தயக்கத்தில் நழுவும் காற்று
எனக்காகக் காத்திருக்கின்றன
தயக்கத்தில்..
கிளிஞ்சல்களுடன் பேசியபடி
நீ உலவிய கடற்கரைப் பொழுதுகள்.
காலடியில் நழுவிய
என் வருத்தங்களுக்கு
துயர இசைக் கோர்வை சேர்க்கலாம்
நம் காதல்.
கனத்த சொற்களின் கீழ்
வேதனை தாங்காது
தரையிறங்குகிறது
மேகம் நனைத்த கண்கள்.
உப்புக் கரிக்கும் கரையிலும்
பிரியத்தின் கோப்பைகளில்
மிதக்கிறது....
என் நீல நிறத்துக் காதல்.
உயிர்மை ததும்பும் குரலில்...
ஊடலைக் கூட்டியபடி அழைக்கிறேன்...
உன் இதழ்களில் தெறிக்கும்
குறிஞ்சிப் புன்னகையில்
குழந்தையாகிறேன்.
நம் சலனங்களின் சலிப்பில்...
ஒரு புத்தனாகி
என்னைக் கடக்கிறது உப்புக் காற்று.