சிறகுகளில் துவங்க வேண்டும் சில திருத்தங்கள்
ஒற்றை நெல்மணிக்காக
நொண்டியடிக்கும்
கூண்டுப் பறவையின் மனவெளி
சிதறிக் கிடக்கிறது
விரிந்து கிடக்கும் இருட்டறைகளில்.
அடர்த்தியாய் ஏதோ அழுத்துவதில்
அதன் சிறகுகளில் வெடிக்கிறது
உயிர் பிதுங்கும் அவஸ்தை.
சுயம் உறிஞ்சப்பட...
அதன் வெட்க அசூயையின்
வாய்க்காலில் நிரம்புகிறது
பகிர இயலாத ரகசியச் செய்கைகள்.
கசந்த அதன் மனத் தாழியில்
விரிசலாகிறது...
அதன் விழித்திரை.
வஞ்சனையின் ஆழத்தில்...
வானத்தில் பொருந்தாத நட்சத்திரமாய்
சிதறுகிறது அதன் பிம்பங்கள்.
காலடியில் நழுவும் வெளிச்சம்
நிழல்களைத் தின்றுவிட
சிலுவை மரமாகிறது உடல்.
ஆணிகள் நிரம்பிய அதன் வெளியில்
குருதியாய் நகர்கிறது ...
அதன் விதிரேகைகள்
தீர்ந்த கதைகளையெல்லாம்
வாசித்து விழுந்த
அதன் கண்ணீரிலிருந்துதான்
இனிப் புதிதாகத் துவங்கவேண்டும் ...
சே குவேராப் பறவையின்
கருமுட்டையில் துவங்கிய
சில திருத்தங்கள்.