கடமையில் காலத்தைக் கழி

காலையில் விழி! கடந்திடும் பழி!
கண்டிடும் கனவுகள் கண்ணெதிர் காணவே
கடமையில் காலத்தைக் கழி!

தரித்திரம் உடை! சரித்திரம் படை!
தரணியில் பலவழி இருக்குது உனக்கு
தடம்பதி நொறுங்கிடும் தடை!

வாய்மையை நினை! வீரம்உன் கணை!
வஞ்சகக் கூட்டத்தை தூளெனப் பொடித்திடு
வையத்தில் உனக்கில்லை இணை!

புதுமையை அழை! பொறுப்பது பிழை!
பூமியில் பூத்திட்ட மூடத்தை முறித்திட
புறப்படு பொழிந்திடும் மழை!

உள்ளத்தை உழு! உழைப்பினைத் தொழு!
உண்மையை நேர்மையை கடைபிடி வாழ்வில்
உண்டாகும் உனக்கொரு குழு!

விதியொரு சதி! இருக்குது மதி!
வேதனை சுமந்திடும் உள்ளத்தை விடுத்து
வெளிப்படு சேர்ந்திடும் நிதி!

தீமையைத் தவிர்! தின்பதைப் பகிர்!
தேனாய்ப் பேச்சினில் இனிமையை கூட்டு
தேடிடும் உனைப்பல உயிர்!

வாழ்க்கையே புதிர்! வீழ்வதைத் தவிர்!
வஞ்சனை செய்பவர் தொடர்பினை நீக்கு
விலகிடும் மனம்கொண்ட புதர்!

மாதினை நினை! மணந்தபின் அணை!
மனையறம் அதற்கொரு இணையறம் இல்லை
மனைவியே நிரந்தரத் துணை!

மகிழ்ச்சியைப் பெற! மனதினைத் திற!
மண்ணில் வாழ்கின்ற காலம் வரையினில்
மற்றவர் பிழையினை மற!



அன்பினில் குளி! பண்பினில் களி!
அனுசரி வாழ்வில் தினசரி உன்னை
அடைந்திடும் ஆனந்தத் துளி!

சோர்வினை எறி! சோம்பலை எரி!
சோற்றினைப் பகிரும் சோகத்தில் விலகும்
சொந்தங்கள் உண்மையை அறி!

உறக்கத்தைக் குறை! உள்ளத்தை நிறை!
உறங்கிட உந்தன் உயர்வும் உறங்கும்
ஓங்கியே அடித்திடு பறை!

உழைப்பவன் எவன்? உயர்பவன் அவன்!
உழைப்பெதும் இன்றி உண்பவன் எவனோ
உண்மையில் அவனொரு எமன்!

அறிவினை நம்பு! அதுதரும் தெம்பு!
அறிவினை பெருக்கி ஆற்றலை வளர்த்து
அகிலத்தில் உயர்ந்திட கிளம்பு.

எழுதியவர்
பாவலர் .பாஸ்கரன்

எழுதியவர் : (26-Jul-15, 4:35 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 63

மேலே