கண்ணீரில் ஒரு கடிதம்

ஐயா கலாம் அவர்களுக்கு,

கனவுகள் காண கற்றுத்தந்து,
புது விடியலை வாழ்வில் புலரசெய்து,
சிறகுகள் விரித்து எங்களை,
சிகரத்தில் சேர்த்தவர் நீங்கள் ஐயா!

எங்கள் எண்ணங்களை விரிவாக்கி,
குறிக்கோள் அதனை தெளிவாக்கி,
முன்னேற்றத்தை நோக்கி செலுத்திடும்,
வில்லென உங்கள் வார்த்தைகள் ஐயா!

மழலை போல் உங்கள் பொன்சிரிப்பு,
மலராத முகங்களும் மலர்ந்துவிடும்!
கணையென உங்கள் கருத்துக்கள் அவை,
கற்றவர், கல்லதவரையும் கவர்ந்துவிடும்!

நீங்கள் எளிமையான வாழ்வை விரும்பியதாலோ,
உங்கள் எண்ணங்கள் எண்ணற்ற வளங்கள் கொண்டன?

நீங்கள் பணிவின் பொருளாய் விளங்கியதாலோ,
உங்கள் முன் இன்று மக்கள் யாவரும் பணிந்து நின்றன?

வானளவு கீர்த்தி எய்தபோதிலும் -உங்கள்
கால்கள் மண்ணில் நிலைபெற்று நிற்பதுபோல்,
உயர்ந்த மனிதனாய் ஐயா நீங்கள் - மக்கள்
உள்ளத்தில் என்றும் நிலைபெற்று வாழ்வீர்கள்!

அன்பு கொள்வதில் ஒரு அன்னையெனவும்,
ஆற்றல் செலுத்துதலில் ஒரு அறிஞரெனவும்,
அறிவை பகிர்தலில் ஒரு ஆசிரியரெனவும்,
அகிலம் செழித்திட நீங்கள் வாழ்வில்,
அவதாரங்கள் பல எடுத்தீர் ஐயா!

உங்களை,
"கடவுளாய் வாழ்ந்த மனிதன் என்பதா?"
"மனிதனாய் வாழ்ந்த கடவுள் என்பதா?"

பெருமிதம் கொள்கிறேன்,
நீங்கள் நேசித்த பாரத நாட்டில்,
நானும் ஒரு குடிமகள் என்று!
உறுதி மொழிகிறேன்,
நீங்கள் கண்ட கனவு பாரத்தை,
நிஜத்தில் உருவாக்கிட,
நிச்சையம் உழைப்பேன் என்று!

இப்படிக்கு,
உங்கள் அறிவொளியால் பார்வை பெற்ற
எண்ணற்ற பாமரருள் ஒருத்தி,
கண்ணீருடன் எழுதியது.

-கவிதா

எழுதியவர் : கவிதா சத்யா (30-Jul-15, 4:09 am)
சேர்த்தது : Kavitha Sathya
பார்வை : 162

மேலே