உயர்ந்த உள்ளம்
வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தினத்தன்று பள்ளிவாசலில் பயான் நடந்து கொண்டிருந்தது, ஊரில் புதிதாக கட்டிட வேலை நடக்கும் பள்ளிவாசலுக்கு நன்கொடை திரட்டும் விதமாக சிறப்பு பேச்சாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார் , அவர் அல்லாஹ்வின் பள்ளிக்கு நீங்கள் ஒரு செங்கல் வாங்கும் அளவிற்கு உதவி செய்தால்கூட அல்லாஹ் உங்களுக்கு சுவர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டிவைப்பான், மேலும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதால் அவன் நமக்களிக்கும் நன்மைகளை பற்றியும் அந்த ஆலிம் மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
உரை முடிந்ததும் பள்ளிவாசல் தலைவர் உதவும் நல்ல உள்ளங்கள் எழுந்து உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றதும், ஊரில் மிகவும் பணக்காரர் ஒருவர் வேகமாக எழுந்து 100000 ரூபாய் நன்கொடை என் பெயரில் எழுதிக்கொள்ளுங்கள் என்றார், அதைப்போல் ஒவ்வொரு மக்களும் தன்னால் முடிந்த அளவு 10000, 5000, 2000, 1000 என்று பள்ளிவாசலுக்கு வழங்க, தனது நன்கொடையை பதிவுசெய்தனர்.
அதன்பிறகு தொழுகை முடிந்து மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது ஊருக்கு புதிதாய் வந்த ஒருவர் யாருங்க அவரு பள்ளிவாசலுக்கு 100000 ரூபாய் நன்கொடை வழங்க பெயர் சொன்னவர், உண்மையிலேயே அவருக்கு பெரியமனசுதாங்க இந்த காலத்துல இப்படி ஒரு ஆளை நான் பார்த்ததில்லைங்க என்று ஆச்சர்யபட்டார். அப்போது அவரின் நண்பர் சொன்னார் அட போங்கங்க, அவரு வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறாரு, ஊருக்குள்ள கொடுத்தா வெளில தெரிஞ்சிடும்னு வெளியூர்ல ஆட்களை வச்சி தொழில் பண்றாரு ஹராமான வழியில பணம் சம்பாதித்து இப்படி நல்லது பண்ணிட்டா அந்த பணம் ஹலாலாஹிவிடுமா...??? ஊர்மக்களை வேண்டுமானால் இவர் ஏமாற்றலாம் ஆனால் எல்லாம் அறிந்த அல்லாஹ்வை ஏமாற்ற முடியுமா.....??? அட நான்வேற தொழுகை முடிஞ்சதும் மத்தவங்களை பத்தி புறம்பேசிகிட்டு இருக்கேன், யா அல்லாஹ் என்ன மன்னிச்சிடு....??? அவரவர் குழிக்கு அவங்கதான் பதில் சொல்லணும், வாங்க வீட்டுக்கு போகலாம் என்று சென்று விட்டனர் இரு நண்பர்களும்.
அன்றைய அஸர் தொழுகை முடிந்ததும் ஒருலட்சம் அள்ளிக்கொடுத்தவரின் அண்ணன் பள்ளிவாசல் தலைவரை தனிமையில் சந்தித்தார், சொல்லுங்கள் ஜப்பார் பாய் என்ன விஷயம்…? அதுவந்து என்னால பள்ளிக்கு எந்த நன்கொடையும் கொடுக்க முடியல… எனக்கு இருக்கும் இரண்டு பசுமாடுகளை வைத்துதான் என் குடும்பம் நகர்கிறது, இருந்தும் நான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்று சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கூட எனது நண்பர் ஒருவரின் மகள் திருமணத்திற்கு கொடுத்துவிட்டேன். ஏன் ஜப்பார் பாய் உங்கள் தாயாரையும் நீங்கள்தான் பார்க்கிறீர்கள், மதரசாவில் ஓதும் 3 பிள்ளைகளுக்கு தினமும் சாப்பாடு கொடுக்கிறீர்கள், உங்கள் தம்பி வசதியாகத்தானே இருக்கிறார் அவர் உங்களுக்கு உதவி செய்வதில்லையா....? இல்லை தலைவரே நான்தான் எதையும் எதிர்பார்ப்பதில்லை, அதை விடுங்கள் நான் சொல்லவந்ததை மறந்துவிடப்போகிறேன், சொல்லுங்கள் ஜப்பார் பாய்…?
இன்றைய ஜூம்ஆ உரையில் அசரத் அவர்கள் அல்லாஹ்வின் பள்ளிக்கு உதவிசெய்வதை பற்றி சொன்னதும்…. என்னிடம் தற்போது உதவி செய்ய பணம் இல்லாததால் என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது….. அட போங்க ஜப்பார் பாய் இதுக்கு எதுக்கு கலங்குறீங்க வசதி உள்ளவர்களிடம்தான் நாங்கள் நன்கொடை கேட்டோமே தவிர, இல்லாதவர்களிடம் கேட்கவில்லை, அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அல்லாவிற்கு தெரியாதா….? அவன் தோற்றத்தை பார்ப்பதில்லை மனதைத்தான் பார்க்கிறான்.
மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கும்போது பெயர் கொடுத்தவர்களின் மனதில் அவர்களையும் அறியாமல் பெருமை வந்திருக்கலாம், அல்லாஹ் அறிவான், எதனால் சொல்கிறேன் என்றால்....!!! அப்போது பெயர் கொடுத்தவர்களின் பட்டியலை கணக்கு பார்க்கும்போது மொத்தம் மூன்று லட்சம் பிரிந்திருந்தது, கூட்டம் சென்றதும் ஏழுபேர் என்னிடம் தனியாக வந்து பெயர்கூட எழுத வேண்டாம் என்று சொல்லி என்னிடம் பணமாக கொடுத்த தொகை வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்…. எனினும் இவர்கள் மக்களுக்கு முன்னாள் பெருமைக்காக செய்யவில்லை, இந்த ஏழு பேரும் உண்மையாக அல்லாஹ்விற்காகவே உதவி செய்தவர்கள், என்னை பொருத்தவரை இவர்கள் குறைந்த பணம் கொடுத்தாலும் இவர்கள்தான் சிறந்தவர்கள், புரிகிறதா ஜப்பார் பாய் ….!!!!!!
தலைவரே என்னிடம் பணம் இல்லை என்பதால்…. தொழுகை முடிந்தும் என் மனம் பாரமாக இருக்கவே... வீட்டிற்கு சென்று எனது குடும்பத்தோடு ஆலோசனை செய்தேன், நானும் எனது மக்களும் பள்ளிவாசல் பணி தொடங்கியதும் எங்களால் இயன்ற உதவி செய்ய முடிவெடுத்துள்ளோம். எனது மூத்த மகனுக்கு கொத்தனார் வேலை தெரியும், இளைய மகனுக்கு எலெக்ட்ரிக் வேலை தெரியும், அதனால் நீங்கள் பள்ளிவாசல் பணியை வேறு ஆட்களுக்கு கொடுத்து விடாமல் எங்களுக்கு தாருங்கள், எங்களோடு வேலை பார்க்கும் மத்தவர்களுக்கு மட்டும் நீங்கள் சம்பளம் வழங்கினால் போதும், எனக்கும் என் மக்களுக்கும் நீங்கள் சம்பளம் தர வேண்டாம். அல்லாஹ்வின் வீட்டிற்காக நாங்கள் மனமுவந்து சந்தோசமாக செய்கிறோம். இதை சொல்லிவிட்டு செல்லவே நான் வந்தேன் என்றார் ஜப்பார் பாய்…..!!!!!
தள்ளாத வயதிலும்.... பள்ளிவாசலுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை நினைத்து பள்ளிவாசல் தலைவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது…!!!!
தாராளமாக செய்யுங்கள் ஜப்பார் பாய் நான் ஏற்பாடு செய்கிறேன்…. இதற்குரிய கூலியை எங்களால் தரவே முடியாது, தந்தாலும் போதாது…!!! அல்லாஹ் ஒருவனால்தான் உங்களுக்கு நற்கூலி வழங்க முடியும் என்று ஜப்பாரின் குணத்தை நினைத்து பெருமிதம் அடைந்து ஆரத் தழுவிக்கொண்டார் பள்ளிவாசல் தலைவர் .......!!!!!