​கேள்விக்குறிகள்

கேள்விக்குறிகள்...
-எம்.எப்.எம்.றிகாஸ்

நிம்மதியான என் உறக்கத்தில் ஓலக்குரல்களும் ஒப்பாரிப்பல் லவிகளும் என் செவிச்சோணைகளை வெட்டிக்கிழித்து, அதட்டி எழுப்பியது. “என் வீடா இது?....” மொத்த உறவும் உறவுக்கு முழுக்குப்போட்ட மச்சினன் குடும்பமும்.... முணுமுணுப்பும் சலசலப்பும்......முற்றத்தை முறைத்தேன் மொத்த ஊரும் மௌனபோராட்டத்தில்... என் தெருக்களில் குடியிருந்த கலகலப்பு களவுபோயிருந்தது.....
“என் வீடா இது?.... என்ன இளவு இது... என் வீட்டில்?......”
“யார் அவன்....?? கையில கட்டு... தலையில ஒட்டு... பெரியப்பா ஏதோ ஆறுதல் சொல்லிட்டிருக்கிறமாறி...”
மெதுவாக பிட்டத்தை கட்டிலில் இருந்து எழுப்பி சுற்றியிருந்த சனச் சிக்கலை விலத்தி
பார்வையை அவன்மீது செலுத்தினேன்.
“அட இவன்தானா?..... நம்மட பிரன்ட்தான்.. ஓ நேத்து என் கூட ஒபிஸ_க்கு கார்ல வரும்போது சி;ன்ன எக்ஸிடன்ட் நல்லவேலை ஒன்டுமாகல.... இவ்வளவு பேரும் என்னத்துக்கு?..
எதுக்கும் வெளியபோய் பார்ப்பம்....”
கட்டிலில் சாய்ந்திருந்த மாமனாரின் தோளைத்தட்டிவிட்டு முன்னேறி திண்ணைக்க வந்தேன்.
மாமியாரை வளைத்து முதியோர் சங்கம் கூடி பாக்கு இடித்து பொக்கையை
நிரப்பிக்கொண் டிருந்தது.
“இதுகளுக்கு மட்டும் ஒரு இள வு வருதில்லை அப்பதான் இந்த ஒலக்க சத்தம் ஓயும்...”
“நடுவுல பக்கத்து வீட் டு பாக்கிய கிழவி... போற காலத்துல இதுக்கு என்னத்துக்கு
பாட்டுவேண்டிக்கெடக்கு...? எதுக்கெடுத்தாலும் பாட்டெண்டு சொல்லி அலரிட்டு... இந்த
காலத்துல எவன் கேப்பான் கேட்டா நாட்டுப்பாட்டாம்... இதயும் மத்த பழுத்ததுகள் சேந் து
கேட்டுட்டு இருக்குதுகள்...”
என்னமோ தெரியல ஊர் வம்ப வாயால அளக்குற மாமியா மட்டும் கப்பல் கவிழ்ந்தமாறி
மௌனமா இருக்குறதுதான் பெரிய அதிசயம்.

இவங்கட கூத்த பார்த்துட்டு இருக்கும்போது என் பிஞ்சு மகன் முறைத்துப்பிடித்துக்கொண்டு
வருகிறான். மெதுவாக அவனின் கைகளைப்பிடித்து உடகார்ந் து மழழை மனம் குடியிருந்த
கன்னங்களில் முத்தமிட் டேன். எப்பவும் அப்பா என்று துள்ளிக்குதிப்பவன் இன்றைக்கு
தட்டிவிட்டு போய்ட்டான்...
இந்த உலகத்தில் அவனுடைய பிறவிதான் என்னை பணமே இல்லாத ஒரு கோடீஸ்வரனாய்
எண்ணவைத்தது. அவன் பிறந்தபோது என் மனைவியிடம் “இவன் தலையில என்ன
எழுதியிருக்கிண்டு தெரியல.. பிழையா எழுதியிருந்தா அத மாத்தி எழுதுவன்...” என்று
கூறினேன். ஆனால் அப்போது நான் பெற்றிருந்த மகிழ்ச்சியின் உக்கிரத்தில் என் வார்த்தைகள்
கடவுளுக்கு சவால் விட்டதை நிச்சயமாக உணரவில்லை. அந்தளவு அளவுகடந்த அன்பு பல
முறை என் கண்களை மூடிவிடும்.
“நாலு வயசுதான் ஆவுது.. நல்ல குறும்பு... கெட்டிக்காரன்...” அவன் தத்தியவாறு முன்வாசலில் கூடி விளையாடிக்கொன்டிருந்த சிறுவர்களுக்குள் ஒருவனாய் ஊஞ்சலில் மும்மூரறமாக ஐக்கிமாகிவிட்டான். என் பார்வைகள் அவன் சரீரத்தில் இருந்து சற்றே சரிந்தது.
இப்போது என் எண்ணங்களும் பார்வைகளும் ஒருமித்து என் வாழ்க்கையின் ஆதாரமாயும்
அர்த்தமாயும் விளங்கும் என் மனைவியை நோக்கி அலைந்தன.

என் மனைவி ஆழமான ஓரு காதலின் உறைவிடம், என் வாழ்க்கை மாற்றத்தின் ஒட்டுமொத்த
அடையாளம் அவள். ஒரு காலத்தில் புழுதிபடிந்திருந்த அர்த்தமற்ற என் வாழ்க்கைக்கு
முகவரியாய் வந்தவள் அவள். அவளது கரங்கள் எனது கரங்களை பற்றிய அந்த நாள் என்
வாழ்க்கையின் இனிமையான ஒரு வசந்த காலம். இன்றும் குறைவில்லாத அந்த
சந்தோசப்பூக்கள் என் வாழ்வில் பொழிந்து கொண் டிருக்கிறது. என்னை முழுமையாய் ஏற்றுக்கொண்ட அவள், அவளை முழுமையாய் ஏற்றுக்கொண்ட நான், இல்லறத்தில் இருவருக்கும் குறையில்லாத புரிந்துணர்வு. எனக்காகவே பிறந்த என் காதல் மனைவி அவள். அவள் மீது கொண்டிருந்த அளவு கடந்த என் காதலின் விளைவாக அவள் அவளது சொந்தங்களை அறுத்து என் கரங்களைப்பிடிக்க வேண்டிய பரிதாபமான சூழ்நிலை அவளுக்கு. அப்போது அவள் அடைந்த வேதனை என்னால் உணர முடிந்தாலும்கூட எங்கள் காதலின் சுயநலத்தினால் காலமும், சூழ்நிலைகளும் அவள் அவளுடைய குடும்பத்துடன் வாழ்வதினை தட்டிப்பறித்துவிட்டன. இருந்தாலும் முழுமையான அன்பு, காதல், பாசம் பொங்கி வழிந்த எங்கள் இல்லறத்தில் குறைவுகள் கண்ணுக்கு எட்டியதில்லை. இப்பொழுது திருமணமாகி ஆறு வருடங்கள் கழிந்து விட்டது ஆனாலும் நான் அவள் குடும்பத்துடன் அவ்வளவாக பழகுவதில்லை என்பது அவளுக்கு சிறு வருத்தம்தான் என்பதை அவள் பேசும் போது நிறைவாக
உணர்ந்திருக்கிறேன்.

ஒருவாறாக நிறைந்திருந் த பெண்கள் கூட்டத்தில் ஒர் மூலையில் என் மனைவி குந்திக்
கொண்டிருப்பதை அவள் சேலை கொண்டு அடையாளம்கண்டேன். பெண்களை விலத்தி
அவளுக்கு அருகில் சென்றேன்.
என் கண்கள் விறைத்தது.... என்னால் என் மனைவியின் கோலத்தை ஜீரணிக்க முடியவில்லை. இவ்வாறாக நான் அவளை இதுவரை பார்த்ததில்லை...
கண்கள் சிவந்து கண் ணீர் நிரம்பி பெருக்கெடுத்து காய்ந்து இனி வருவதற்கு கண்ணீரே இல்லை என்ற நிலையில் வரண்டுபோயிருந்தன அவளுடைய கண்கள். தலை குனிந்து முடி
குலைந்து....
“ஐயோ.... ப்ரியாவா?..” என்னையே என்னால் நம் பமுடியவில்லை....
அவள் அருகில் சென்று நாடியைப்பிடித்து முகத்தைப்பார்க்க முயன்றேன்... என்னை பார்க்க
விரும்பாதவள் போல் முகத்தை திருப்பி விம்ம தொடங்கிவிட்டாள்.... நிச்சயமாக பலமணிநேரம்
ஓயாமல் அழுதிருக்கிறாள்.
பல முறை அவளுக்கு ஆறுதல் சொன்னேன்....
“ஏம்மா ப்ரியா அழுற?... என்னாச்சு...? பிளீஸ் அழாத நீ அழுறத என்னால தாங்கவே முடியல... பிளீஸ் என்னப்பாரு...”
அவளை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை என் தொண்டைக்குழி அடைத்தது, வார்த்தைகள் ஊமையாகின. காண்பது கனவா? என் புலன்களுக்கு ஒன்றும்புரியவில்லை. அவள் அப்படியே மயங் கி திண்ணையில் சரிகிறாள். கூடியிருந்த பெண்கள் அவளை ஏந்த முற்படுகிறார்கள்.

என்மனம் கேள்வி முடிச் சுக்களால் சுற்றிவளைக்கப்பட்டது. வீட்டில் என்ன நடக்கிறது? ஏதோ
சாவு வீடுபோல் என் வீடு மாறியிருக்கிறதே? கிழவியின் ஒப்பாரி? மனைவி ஏன் அழுகிறாள்?
உறவுகளின் சோக வெள்ளத்திற்கு காரணம்?.... புரியவில்லை.... ஒன்றுமே புரியவில்லை.
நேற்றுத்தான் வசந்த மாலைகளால் கோர்க்கப்பட்டிருந்த என்வீடு இன்று கண்ணீர்ப்பூக்கள்
சொரிந்திருப்பதற்கு காரணம்தான் என்ன?...
பதில்கள் தேட என் கால்கள் என்னை மீண்டும் விறாந்தைக்கு நகர்த்தியது. கேள்விகளின்
கனத்தால் குனிந்து தொங்கிக் கொண்டிருந்த என் தலையை மெதுவாக நிமிர்த்தினேன்.
என் கேள்விகளுக்கெல்லாம் ஒட்டுமொத்த விடையாய் என்னை உலுக்கித்தூக்கிப்போட்டது,
நான் கண்ட அந்த காட்சி... மெய் சிலிர்த்தது, என்னால் என்னையே நம்ப முடியவில்லை...
என் விழிகள் பிதுங்கியது, மனதின் வேகம் என்னையே மீறியது, இனம்புரியாத ஒரு நடுக்கம்,
நடுக்காட்டில் இருட்டில் தனிமையினை பல நாள் அனுபவிக்கின்ற மனநிலை.
என் வீட்டில் பிணம் ஒன்று மக்கள் அஞ்சலிக் காய் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் நான்
உறங்கிய அதே கட்டிலில்.... “??”
என் கால்கள் நடக்க மறுத் தது, இனித்தவழவும்முடியாதவாறு என்மூட்டுக்கள் என்னை இறுக்கி
கட்டிப்போட்டது. முயற்சி செய்து பிணத்தின் அருகே சென்று பார்த்தேன்.
சரியாக யார் என்பதை அடையாளம்காண முடியாதவாறு சிதைந்து போய் நீலம் பதிந்து
கறுத்துப்போன நிலையில் முகம். இறுக்கமாய் துணியால் கட்டப்பட்டிருந்தது.
“யாரா இருக்கும்?... எக்ஸிடன்ட் ஆகியிருக்கணும்... பாரிய எக்ஸிடன் ஒன்டுதான் ஸ்பொட்லயே
உயிர் போயிருக்கணும்...”
என்று மனதில் நினைத்தவாறு தொடர்ந்து எழுந்த என் கேள்விகளுக்கு பதில் தெரியாமல்
என் மனம் அடைந்த தோல்விகளால் என்னை நானே நொந்து கொண்டேன் .

“யாரிடமாச்சும் கேப்பம்... சே..சே.. நம் ம வீட்டுல சாவு நாம போய் யார்டயும் கேட்டா மனுசன்
என்னத்த நெனப்பான்... ஒரு வேலை ப்ரியாட நெருங்கின சொந்தமா இருக்குமோ?... நானும்
அவங்க குடும்பத்தோட பெரிய தொடர்பில்லைதானே... பிறகு அவள்கிட்டயே கேப்பம்”
ஒருவாறு என்மனதை சமாதானப்படுத்தி கொள்ள முயன்றேன்.
“நேரமாயிற்றிருக்கு பொணத்த எடுக்கனும்…”
“ஏம்பா யாராவது பார்க்குறவங்க இருக்கா?... இருந் தா அவசரமா பாருங்கப்பா...”
“மாமா.. சீல எல்லாம் சரியா கட்டிருக்கான்னு ஒருக்கா பாருங்க...”
“சுடுகாட்டுல குழி வெட்டியாச்சாமான்னு கேட்டிங்களா தம்பி?....”
இவ்வாறாக கூடியிருந்த சொந்தங்களின் குரல் கள் சவத்தை சுடுகாட்டுக்குள் கொண்டு
செல்வதற்காய் ஆர்ப்பரித்தன. எனது மனம் எதையெதையோ கேள்விகளாய்க் கேட்டாலும்
கேள்விகளிலேயே சலித் துப்போன என்னுடைய இன்றைய தருணங்கள் ஒரு பெருமூச்சை
மட்டும் விட்டெறிந்தது... விடைகளை அலசும் சூழ்நிலையில் நான் இல்லை, நானும்
ஒருவனாய் வேலைகளில் ஐக்கியமானேன்.
“மச்சான்.. அவடத்துல நிக்குறவங்க கொஞ்சம் விலகுங்க.. சவப்பெட்டிய கொண்டரனும்...”
“இப்படியே ஆளாளுக்கு பேசிட்டிருந்தா எப்புடி... நேரமாகுதுல்ல... தூக்குங்கப்பா....”
நானும் சவத்தின் கால் களைபிடித்து தூக்குவதற்காய் கைகளை நகர் த்தினேன். என்னை
நோக்கிய ஒரு குரல்..
“மச்சான்.. கொஞ்சம் பார்த்து கவனமா தூக்குங்க....” கால்கள் வலுவிழந்த ஒரு தன்மையை
என்னால் உணரமுடிந்தது. ஒரு வேளை கால்கள் சிதைந்திருக்க வேண்டும்....?
சவத்தை பக்குவமாய் பலபேர் சேர்ந்து தூக்கி பெட்டிக்குள் வைத்தார்கள். நிச்சயமாக அதில்
நானும் ஒருவனாய் இருந் தேன்.
அவ்வளவுதான் தாமதம் திண்ணையில் சற்றுநேரம் அடங்கியிருந்த ஒப்பாரிகளும்,
ஓலக்குரல்களும் ஆரோகணமாய் நிசப்தங்களை உடைத்து உருப்பெருத்தது.
முற்றத்தில் இருந்த முகமறியாத பலரும் முண்டியடித்து பெட்டியை தோள்மேல்
ஏந்திக்கொள்ள ஆயத்தமாகிறார்கள்.
மனிதன் சாவு விரித்த வலையிலே நடந்து கொண்டிருக்கிறான், நாளை என் நிலையும்
இதுதான் அப்போதும் ஜனங்கள் என் உடலுக்காய் முண்டியடிப்பார்கள்...
இவை என்னை ஒரு நிமிட ஆன்மீகத்துக்கு அழைத்துச் சென்றது...
திண்ணையில் இருந்து வந்த ஓலங்களும் ஒப்பாரிகளும் மேலும் முன் னேறிக் கொண்டிருந்தது...

அவள் பூமியில் விழுந்து புரண்டு சவத்தை நோக்கி முறண்டு பிடித்தவளாய் திண்ணையில்
இருந்து விறாந்தைவுக்கு எத்தணிக்கிறாள். அவளது குரல் நெஞ்சை அறைந்து உலுக்கியது....
“ஐயோ... நான் என்ன பாவம் செஞ்சிட்டேன்...”
“கல்லு மனம் படைச்ச கடவுளுக்கே பொறுக்கலையா..?..”
கடவுளைக்கூட வஞ்சிக்கும் அளவு நிச்சயமாக அவளுடய ஆன்மீகத்தில் நான் குறைபாடுகள்
கண்டதில்லை...
என் மனம் பதறியது.. ஒன்றுமே புரியவில்லை....??? காண்பது கனவாக இருக்ககூடாதா என்று
உள்ளம் வலித்தது....
என் தலையை அருகில் இருந்ந நிலைக்கட் டில் மோதினேன்... “ஆஆ.. வலிக்கிறது..”
நிச்சயமாக கனவல்ல...
கூடியிருந்த பெண்கள் அவளைத் தாங்கியவாறு சோகம் புரண் டோடுகின்ற மௌனங்களால்
ஆறுதல் சொல்வதை உணர முடிந்தது...
“வண்டியில அலுவலுக்கு அவசரமா போகயிலே ஏ ராசா.....
அவசரமா போ எண்டு மூர்க்க எமன் வந்தானோ...
புடிவாதம் நீ புடிச்சி போனதென்ன என் ராசா... ” கிழவியின் ஒப்பாரியும் கலங்க வைத்தது....
ஒய்யாரமாய் தோள்களில் பயணிக்க பெட்டி தயாரானது. மயானச்சங் கின் ஓலம் ஒன்பது
கிரகங்களையும் தாண்டி தவழ்ந்து கொண்டிருந்த நிசப்த நாடிகளை தடம்புரழ வைத்தது...
மாலை நான்கு மணியிருக்கும் பன் னீர்த்தூறல்களும், மல்லிகைமகரந் தங்களும் சொரிய
மெல்லிய வாசனையோடு பெட்டி முன்வாசலுக்கு நகர்ந்தது...
என் பங்கிற்கு என்னுடைய வலது தோளும் பெட்டியின் ஒரு மூலையினை சுமந்தது....
இரு துளி பன்னீர்த்துளிகள் என் கன்னங்களிலும் விழ மறுக்கவில்லை....
தெருவெல்லாம் ஏதோ இனம்புரியாத ஒரு சோகம் கவ்விக் குடிகொண்டு ஆர்பரிக்கலாயிற்று..
கேள்விகளால் வெறித்துப்போன என் கண்களும் என் மனைவியின் நிலை கண்டு
பதறித்துடித்த கால்களும் மரித்துப்போன உடலுடன் மயானத்தை அடைந்தது.
மயான மணலில் என் கால் விரல்கள் தீண்டப்பட்டதும் எனக்குள் ஏதோ இனம்புரியாத ஒரு
பயத்தின் மெல்லிய சாயல் ஆட்கொள்வதை மெதுவாக உணர்ந்தேன்....
நிலையற்ற ஒருவித படபடப்புடன் வெட்டப்பட்டிருந்த குழிக்கு அருகில் கால்களை நகர்த்த
வேண்டிய ஒரு துர்ப்;பாக் கிய நிலை எனக்கு....
“மாமா.. கால கொஞ்சம் அங்கால பக்கமா தூக் குங்க...”
“தம்பிமார்.. செத்த வெலகி நில்லுங்கப்பா... குழி இடிஞ்சிடும்....”
“பார்த்து கவனமா பெட்டிய தூக்கி வையிங்கோ...”
முணுமுணுப்புகள் உரக் க சம்பிரதாயங்களும் சடங்குகளும் இறந்தவருக்கும் இறைவனுக்கும்
குறையாயிடும் என்று குறையின்றி அரங்கேற்றம் பெற்றது...
நானும் கூட்டத்தில் ஒருவனாய் திக்குகளெல்லாம் கேள்விகள் கிளை பரப்பிய முகத்தை
வைத்து கூனிக்குறுகிக்கொண்டிருந் தேன்.......
மயானச்சங்கின் முழக்கம் வான்பிளக்க ஒரு ஜீவனின் உடல் பூமித்தாயின் வயிற்றுக்குள்
கருவுற தயாராகிவிட்டது..
மெலிதான மண்வாசனையோடும் மிதமிஞ்சிய பன்னீர் வாசனையோடும் பெட்டி குழிக்குள்
புதைந்து விடுகிறது.. என் மனதின் ஏதோ ஒரு இனம்புரியாத தடுமாற்றம், பூமியில் இவ்வளவு
காலம் ஆடிய பாதம் ஒரு நொடிக்குள் அடங்கிவிட் டதே.....
கூடி நின்றவர்களின் வேலை முடிந்து விட்டது.... மனிதனுக்கு பழகிப்போன ஒரு சாதாரண
சாவுதானே... முணுமுணுப் பும் சலசலப்புமாய் வீடு திரும்புகிறார்கள்...
ஆனாலும் எனக்கு என் மனதில் ஆட்கொண்டிருந்த பயம், கவலை மனித வாழ்வு
இவ்வளவுதானா?? உலக வாழ்வு அப்பொழுதுதான் ஒரு மாயை என்பதை அப்பட்டமாய்
உணர்த்திக்கொண்டிருந்தது...
ஆழ்ந்த யோசனைக்கு சென்றுவிட்டேன்... நடப்பவை அனைத்தும் ஒரு சூனியமாய் காட்சி
தருகிறது... புதைக்கப்பட்ட இடத்தையே வெருண்டு பார்த்துக்கொண்டிருந்தன என் விழிகள்....
திடீரென ஒரு புல்லரிப்பு... என் கைமணிக்கட்டில் மயிர் இழைகளைத்தாண்டி வானத்தில்
இருந்து ஒரு நீ ர்த்துளி என் நரம்புத்தொகுதியில் தூண்டலை ஏற்படுத்த என் நினைவுகள்
சற்றுத்தளர்ந்;தன...
என் கண்களால் அருகில் யாரும் இருப்பதாய் உணர முடியவில்லை....
“மழ வேற வரப்போகுது.. யாரும் போனது கூட தெரியாம நின்னுட்டன் பாரு...”
“அதக்குள்ள அவ்வளவு தூரம் போய்டாங்கப்பா... ஒரு வார்த்த பேசல...”
“மாமா.. கொஞ்சம் நில்லுங்க வாரன்...” மாமாவுக்கு நிச்சயமாக என்குரல் கேட்டிருக்கும்...
என் கால்களை நகர்த்தினேன். யாரோ என் கால்களை பிடித்திருக்கிறார்கள். நெஞ்சம்
படபடத்தது. உடல் புதைக்கப்பட்டு ஈரம் காயாத மணலில் என் கால்கள் புதைந்திருந்தன.
கால்கள் அசைய மறுக்கிறது. என் முழு வலிமையும் ஒட்டுமொத்த பலமும் பலமுறை
தோற்றுவிடுகிறது. பூமியில் புரண்டுவிழுகிறேன். முடியவில்லை... ம்ம்மா ஏலவே ஏலவில்லை...
“மாமா.... இங்க வாங்கோ....”
“யாராவது வாங்களேன்... எனக்கு நடக்க ஏலா...”
நிச்சயமாக கண்ணுக்கு எட்டிய தூரம்தான் ஆனால் பதில் தருவாரி; ல்லை. என் கூச்சல்
கூக்குரலாய் மாறி பயத்தின் உச்சத்தில் கர்ச்சித்தேன் பலனில்லை.
வானம் மேக மூட்டைகளை உடைத்தெறிந்தது. “சோ...” என்ற ஒரு கொரூர ஓசையுடன் என்
மேனியை மழை நனைத்தது. நானும் அழுகிறேன் மழையில் நனைந்து கொண்டு.
நாட்கள் வருடங்களாக வருடங்கள் தசாப்தங்களாக காலாகாலமாய் பலகோடி மழைத்துளிகள்
என்னை நனைத்து என் கண்ணீரோடு தோற்றுப்போய்விடுகின்றன.
என் மனைவி? என் பிள்ளை??? இவர்களின் நிலை என்ன????? ஐயோ....
இந்த சுடுகாட்டில் எத்தனையோ முகங்களை பார்க்கிறேன் இன்றுவரை என்னை மீட்க ஒரு
நாதி இல்லையே...
அன்று எழுந்த என் கேள்விகளுக்கு தசாப்தங்கள் பல கடந்தும் கேள்விக்குறிகளே பதிலாய்
என்னை தினம் தினம் வதைக்கிறது

எழுதியவர் : எம்.எப்.எம்.றிகாஸ் (26-Jul-15, 2:19 am)
சேர்த்தது : றிகாஸ்
பார்வை : 255

மேலே