கனவுகண்ட கண்களே
தள்ளாத வயதிலும் துள்ளிவந்த நடைஎங்கே!!
நில்லாத நற்பேச்சு சொல்லாமல் போனதெங்கே !!
கொள்ளை ஞானம் பிறப்பிலே பெற்றுவந்த
பிள்ளைமுகம் சிந்தும் புன்னகை தடமெங்கே !!
தினங்கள் கழிவதே வாழ்வென்போர் மத்தியிலே
கனவுகண்ட கண்கள் காணாமல் போனதெங்கே!!
கல்லாத பேதையர்கள் கல்லாக வாழ்ந்திருக்க
இல்லாத எதைவேண்டி கூற்றுவன் அழைதானோ
ஏழைஎன்று பாரோர்தம் ஏளன பார்வையால்
ஏவுகின்ற கணைதாக்கி புண்பட்டு நின்றவேளை
ஏவுகணை யால் தரித்திரம் துடைத்தவரை !!
மேவுமதி நுட்பத்தால் சரித்திரம் படைத்தவரை!!
சங்கம் மருவிய தென்னவர் திருநாட்டில்
வங்ககரை மண்ணுக்கு புகழ்சேர்க்க பிறந்தவரை
கற்றலில் தொடங்கும் வல்லமை என்றுரைத்து
அரியணை வாழ்வு போதுமென்று தள்ளிவைத்து
கற்பிக்கும் பணியிலே சுகம்கான வந்தவரை
சுற்றம் சூழநின்று சுரண்டுவோர் மத்தியிலே
சற்றும் கரைபடாது அரசியல் பிழைத்தவரை!!
மலரேந்தி நின்றிருந்த பாரதத்தாய் திருக்கரத்தில்
ஆயுதம் கொடுத்து அழகுபார்த்த திருமகனை!!
துறும்பென்று நினைத்து துண்டாட வந்தவரை
இரும்பான கரம்கொண்டு பந்தாட செய்தவரை!!
பஞ்சம் தவிர்க்க பாடுபட்ட பாரதத்தில்
கொஞ்சம் தோளுயர்த்தி சிந்தனையை மேடுயர்த்தி
வருங்கால பாதையிலே எதிர்வரும் நிலைகாட்டி
வருகின்ற தலைமுறைக்கு வாழ்த்துசொன்ன வழிகாட்டி!!
முன்னேற்றம் இதுவென்று வெள்ளோட்டம் காட்டிவைத்து
தன்வேலை முடிந்ததென்று வந்தஇடம் சென்றாரோ!!
கனவுகள் எங்களுக்கு வந்திடாத காரணமோ
கனவுகாண சொல்லிசொல்லி சளித்ததுதான் காரணமோ !!
மீளா துயிலில் ஆழ்ந்தது அறிவு !!
மீளா துயரில் வீழ்ந்தது தேசம்!!
கேளாயோ தென்றலே அவர்கண்ட கனவினை
மெய்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் எழுந்தோம்!!
அந்திமழை சாரலில் முந்திவரும் தென்றலே
சந்தமொடு பாட்டிசைத்து சென்றவரை தேடிவா!!
உன்னத மனிதன் உறங்க கூடும்
உணர்வில் கலந்து கனவிடை சென்று
இம்மொழி யாவும் அவரிடம் சொல்லி வா!!
lets quit vision 2020
Here mission 2020 begins!!!