் கண் எனை பார்க்க

நான் தலை குனிந்தேன்.

பார்வை அவள் பாதத்தில் பட்டு

அவள் திருவடி சரணடைந்தேன்.



மழை தன் வேகத்தை குறைத்துக் கொண்டது.

கடவுளே... வேண்டாம் என

மனமுருக வேண்ட ஆரம்பித்தேன்

எனது வேண்டுதல் தோற்றுப் போனது

மழை முழுவதுமாக நின்று போனது

எனது இதயத் துடிப்பு

அதிகரித்த வேளையில்.



தன் முகத்தை முந்தானையால்

துடைத்து கொண்டு

இடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள்

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து

புள்ளியாகிப் போனாள்,

என் மனம் கனத்துக்

கொண்டிருக்கும் அதே வேளையில்



இப்படித்தான் வாழ்வில்

எத்தனை எத்தனை விசயங்கள்

வந்து மறைந்து போகின்றன

எவ்வளவு பெரிய தாக்கத்தை

ஏற்படுத்தி விடுகின்றன

சில வருடங்களாக

சில மாதங்களாக

சில வினாடிகளாக.

அன்னாந்து பார்த்தேன்

தெளிந்த வானம் கண்ணில் தெரிந்தது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (24-Jul-15, 4:53 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 78

மேலே