அக்கினிச் சிறகுகள் உதிர்ந்த தென்ன
அக்கினிச் சிறகுகள் உதிர்ந்த தென்ன?
ஆசிய கண்டமே அதிர்ந்த தென்ன?
இந்திய ஏவுகணை நாயகன் எங்கே?
இந்தியத் தாயே ஏங்கினள் இங்கே…
கோடியிற் பிறந்த கோடியில் ஒருவர்
கோடியும் குமுறப் போனது எங்கே ?
கனவு காண கனிந்து சொன்னவர்
கனவு காணயார் கட்டளை யிட்டார்?
கனவு காணச் சொன்னவர் மறைந்ததை
கனவென நினைப்பினும் கனக்கும் இதயம்
காலமே காலமே கலாமையா வென்றாய்..?
கலாமே கால்மாறி காலமாய் நின்றார்…
விண்தொடும் புகழார் விண்ணைத் தொட்டார்..
எண்ணி எண்ணி இதயம் நொந்தோம்
கண்ணீர் துளிகளே வெந்நீர் துளிகளாய்
கன்னத்தைச் சுட்டன எண்ணத்தை தொட்டன..
உங்கள் வார்த்தையும்…உங்கள் வாழ்க்கையும்
எங்களை எழுப்பும் நெம்பு கோலாய்
மலர்கள் செய்யும் மலராஞ் சலியே
மக்கள் செய்வர் மவுனாஞ் சலியே
இதயம் செய்யும் இதயாஞ் சலியே
எழுத்துஞ் செய்யுங் கவிதாஞ் சலியே
எழுத்துஞ் செய்யுட் கவிதாஞ் சலியே
----------------------------------------------------------------------
கலாமே கால்மாறி காலமாய் நின்றார்
கலாம் என்பதில் கால் மாறி –துணை எழுத்து என்றும் பொருள் கொள்ளலாம் மூச்சு என்றும்
பொருள் கொள்ளலாம். கலாம் காலம் ஆனார்
கோடி -தென்கோடி
கோடி கோடி மக்கள்